Friday, 30 May 2025

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா -1/06/2025

ஆண்டவரின் விண்ணேற்றம் - பெருவிழா 


திருப்பலி முன்னுரை 

உமது வார்த்தையே உண்மை. 

இறை இயேசுவில் பிரியமுள்ள இறைமக்களே! பாஸ்கா காலம் ஏழாம் ஞாயிறு வாரத்தில் கால் பதிக்கின்றோம். இன்று கிறிஸ்து இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழா ஆகும். இயேசுவின் அன்பு பெறுமதியானது, ஆழமானது, தனித்துவம் நிறைந்தது என இன்றைய மூன்று இறைவார்த்தைகளும்  சான்றுபகிர்கின்றன. இந்த உலகத்திலே, பலர் இறக்கின்றனர், பல குழந்தைகள் பிறக்கின்றன, பல தலைமுறை புதிதாக உருவாகின்றன, பல தலைமுறை இல்லாமலே போகின்றன. ஆனால், இயேசுவின் அன்பு இன்னும் இன்றும் மாறாமலே இருக்கின்றது. அவரது இரக்கம் பொங்கிவழியும் ஊற்றாக திகழ்கின்றது. அவரது அருள் எமக்கு நிறைவாகவே கிடைக்கின்றன. இயேசு இறந்து உயிர்த்தெழுந்து இன்று தனது தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். லூக்கா நற்செய்தியின் இறுதி அதிகாரத்தில் இறுதி நிகழ்வாக இதைப் பதிவிடும்போது, அவர் திருத்தூதர்பணிகள் நூலின் முதல் அதிகாரத்தில் மீண்டும் அதை திரு அவையின் புதிய வாழ்வுப் பணியாக ஆரம்புக்கின்றார். 

இவ் அழகிய பெருவிழாவில் எமது வாழ்வும் நம்பிக்கை நிறைந்த விழுமியங்களால் நிரப்பப்படவேண்டும். மாறுபட்ட எண்ணங்கள், விதண்டா வார்த்தைகள், பொறாமையோடு கூடிய பழிவாங்கல்கள், பிறர்வாழ்வை தடம்புறழ வைக்கும் சூழ்ச்சிகள், நம்மைச் சுற்றி அமைக்கும் குட்டி அதிகாரங்கள், அளவுக்குமீறிய ஆசைகள், பிறருக்காக ஏந்தாத கைகள், சுயநல செபங்கள் என எமது வாழ்வு இன்று முடக்கப்பட்டுவிட்டது. கடவுள் அன்பாய் இருக்கிறார், அந்த அன்பில் உறவு இருக்கின்றது என்பதை தனது சாவினால், உயிர்ப்பினால் இன்று தனது விண்ணேற்பினால் எண்பித்தவர் இயேசு. 

இன்று நாமும் இயேசுவின் அன்பை அவரது பாஸ்கா மறைபொருளில் காணவேண்டும். அவரது அழியா உணவாகிய உடலிலும் இரத்தத்திலும் காணவேண்டும். எம்மை சந்திக்கும் உறவுகளில் காணவேண்டும், இயற்கையை உவந்தளிக்கும் இவ்வுலகில் காணவேண்டும். எமது சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் செயல்கள் இயேசுவில் உயிர்த்தெழுந்து விண்ணகம் நோக்கிச் செல்லும் உறவை வளர்க்க முயற்சிப்போம். இச் சிந்தனைகளோடு தொடரும் இப்பலியில் கலந்துகொள்வோம்.


வருகைப் பல்லவி - திப 1:11 

கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயே சு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண் டீர்கள் அல்லவா? அவ் அவர் மீண்டும் வருவார், அல்லேலூயா.

"உன்னதங்களிலே சொல்லப்படும்.


திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, உம் திருமகன் கிறிஸ்துவின் விண்ணேற்றம் எங்களுக்கு ஒரு முன்னடையாளமாக இருக்கின்றது; தலையாகிய அவர் பெற்ற மாட்சிக்கே அவரது உடலாகிய நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம் எனும் எதிர்நோக்கை எங்களுக்குத் தருகின்றது; எனவே நாங்கள் உமக்கு அன்புடன் நன்றி கூறிப் புனிதமான மகிழ்ச்சியுடன் அக்களிக்கச் செய்வீராக. உம்மோடு.


அல்லது

எல்லாம் வல்ல இறைவா, இந்நாளில் உம் ஒரே திருமகனும் எம் மீட்பருமான கிறிஸ்து விண்ணகத்துக்கு ஏறிச் சென்றதை நம்புகின்றோம்; அதனால் நாங்கள் இப்பொழுதே மனத்தளவில் விண்ணகத்தில் வாழ்ந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


முதல் இறைவாக்கு

எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார்.

அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள் எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்” என்று கூறினார்.

பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்” என்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b)

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

அல்லது: அல்லேலூயா.


1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;

ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.

2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;

உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. -பல்லவி


5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்;

எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.

6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;

பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். -பல்லவி


7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்;

அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.

8 கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்;

அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்து விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28; 10: 19-23

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப் பட்டார். மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும்பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும்பொருட்டே தோன்றுவார்.

சகோதரர் சகோதரிகளே, இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச் சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்திற்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி. மேலும் கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குரு ஒருவர் நமக்கு உண்டு. ஆதலால், தீய மனச்சான்றிலிருந்து விடுவிக்கப்பட்ட உள்ளமும் தூய நீரில் கழுவப்பட்ட உடலும் உடையவர்களாய், நேரிய உள்ளத்தோடும் மிகு உறுதியான நம்பிக்கையோடும் அவரை அணுகிச் செல்வோமாக. நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 28: 19.20

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

இயேசு சீடர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 46-53

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம், “மெசியா துன்புற்று இறந்து மூன்றாம்

நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ‘பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள். இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும் வரை இந்நகரத்திலேயே இருங்கள்” என்றார்

பின்பு இயேசு பெத்தானியாவரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார். அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார். அவர்கள் அவரை வணங்கிவிட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கோவிலில் எப்போதும் கடவுளைப் போற்றியவாறு இருந்தார்கள்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


"நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு. நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். உயிர்த்து விண்ணகம் சென்ற இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கை தரும் இவ்வார்த்தைகளில் எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.  


1. எமது தாய் திரு அவைக்காக மன்றாடுவோம். அன்பின் இறைவா! நீர் அழைத்தவர்களை தேர்ந்தெடுத்து, உமது பணிக்காக இவ்வுலகிற்கு அனுப்புகின்றீர். உம்மை எதிர்ப்பவர்கள் மத்தியில், உம்மைவிட்டு தவறி போகின்றவர்கள் மத்தியில், பொய்யான விழுமியங்கள், போதனைகள் மத்தியில், உம்மை ஒளியாக தாங்கிக்கொண்டு, உப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் உமது அருளை அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. உலக சமாதானத்திற்காக மன்றாடுவோம்;. வழிநடத்தும் இறைவா! உலகின் பல்வேறு கோணங்களிலே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களால் பாதிக்கப்பட்டு, இறந்துகொண்டிருக்கும் எமது உறவுகள், தமது நீதியையும், சுதந்திரத்தையும், உரிமையையும் இழந்துவிடாமல் காத்திட, அருள்புரிய வேண்டுமென்று ...

3. இப்போர்களிலே, பசி, வறுமை, கைவிடப்பட்ட நிலை, நோய், என பல்வேறு புறக்காரணிகளால் அவதியுறும் எம் உறவுகள், பல்வேறு உதவும் கரங்களால் காக்கப்படவும், எவ்வித இடையூறும் இன்றி உம்மை தொடர்ந்தும் பற்றிக்கொண்டு வாழ அருள்புரியவேண்டுமென்று ... 

4. இறை அழைத்தலுக்காக மன்றாடுவோம்.  அழைத்தலின் ஆண்டவரே, உம்மிலே அதீத நம்பிக்கைகொண்டு, இவ்வுலகின் வாழ்வுக்காக, அதன் புனிதத்துவத்திற்காக, அதன் உயர்ச்சிக்காக முன்வரும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதியும். தமது சுயநலனை அன்று பிறருக்காகவே வாழ்ந்து சான்றுபகரும் வல்லமையை அளித்திடவேண்டுமென்று ...

5. எமது உறவுகளுக்காக மன்றாடுவோம். எமது பங்கிலே நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், மன உழைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இயலாமையில் தவிப்பவர்கள் என அனைத்து உறவுகளையும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். இறைவா குணப்படுத்தும் வல்லமையால் இவர்களை ஆற்றியருளும், தமக்கு முன் தெரியும் அனைத்து தடைகளையும் ஏற்றுக்கொண்டு வாழும் ஆற்றலை அளித்திட வேண்டுமென்று ....


குரு: அன்பின் ஆண்டவரே, நீரே ஏமது உறைவிடம், நீரே எமது அடைக்கலம் என உம்மையே நாம் நாடி வந்திருக்கின்றோம். உம்மிடம் நாம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து தேவைகளையும் ஏற்று நிறைவுசெய்வீராக. எங்கள்.   


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உம் திருமகனின் வணக்கத்துக்கு உரிய விண்ணேற்றத்தை முன்னிட்டு நாங்கள் தாழ்மையுடன் இக்காணிக்கைகளை உம் திருமுன் கொண்டு வருகின்றோம்; இவ்வாறு இப்புனிதமிக்க பரிமாற்றத்தினால் நாங்களும் விண்ணகத்துக்கு உரியவற்றையே நாட அருள்புரிவாராக. எங்கள்.


தொடக்கவுரை: விண்ணேற்றத்தின் மறைநிகழ்வு.

இசையில்லாப் பாடம்: விண்ணேற்றத்தின் தொடக்கவுரை


மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


ஏ னெ னில் ஆண்டவராகிய இயேசு மாட் சி யின் மன்னர்,

பாவத்தின்மீதும் சாவின்மீதும் வெற்றி கொண்டவர்.

வானதூதர் வியப்புற (இன்று) வானங்களின் உச்சிக்கு ஏ றிச் சென்றார்.

கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும்

உலகுக்குத் தீர்ப்பிடுகின்றவரும் ஆற்றல்மிகு அணிகளின் ஆண்டவரும் அவரே.


இவ்வாறு அவர் சென்றது எங் கள் தாழ்நிலையிலிருந்து விலகிச் செல்வதற்காக அன்று;

மாறாக, எங்கள் தலைவரும் மு தல் வருமாகிய அவர் முன் சென்றஅவ்விடத்துக்கு

அவர்தம் உறுப்பினர்களாகிய நாங்களும் அவரைப் பின்தொடர்வோம்

எனும் நம் பிக் கையைத் த ரு வதற்காகவே.


ஆகவே பாஸ்கா மகிழ்ச்சி பொங்க அனைத்துலகின் மாந்தர் அனைவரும்

அக்களிக்கின்றனர்; அவ்வாறே ஆற்றல் மிக்கோரும் அதிகாரம்

கொண்ட தூதர்களும், உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி

முடிவின் றிச் சொல் வ தாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி - மத் 28:20 

இதோ! உலக முடி வுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், அல்லேலூயா.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, இவ்வுலகில் இருக்கும் நாங்கள் விண்ணக மறைநிகழ்வுகளைக் கொண்டாட அருளுகின்றீர்; எங்கள் இயல்பு உம்மோடு இணைக்கப்பட்டுள்ள இடத்துக்கே எமது கிறிஸ்தவ பற்றன்பு எம்மை இட்டுச்செல்ல அருள்வீராக. எங்கள்:


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...