Thursday, 20 March 2025

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு வாரம் - 23/03/2025

 தவக்காலம் மூன்றாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை 

“நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார்.

அருளின் காலமாம் இத் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு வாரத்தினுள் நுழையும் என் அன்பு இறை மக்களே! எம் கரங்கள் பிடித்து அழைத்துச் சென்று, புதிய வாழ்வுப் பாதையில் வழிநடத்தும் இயேசுவோடு இன்று பயணிக்க கூடிவந்திருக்கின்றோம். இக்காலம் எம் இதயத்தை மாற்ற அழைப்பதோடன்றி, எமது அளுமையை பற்றிச் சிந்திக்கவும், எமது சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தும் பல உலகின் தத்துவங்களைப் / காரணிகளைப் பற்றி சிந்திக்கவும், எமது உறவுநிலையின் ஆழம் அகலம் பற்றிச் சிந்திக்கவும்,  இவை அனைத்தும் எம்மில் செலுத்தும் தாக்கத்தைப் பற்றி சிந்திக்கவும் இன்றைய நாளும் இக்காலமும் எம்மை அழைத்து நிற்கின்றன. 

இன்றைய முதல் இறைவார்த்தையில், கடவுளின் பெயர் முதன் முதலாக கொடுக்கபடுகின்றது. ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்பதன் அர்த்தம் அவர் தொடக்கமும் முடிவும் அற்றவர், எங்கும் எப்பொழுதும் இருப்பவர், அவருக்கு என்றும் அழிவே இராது. நற்செய்தியிலே, கனிகொடாத மரங்களை எல்லாம் வெட்டிவிட வேண்டும் என மனம் மாறாதோரைக் குறித்து இயேசும் சொல்லும் வார்த்தை தெளிவாக அமைகின்றது. 

நாம் கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளும் எமக்கு கொடுக்கப்படும் அருளின் கொடையே. எத்தனைகோடி மக்கள் பிறந்து, வாழ்ந்து இறந்து போனாலும், இன்று இவ்வுலகம் எனக்கு சொந்தமானது, இன்றைய நாள் எனக்கு சொந்தமானது. எம்மைக் கடந்து செல்பவர்கள் எமக்கு விட்டுச் செல்லும் செய்தி என்னவெனில், நாம் சிறந்தவர்கள், இறைவனுக்குரியவர்கள், அவருக்கு சொந்தமானவர்கள். எனவே, நாம் கிறிஸ்துவை நாளும் வாழும் விருப்பங்கொள்வோம். இறைவார்த்தையை தியானிப்பதில், ஆன்மாவை தூய்மைப்படுத்தி அழகு காண்பதில் ஆர்வங்கொள்வோம். நாம் நுழையும் இப்புதிய வாரம் எமக்கு ஆசீரை நிறைவாக தரவேண்டி தொடரும் பலியில் இணைந்துகொள்வோம்.  

வருகைப் பல்லவி - காண். திபா 24:15-16 

என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன, ஏனெனில் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார். என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும். ஏனெனில் நான் ஆதரவற்றவன்; ஏழை.

அல்லது 

காண். எசே 36:23-26 

நான் உங்களில் என் தூய்மையை நிலை நாட்டும்போது பல நாடுகளிலிருந்து உங்களைக் கூட்டிச் சேர்ப்பேன். நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன். உங்கள் எல்லாக் குற்றங்களிலிருந்தும் நீங்கள் தூய்மையாவீர்கள். புதிய ஆவியை உங்களுக்குக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.

"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, இரக்கப் பெருக்கத்துக்கும் முழுமையான நன்மைக்கும் காரணரே, பாவிகளின் உண்ணா நோன்புகள், இறைவேண்டல்கள், இரக்கச் செயல்கள் ஆகியவற்றின் வழியாக எங்களுக்குப் பாவ மன்னிப்பை வழங்குகின்றீர்; எங்களது தாழ்ச்சிமிக்க பாவ அறிக்கையைக் கனிவுடன் கண்ணோக்கி மனச்சான்றினால் நொறுங்குண்ட எங்கள் உள்ளங்களை உமது இரக்கத்தால் என்றும் உயர்த்துவீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

‘இருக்கின்றவராக இருக்கின்றவர்’ என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 3: 1-8a,13-15

அந்நாள்களில்

மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலைநிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக்கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. “ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்” என்று மோசே கூறிக்கொண்டார்.

அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். ‘மோசே, மோசே’ என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் “இதோ நான்” என்றார். அவர், “இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்” என்றார். மேலும் அவர், “உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே” என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.

அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்கு அவர்களை நடத்திச் செல்லவும் இறங்கி வந்துள்ளேன்.

மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, ‘இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே’ என்றார்.

மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார். கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் - ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் - என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்’ என்று சொல். இதுவே என்றென்றும் என் பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!”

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 103: 1-2. 3-4. 6-7. 8,11 (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!

2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி


3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;

உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.

4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;

அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி


6 ஆண்டவரின் செயல்கள் நீதியானவை;

ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.

7 அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்;

அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார். -பல்லவி


8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;

நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

11 அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவு போன்று உயர்ந்தது. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

மோசேயோடு மக்கள் பாலைநிலத்தில் நடத்திய வாழ்க்கை நமக்கு அறிவுபுகட்டும் படிப்பினையாக எழுதப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 1-6,10-12

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்ட னர். அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அவர்கள் தீயனவற்றில் ஆசை கொண்டு இருந்தது போல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன. அவர்களுள் சிலர் முணு முணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது.

அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக் காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளட்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வசனம் மத் 4: 17

‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது,’ என்கிறார் ஆண்டவர்.


நற்செய்தி இறைவாக்கு

மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-9

அக்காலத்தில்

சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, “இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்” என்றார்.

மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

குரு: எமது வாழ்வு ஒரு புதிய பாதையிலும், புனித பாதையிலும் பயணிக்கின்றது. இப்பயணத்திலே இயேசுவின் உடனிருப்பு எம்மோடு இருக்கின்றது. எனவே, எமது தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. நிறை அருளின் ஊற்றே இறைவா! எமது திரு அவையின் வாழ்வுக்காகவும் அதன் ஆன்மிக வளர்ச்சிக்காகவும் உழைக்கும் அனைத்து பணியாளர்களும் இயேசுவின் தூய மனநிலை கொண்டுவாழவும், அவரையே முழுமையாக பின்பற்றி உலகெங்கும் அறிக்கையிடுகின்ற கருவிகளாக திகழ்ந்திட வரமருளவேண்டுமென்று ...  

அல்லது 

நிறை அருளின் ஊற்றே இறைவா! எமது திரு அவையை உமது அன்பிலும் பாதுகாப்பிலும் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். இதோ பேதுறு, இப்பாறையின் மேல் எனது திரு அவையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா என மொழிந்த இறைவா! இவ்வுலகின் பாவத்தில் இருந்தும் கறைபடிந்த மாசுகளில் இருந்தும் காக்கவென உழைக்கும் அனைவருக்கும் இறைவனின் ஆசீரும், ஞானமும், அவர் வழிநடத்துதலும் என்றும் இருக்க அருள்புரிய வேண்டுமென்று, ...


2. நிறை அருளின் ஊற்றே இறைவா!  சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்வாலும், தியாகத்தாலும், உழைப்பாலும் தங்கள் உணர்வுகளாலும் சான்றுபகரும் அனைவரும் இத்தவக்காலம் கற்றுத்தரும் அனைத்து போதனைகளுக்கும் கிறிஸ்துவின் சிலுவை தரும் அனைத்தும் படிப்பினைகளுக்கும் பிரமாணிக்கமாய் இருந்து செயற்பட அருள்புரிய வேண்டுமென்று ...  


3. நிறை அருளின் ஊற்றே இறைவா!  இன்றைய சமகால அரசியல் பொருளாதார வாழ்வோடு பயணிக்கும் எமக்கு, கொடுக்கப்படும் கேள்விகளும் பதில்களும் அர்த்தமற்ற நிலைகளையும், பொருத்தமற்ற சூழலையும், எதிர்மறை விமர்சனங்களையும் எம்மேல் திணிக்கின்ற விவாதங்களையுமே எமக்கு தரும்வேளை, நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் தேடிச் செல்லவும், வாழ்வில் இயேசுவை விட்டு பிரிந்திடா வரமருள வேண்டுமென்று ... 


4. நிறை அருளின் ஊற்றே இறைவா!  எமது சமுகத்திலே காணப்படும் பிரிந்துபோன குடும்பங்கள், நொந்துபோன மற்றும் உடைந்துபோன உறவுகள், விரக்தியின் விளிம்பில் வெளிவரமுடியாமல் முடங்கிப் போனவர்கள் என அனைவரையும் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். மனித உள்ளங்களை அறியும் இறைவன்,  நம்பிக்கையை வெளிச்சத்தை தந்து, வாழ்வின் பாதைகளை தெளிவாக அமைத்து என்றும் முன்னோக்கிச் செல்ல அருள்புரியவேண்டுமென்று ... 


5. நிறை அருளின் ஊற்றே இறைவா! எமது பங்கின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உழைத்து மரித்துப்போன அனைத்து பொதுநிலைப் பணியாளர்களையும் உம்மிடம் ஒப்புக்கொடுக்கின்றோம். இவர்கள் கற்றுத்தரும் நல் விழுமியங்களை கருத்துடன் பின்பற்றவும், இவர்கள் விட்டுச்சென்ற தியகத்தையும் அர்ப்பணத்தையும் வழ்வில் கொண்டுவாழ அருள்புரிய வேண்டுமென்று, ...


6. நிறை அருளின் ஊற்றே இறைவா! இத்தவக்காலத்தில் நாம் பல புண்னியங்களை செய்யவும், பிறருக்கான உதவிகளைச் செய்யும் விருப்பங்களையும் எம்மில் தூண்டியருளும். கொடுப்பதால் பலர் வாழ்வுபெறுவர் என்ப்தை தாரகமந்திரமாகக் கொண்டு வாழ்வுக்கான ஒளியை அவர்களில் காட்ட எமக்கு அருள்புரிந்தருள வேண்டுமென்று, ... 


குரு: எம்மை எல்லாம் அன்பு செய்யும் இறைவா! உமது துணை இன்றி நாம் வாழ முடியாது, உமது வழிநடத்துதல் இன்றி நாம் இயங்கமுடியாது. உமது பாதம் நம்பிக்கையோடு நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து, உமது அருளைப் பொழிவீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிகளால் மன நிறைவு அடைந்து எங்களுக்கு அருள்புரிவீராக; எங்கள் குற்றங்களிலிருந்து எங்களை மன்னிக்க வேண்டுகின்ற நாங்க பிறருடைய குற்றங்களை மன்னிக்க முயல்வோமாக. எங்கள்.


தொடக்கவுரை: சமாரியப் பெண்.

மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.

பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.

பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.


ஆண்டவரே, தூயவரான தந்தையே,

என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,

எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,

எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது

மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;

எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.


தமக்குத் தண்ணீர் தருமாறு சமாரியப் பெண்ணிடம் கேட்ட நேரத்திலேயே

கிறிஸ்து அப்பெண்ணுக்கு நம்பிக்கை எனும் கொடையை வழங்கினார்.

அவ்வாறு அப்பெண்ணின் நம்பிக்கையின் மீது பெரிதும் ஆர்வம் கொண்டதால்

அவரில் இறையன்பின் நெருப்பைப் பற்றியெரியச் செய்தார்.


ஆகவே நாங்களும் உமக்கு நன்றி செலுத்தி

உமது வல்லமையை வானதூதர்களோடு

புகழ்ந்து ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.


திருவிருந்துப் பல்லவி :

சமாரியப் பெண்ணைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது: 

காண். யோவா 4:13-14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிப்பவர் நிலைவாழ்வு அடைய அவருக்குள் பொங்கும் நீரூற்று எழும், என்கிறார் ஆண்டவர்.

அல்லது வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது:

காண். திபா 83:4-5 படைகளின் ஆண்டவரே, என் அரசரே, என் கடவுளே உம் பீடங்களில் அடைக்கலான் குருவி தனக்கு வீடும் சிட்டுக் குருவி தன் குஞ்சுகளை வைக்கக் கூடும் கண்டுள்ளன. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, விண்ணகத்தில் உள்ள மறைபொருள்களின் அச்சாரத்தையும் இவ்வுலகில் ஏற்கெனவே விண்ணக உணவால் வளமையையும் பெற்றுள்ள நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் மறைபொருளாக எங்களில் திகழ்வது செயலளவிலும் நிறைவு பெறுவதாக. எங்கள்.

மக்கள்மீது மன்றாட்டு 

ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் இதயங்களை ஆண்டருள உம்மை வேண்டுகின்றோம்: உம் ஊழியர்களுக்குக் கனிவுடன் இந்த அருளை வழங்குவதால் உம் அன்பிலும் பிறரன்பிலும் நிலைத்திருந்து அவர்கள் உம் கட்டளைகளை முழுமையாக நிறைவேற்றுவார்களாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...