தவக்காலம் இரண்டாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். ஏனெனில் என் நெஞ்சே! நீ ஆண்டவருக்காகக் காத்திரு.
இறை அருளின் காலமாகிய இத்தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரத்தில் இணைந்து கல்வாரிப்பலியின் பலியில் கலந்து சிறப்பிக்க கூடிவந்திருக்கும் என் அன்பு உறவுகளே! இப்புதிய நாளுக்காகவும், இப்புதிய வாரத்திற்காகவும் நன்றிசொல்லி நுழைகின்றோம்.
இன்றைய முதல் இறைவார்த்தையில், ஆபிரகாமிற்கான இறைவனின் வாக்கு நிலையானதாக, பிரமாணிக்கம் நிறைந்ததாக அமைவதை காண்கின்றோம். இறைவனால் அழைக்கப்பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரின் வாக்கப்பெற்று, இறை பணியினை நிறைவேற்ற ஆபிரகாம் முன்வந்ததுபோல, நாமும் இறைவனால் அழைக்கப்பெற்றுள்ளோம், அவரின் தேர்வினால் பணியினையும் பெற்றுள்ளோம் என்பதை இவ் இறைவார்த்தை நினைவூட்டுகின்றது. கிறிஸ்து எமக்காக மரித்தார் என்றால் அவரின் சிலுவை எமக்கு ஓர் அருளின் சின்னமே என்பதை இரண்டாம் இறைவாக்கு நினைவூட்டுகின்றது. நற்செய்தியில், இயேசுவின் உருமாற்ற நிகழ்வு தரப்படுகின்றது.
எமக்கு கொடுக்கப்படும் இத் தவக்காலம் இயேசுவின் பாடுகளோடும் அவர் மரணத்தோடும் இணைந்து சிந்திக்க அழைக்கின்றது. இறைவனால் படைக்கப்பட்ட அனைவரையும் அவர் அன்புசெய்கின்றார்; தனது மகன் வழியாக எம்மை பாவ அடிமைத் தழையில் இருந்து மீட்கின்றார்; அனுதினமும் எமக்கான அருளை சிலுவையில் சிந்திய தனது இரத்தத்தின் வழியாக எமக்கு அருளுகின்றார். இதற்காகவே எம்மை வழிநடத்தும் இவ் அருளின் காலமாகிய தவக்காலத்தின் ஊடாக எம்மையும் இணைத்து, அக்காலம் கற்றுத்தரும் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி நடக்க அருள்வரம் கேட்போம். எமது அனைத்து ஒறுத்தல், தவ முயற்சிகள் நிறை பயனை தரவும், எமது புதிய தவக்கால தீர்மானங்கள் அனைத்தும் எமது ஆன்மாவை இன்னும் அழகுபடுத்தவேண்டுமென்றும் தொடரும் இக் கல்வாரிப் பலியில் இணைந்து மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
காண். திபா 26:8-9 வருகைப் பல்லவி என் இதயம் உம்மிடம் கூறியது: உமது முகத்தைத் தேடினேன்; ஆண்டவரே, உமது முகத்தை முகத்தைப் பார்க்க விரும்பினேன்; அண்ட என்னிடமிருந்து திருப்பிக் கொள்ளாதேயும்.
அல்லது காண். திபா 24:6,2,22
ஆண்டவரே, என்றென்றுமுள்ள உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினை ந்தருளும்; எ ங் கள் பகைவர்கள் எ ங் களை ஒருபோதும் அடக்கி ஆள விடாதேயும். இஸ்ரயேலின் கடவுளே, எங்களுடைய இடுக்கண் அனைத்தினின்றும் எங்களை விடுவித்தருளும்.
"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.
திருக்குழும மன்றாட்டு :
இறைவா, உம் அன்புத் திருமகனுக்கு நாங்கள் செவிசாய்க்க எங்களுக்குக் கட்டளையிட்டு உமது வார்த்தையினால் எங்கள் உள்ளத்துக்கு ஊட்டம் அளிக்கத் திருவுளம் கொண்டீரே; அகவொளியால் நாங்கள் தூய்மையாக்கப்பட்டு உமது மாட்சியைக் கண்டு மகிழ்வோமாக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
கடவுள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்தார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 5-12, 17-18, 21b
அந்நாள்களில்
ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப் பார். இவற்றைப் போலவே உன் வழி மரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
ஆண்டவர் ஆபிராமிடம், “இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே” என்றார். அதற்கு ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்துகொள்வேன்?” என்றார். ஆண்டவர் ஆபிராமிடம், “மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா” என்றார். ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டு வந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார்.
கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது.
கதிரவன் மறைந்ததும் இருள் படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்துகொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.
அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 27: 1. 7-8. 9abc. 13-14 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு;
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி
7 ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்;
என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும்.
8 ‘புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்;
ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். -பல்லவி
9abc உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;
நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்;
நீரே எனக்குத் துணை;
என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும். -பல்லவி
13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;
மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்;
ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 17-4:1
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப்பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே.
நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.
ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
கிறிஸ்து நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றுவார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 20-4:1
நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்.
ஆகவே என் அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, என் வாஞ்சைக்கு உரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை; அன்பர்களே, ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம் - மாற் 9: 7
ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.”
நற்செய்தி இறைவாக்கு
அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியது.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 28b-36
அக்காலத்தில்
இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.
அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள்.
அந்த மேகத்தினின்று, “இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
இறைமக்கள் மன்றாட்டு
1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: நவின உலகிலே பயணிக்கும் எமது திரு அவை சந்திக்கும் சாவாலான நுகர்வுக் கலாசாரத்திற்குள்ளே அகப்பட்டுவிடாமல், அறிவும், ஞானமும் மட்டுமல்ல அதனோடு கூடிய ஆன்மிக அனுபவமும், விவேகமும் திரு நிலையினரின் வாழ்வின் அணிகலன்களாக இருக்கத் தேவையான அருளை அளித்திட வேண்டுமென்று,...
அல்லது:
அன்பின் இறைவா! உமது தூய திரு அவையை வழிநடத்தியருளும். குறிப்பாக நோய்வாய்ப்பட்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலம் சிறக்கவும், நீர் அவருக்காக வைத்திருக்கும் அனைத்து திட்டங்களிலும் அவர் முழுமனதுடனே செயற்படவும் அவருக்கு வேண்டிய அருளையும் ஆசீரயையும் அளித்திட வேண்டுமென்று, ...
2. எமக்காக மன்றாடுவோம்: கூட்டொருங்கியக்கத் திரு அவையாக பயணிக்கும் இவ் ஜுபிலி ஆண்டில் எம்மை ஆயத்தம்செய்வோம். தூய ஆவியின் வழிநடத்தலில் திருக் குடும்ப உணர்வோடு, புதிய வழிகாட்டலில், புதிய நெறிப்படுத்தலில், புதிய சமுகமாக பயணிக்கத் தேவையான அருளை அளித்திட வேண்டுமென்று,...
3. அன்பின் இறைவா! இத்தவக்காலத்திலே உமது குரலைக் கேட்கவும், உமது பாதையில் வழிநடக்கவுமென தம்மை ஒறுத்து, தியாகம் செய்யும் அனைத்து உள்ளங்களையும் ஆசீர்வதியும். இவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்து தங்கள் தியாகத்தில் சோர்வடையாமலும், புண்ணிய வாழ்வில் தளைத்திடாமலும், செபத்தில் இவ்வுலகிற்கான தேவைகளை அறியும் மனதை அளித்திட வேண்டுமென்று, ...
அல்லது:
தவ, ஒறுத்தல் முயற்சிகளாலும் செபத்தாலும் தம்மை இறைவனுடன் ஒன்றினைத்து வாழும் அனைவருக்காகாவும் மன்றாடுவோம். இவர்கள் தமது அர்ப்பணத்தால் இவ்வுலகிற்காக வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எமது பங்கின் பிள்ளைகளுக்காக மன்றாடுவோம்: சத்தங்கள் நிறைந்த வேகமான உலகிலே, பொய்யான போக்கிலே சேர்ந்து பயணிக்கும் இக்காலத்திலே, குடும்ப உருவாக்கம் பெற்று மிளிரும் நல்ல தலைமுறை உருவாகவும், தமது வாழ்க்கையிலே எது சரி, எது பிழை என்பதை தெளிவாகக் கண்டுணரும் பாக்கியம் பெற அருள்புரிய வேண்டுமென்று,...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, இப்பலிப்பொருள் எங்கள் பாவங்களைக் கழுவிப்போக்க உம்மை வேண்டுகின்றோம்: பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்கு, உம்மீது நம்பிக்கை கொண்டோரின் உடல்களையும் மனங்களையும் அது புனிதப்படுத்துவதாக. எங்கள்.
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
கிறிஸ்து தமது சாவைச் சீடர்களுக்கு முன்னறிவித்து,
புனித மலையில் தமது பேரொளியை வெளிப்படுத்தினார்.
அதனால் சட்டமும் இறைவாக்குகளும் சான்று பகர்ந்தவாறு
தம் பாடுகள் வழியாகவே உயிர்ப்பின் மாட்சிக்குத் தாம் வந்து சேர வேண்டும் என்பதை அவர் விளங்கச் செய்தார்.
ஆகவே ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து
நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி,
முடிவின்றி ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.
திருவிருந்துப் பல்லவி : மத் 17:5
என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே, இவ்வுலகில் வாழும் நாங்கள் ஏற்கெனவே விண்ணுலக வாழ்வில் பங்குபெற அருள்கூர்ந்தீர்; மாட்சிக்கு உரிய மறைநிகழ்வுகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உமக்குச் செலுத்தும் நிறை நன்றியை ஏற்றுக்கொள்வீராக. எங்கள்.
மக்கள்மீது மன்றாட்டு
ஆண்டவரே, உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளோரை முடிவில்லா ஆசியால் புனிதப்படுத்தி உம் ஒரே திருமகனின் நற்செய்தியைக் கடைப்பிடிக்கச் செய்தருளும்; அதனால் அவர் தம் திருத்தூதர்களுக்குத் தம்மில் வெளிப்படுத்திய அந்த மாட்சிமீது அவர்கள் என்றும் ஆர்வம் கொள்ளவும் அதை மகிழ்வோடு வந்தடையவும் தகுதி பெறுவார்களாக, எங்கள்.
அருட் தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments
Post a Comment