Tuesday, 26 November 2024

திருவருகைக் கால முதல் ஞாயிறு 01/12/2024

 திருவருகைக் கால முதல் ஞாயிறு



திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! 

இன்று நாம் திருவருகைக் காலத்தை ஆரம்பிக்கின்றோம். திரு அவையின் திரு வழிபாட்டுக் காலத்தின் தொடக்கமாகவும் இது அமைகின்றது. இறைமகன் கிறிஸ்து ஒரே ஒருமுறை இவ்வுலகிலே பிறந்தார். அந்த மானிட பிறப்பை நினைவுகூரவும், அவர் வருகைக்காக எம்மை தகுதியான முறையில் ஆயத்தம் செய்யவும் இந்த நான்கு வாரங்களும் எமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, திருவருகைக் காலத்தின் முதல் வாரத்தில் பயணிக்கும் எமக்கு, விழிப்பாய் இருந்து செபிக்கவும், அவர் தரும் மீட்பை சுவைக்கவும் ஓர் உள்ளார்ந்த திருப்பயணத்திற்கான அழைப்பாக இது அமைகின்றது. 

ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்தேறும் காலங்கள் போன்று இத்திருவருகைக் காலம் அமைந்துவிடக் கூடாது. இறைமகனை அதாவது இவ்வுலகின் மீட்பரை வரவேற்க நாமும் தயார் நிலையில் இருக்கவேண்டும். நாம் மட்டும் அல்ல, இவ்வுலகத்தையும்  இயேசுவின் வருகைகாக ஆயத்தம் செய்ய எம்மால் முடியும். 

இவ்வுலகிலே நம்பிக்கை இழந்து, வாழ்விழந்து, பசியிலும், வறுமையிலும், யுத்தத்தின் கொடூர வலைக்குள்ளும் சிக்குண்டு வாழும் பலருக்கு எனது செபம் ஓர் ஆறுதலாக அமையலாம்! உறவுகள் பிழவுபட்டு, உள்ளங்கள் நொந்துண்டு, கண்கள் இருந்தும் பார்வையற்றவர்களாய் வாழும் பலரின் வாழ்வுக்கு, எனது ஒவ்வொரு முயற்சியும் திருவருகைக் காலமே! எமக்குள் சிக்கிக் கிடக்கும் பிழையான எண்ணங்கள், பிழையான உறவுகள், பிழையான தீர்மானங்கள் அனைத்திற்கு இக்காலம் ஒரு தீர்வாக அமையலாம்! பணத்தினால் அல்ல, மாறாக குடும்ப பிணைப்பினாலும், எம்மால் உருவாக்ககூடிய மகிழ்ச்சியினாலும் தான் கிறிஸ்துவை மீண்டும் பிறக்கச் செய்யமுடியும் எனும் நம்பிக்கையை தரும் காலமாகவும் இதை மாற்றுவோம். 

எனவே, எமக்கு கிடைக்கப்பெற்ற இத் திருவருகைக் காலத்திற்காய் நன்றி சொல்லி, அதன் அர்த்தத்தையும் நோக்கத்தையும் மெய்ப்பிப்போம். இக்காலம் இன்னும் அதிகமான வரங்களையும் அருளையும் எமக்கு தரவேண்டி தொடரும் இக்கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம். 

வருகைப் பல்லவி

காண். திபா 24:1-3 என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார்.

"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.

திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு மன உறுதியை அளித்தருளும்; அதனால் வரவிருக்கும் உம் கிறிஸ்துவை அவர்கள் நீதிச் செயல்களுடன் எதிர்கொள்ளவும் அவரது வலப் பக்கத்தில் சேர்க்கப்பட்டு விண்ணக அரசைப் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


முதல் இறைவாக்கு

தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33: 14-16

இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

அந்நாள்களில் - அக்காலத்தில் - நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். ‘யாவே சித்கேனூ’ - அதாவது ‘ஆண்டவரே நமது நீதி’ - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.


4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்;

உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.

5ab உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்;

ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். - பல்லவி


8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்;

ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.

9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;

எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி


10 ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு,

அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.

14 ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்;

அவர் அவர்களுக்குத் தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார். - பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கிறிஸ்துவின் வருகைக்கென்று ஆண்டவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12-4: 2

சகோதரர் சகோதரிகளே,

உங்கள்மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு, அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!

சகோதரர் சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக்கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக்கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.

† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28,34-36

அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள்மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."

மேலும் இயேசு, "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும், அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகெங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும், மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.


இறைமக்கள் மன்றாட்டு

1. வல்லமையின் இறைவா! எமது திரு அவையை ஆசீர்வதியும். நம்பிக்கையிலும், அன்பிலும், தியாகத்திலும் கட்டப்பட்ட இத்திரு அவை, தனது புனிதத்திலும், திர்ருவருட்சாதன அருளிலும் பயணிக்கவும், இதன் உயர்ச்சிக்காக உழைக்கும் அனைவரிலும் உமது அருளும் வல்லமையும் நிறைவாக கிடைக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

2. வல்லமையின் இறைவா! எமது மறைமாவட்ட ஆயர், பங்குத்தந்தை, குருக்கள் மற்றும் துறவிகள், அனைவரும் உமது தூய ஆவியின் துணையால், நம்பிக்கையின் திருப்பயணிகளாகிய எம்மை வழிநடத்த தேவையான அருளை பொழிந்திட வேண்டுமென்று, ...

3. வல்லமையின் இறைவா! இத் திருவருகைக் காலத்தில், ஒன்றிணைந்த திரு அவையாக, சமத்துவம் நிறைந்த திரு அவையாக, செபிக்கு திரு அவையாக, மேலும் உறவின் திரு அவையாக நாம் வாழவும் எமது வாழ்வின் வழி, ஒரு புதிய பாதை அமைத்து கிறிஸ்துவின் வருகையில் மகிழ்ந்திட அருள்புரிந்தருள வேண்டும்மென்று, ...

4. வல்லமையின் இறைவா! இவ்வுலகிலே தீமைகளை ஏற்படுத்துவோர், பகைமைக்கான பாதையை உருவாக்குவோர், மனிதத்தை நசுக்கி, மானத்தை விற்று வாழ்வோர், யுத்தங்களால் உயிர்களை கொன்று தீர்ப்போர் என அனைவரும் தங்களை மாற்றவேண்டி மன்றாடுவோம். இதனால், பாவிகளின் மாற்றங்கள் இயேசுவின் வருகையில் பெருமதியாய் அமைய வரமருள வேண்டுமென்று, ...

5. வல்லமையின் இறைவா! காலநிலை மாற்றங்களால் அவதியுறும் எமது மக்கள் தமது நடைமுறை வாழ்வுக்குத் திரும்புவார்களாக. பிள்ளைகளின் கல்வி மக்களின் பொருளாதார வாழ்வு அனைத்தும் சீர்பெறவும், உதவும் கரங்கள் உயரவும் அருள்புரிய வேண்டும்மென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


திருவிருந்துப் பல்லவி :

திபா 84:13 ஆண்டவர் இரக்கம் அருள்வார்; நமது நிலமும் தனது பலனைத் தரும்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவை மீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


சிறப்பு ஆசி உரைகள்

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவன்,

தம் ஒரே மகனின் வருகையில் நம்பிக்கைகொண்டு

அவரது மறு வருகையை எதிர்பார்த்திருக்கும் உங்களை

அவரது வருகையின் ஒளியால் புனிதப்படுத்தித்

தமது ஆசியால் வளப்படுத்துவாராக.

பதில்: ஆமென்.

இம்மை வாழ்வில் உங்களுக்கு நம்பிக்கையில் உறுதியையும்

எதிர்நோக்கில் மகிழ்ச்சியையும் அன்பில் செயல்திறனையும் அவர் அளிப்பாராக.

பதில்: ஆமென்.

என் மீட்பர் மனிதராகி நம்மிடம் வந்ததால் அகமகிழும் நீங்கள்

அவர் மீண்டும் தமது மாட்சியில் வரும்போது

நிலைவாழ்வின் கொடைகளால் வளம் பெறுவீர்களாக.

பதில்: ஆமென்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன், தூய ஆவியாரின் ஆசி உங்கள் மீது இறங்கி, உங்களோடு என்றும் தங்குவதாக.

பதில்: ஆமென்.


அருட் தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி


Thursday, 21 November 2024

பொதுக்காலம் முப்பத்து நான்காம் ஞாயிறு வாரம் - நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா - 24/11/2024

 பொதுக்காலம் முப்பத்து நான்காம் ஞாயிறு வாரம் - நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா



திருப்பலி முன்னுரை 

இன்று கத்தோலிக்க திரு அவை, அனைத்துலகுக்கும் அரசராம் நம் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் பெருவிழாவை மகிழ்வுடன் கொண்டாடுகின்றாள். பொதுக்காலம் நிறைவடையும் இவ்வாரத்திலே கிறிஸ்துவை அனைத்துலக அரசராக கொண்டாட விரும்புகின்றாள். பதினொராம் பத்தினாதர் 1925ம் ஆண்டு, மார்கழி பதினொன்று அன்று வெளியிட்ட குவாஸ் பிறிமாஸ் (Quas primas எனும் சுற்றுமடலின் வழியாக, இவ்வுலகில் காணப்பட்ட இறை நம்பிக்கை அற்ற நிலையின் காரணமாகவும், மதப் பற்று அற்ற நிலை காரணமாகவும் இயேசுவை உலகம் முழுமையாக நம்பும்படி இப்பெருவிழாவை அறிமுகம் செய்தார். 

இயேசுவை இவ்வுலகு அரசராக கொண்டாடவேண்டும், ஏனெனில், அவரது ஆட்சி நிலையானது, உண்மையானது, பாவத்திற்கு இடங்கொடாதது, சம நிலைத் தீர்பு அளிக்க வல்லது, பிரிவினைகள் பாராபட்சம், பாகுபாடு காட்டாதது. இவரது அரசு எளிமையானது, அனைவரையும் அரவணைக்கக் கூடியது. உலகிற்காக உயிரை கொடுப்பதுவே தலைவனின் சிறந்த பண்பும் பணியுமாகின்றது. இன்றைய தொடக்கவுரையிலே, 'நீர் உம்முடைய ஒரே பேறான திருமகன் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை  அமைதியை வழங்கும் மாசற்ற பலிப்பொருளாகச் சிலுவைப் பீடத்தில் தம்மையே அவர் ஒப்புக்கொடுத்து மனிதருக்கு மீட்பு அளிக்கும் அருளடையாளங்களை நிறுவினார். அவரது ஆட்சி, உண்மையும் வாழ்வும் ஒங்கும் ஆட்சி;  புனிதமும் அருளும் நிறைந்த ஆட்சி; அன்பும் அமைதியும் நிலவும் ஆட்சியும் ஆகும்.' என்று கிறிஸ்து இயேசுவின் மாபெரும் மான்புமிகு பணியை குறித்துக் காட்டுகின்றது. எம்மையும் தனது சுவீகார பிள்ளைகளாக மாற்ற தனது இரத்தத்தால் எங்களை கழுவினார். இன்று, இயேசுவின் ஆட்சி போன்று எமது குடும்பமும், சமூகமும் எமது நாடும் மிளிர மன்றாடுவோம். உண்மைக்கு சான்றுபகிரும் சமூகம் உருவாக மன்றாடுவோம், உறவினை கட்டியெழுப்பும் சமூகம் உருவாகிட மன்றாடுவோம். 

உலகெங்கும் சென்று இயேசுவின் நற்செய்தி பரப்பிட, எமைப் பயன்படுத்தும் இறைவனுக்கு நன்றி கூறி, தொடரும் பலியில் பங்கெடுப்போம். 

வருகைப் பல்லவி
காண். திபா 84:9 சும் மக்களுக்கும் தம் பற்று மிகு அடியாருக்கும் அவரிடம் மனம் திரும்புவோருக்கும் ஆண்டவர் நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.

திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே, உம் நம்பிக்கையாளரின் விருப்பங்களைத் தூண்டியெழுப்ப உம்மை வேண்டுகின்றோம்: அதனால் அவர்கள் புனிதச் செயலின் பயனை மிகுந்த ஆர்வத்துடன் நாடி உமது பரிவிரக்கத்தின் பேருதவிகளைப் பெற்றுக்கொள்ளச் செய்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

மானிட மகனின் ஆட்சியுரிமை என்றும் உள்ளதாகும்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 7: 13-14

அந்நாள்களில்

இரவில் நான் கண்ட காட்சியாவது: வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்குக் கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றும் உளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 93: 1a-உ. 1de-2. 5 (பல்லவி: 1ab)

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.


1a-உ ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;

அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்;

ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். -பல்லவி


1de பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.

2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது;

நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். -பல்லவி


5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை;

ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் நம்மைக் குருக்களாக ஏற்படுத்தினார்.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8

கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.

இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!

“அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மாற் 11: 10

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

அரசன் என்று நீர் சொல்கிறீர்.

† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 33-37

அக்காலத்தில்

பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.

இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப் பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார்.

அதற்குப் பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும்தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?”என்று கேட்டான்.

இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார்.

பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு 

குரு: ஆதாம், விண்ணகம் செல்வதற்கான தடுத்து வைத்த வழியை இயேசு தனது மரணம் உயிர்ப்பு வழியாக திறந்து வைத்தார். பாவிகளுக்கு மீட்பை பெற்றுக் கொடுத்தார். அவரது அரச ஆட்சி உரிமை பெற்றுத்தந்த இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழவும் அவரது அருளையும் ஆசீரையும் பெறவும் அவரிடம் மன்றாடுவோம்: 

1. கருணையின் இறைவா! நீர் எமக்கு தந்த திரு அவைக்காக நன்றி கூறுகின்றோம். அதிலே தம்மை தியாகம்செய்து பணியாற்றுகின்ற அனைத்து நிருநிலைப்பணியாளர்கள், பொது நிலைப் பணியாளர்கள் அனைவரையும் உமது ஆசீராலும் அரவணைப்பாலும் வழிநடத்த வேண்டிய அருளைப் பெழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. இறந்த ஆன்மாக்களை நினைந்து அவர்களுக்கக செபிக்கும் இந்த மாதத்திலே, எம் பங்கிலே, எமது குடும்பங்களிலே இருந்து இறந்துபோன குருக்கள், துறவிகள், பெற்றோர்கள், உறவுகள், நண்பர்கள் அனைவருக்காகவும் மன்றாடுவோம். திருமுழுக்கினால் அழைக்கப்பெற்று, இயேசுவின் திரு விருந்தினால் ஊட்டம் பெற்று இம்மண்ணுலக வாழ்வுக்கு அர்த்தம் சொன்னவர்கள், விண்ணகத்திலும் இறைவனது பேரின்ப மாட்சி காண வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. 'அனைத்தும் அவர் வழியாய் அவருக்காக படைக்கப்பட்டன' என்று புனித பவுல் கூறுவதைப்போல் இறைவன் அழைப்பை ஏற்று வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரை அரசராக ஏற்று அவர் படைப்பிலே மகிழ்ந்து, அதை பொறுப்புடன் விருத்தி செய்யவும், அதைக் கரம் கொடுத்து பாதுகக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எமது நாட்டின் தலைவர்கள் தங்களது பொறுப்புமிக்க பணியை ஆழ உணர்ந்தவர்களாய், மக்களின் பொது நலனுக்காய் தங்களை அர்ப்பணிக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5. உம்மை அரசராக ஏற்றுக்கொண்ட அனைவரும் தமது திருமுழுக்கால், கிறிஸ்துவின் குருத்துவத்தால், இறைவாக்கு பணியால், நற்செய்திக்கு சான்று பகிரவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பின் ஆண்டவரே! உமது மரணத்தால் மீட்பை கொண்டுவந்து, பாவிகள் மனந்திரும்பவும், ஒடுக்கப்பட்டோர் விடுதலை பெறவும் அருள்கூர்ந்தீரே. உமது உயிர்ப்பினால் எமது அழியக்கூடிய உடலுக்கு மகிமையை தந்து அழியா ஆன்மாவின் தூய்மையை காக்க சித்தம் கொண்டீரே. உம்மை அரசராக ஏற்றுக்கொள்ளும் எமக்கு இந்த வரங்களை எல்லாம் நிறைவாய் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்கு ஒப்புக்கொடுக்குமாறு நீர் அளித்த புனிதக் கொடைகளை ஏற்றுக்கொள்ளும்; இவற்றின் வழியாக நாங்கள் உமது பரிவிரக்கத்துக்கு ஏற்றவர்களாகி உம் கட்டளைகளுக்கு என்றும் கீழ்ப்படிந்து வாழச் செய்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

திபா 116:1-2 மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழுங் கள். ஏனெனில் நம்மீது அவரது இரக்கம் நிலையாய் உள்ளது.

அல்லது

மத் 28:20 இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

எல்லாம் வல்ல இறைவா, இப்புனித விருந்தில் நாங்கள் பங்குபெற்று மகிழச் செய்கின்றீர்; அதனால் நாங்கள் உம்மிடமிருந்து ஒருபோதும் பிரியாதிருக்க அருள்புரிவீராக. எங்கள்.


அருட் தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Wednesday, 13 November 2024

பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு வாரம் - 17-11-2024

 பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் ஞாயிறு வாரம்



திருப்பலி முன்னுரை 

இறை இயேசுவின் கல்வாரிப் பலிக்கு ஒன்றின் மக்களாக குழுமிவந்துள்ள என் அன்பு இறைமக்களே! பொதுக்காலம் முப்பது மூன்றாம் ஞாயிறு வாரம் எமக்கு புதிய வலிமையையும், புதிய தைரியத்தையும் தருகின்றது. இக் கல்வாரிப் பலியில் இணைந்து, அணைத்தையும் வாரி வழங்கும் இறைவனுக்கு நன்றி கூறுவோம், அவர் கல்வாரி அனுபவத்தை சொந்தமாக்குவோம், அவரின் பாதை சென்று அவ் அன்பை பிறரோடு பகிர்ந்துகொள்வோம். 

மானிட மகனின் வருகை பற்றியும் அதற்காக எம்மை தயார்படுத்தவும் இன்றைய வாசகங்கள் எமக்கு அறைகூவலிடுகின்றன. மாற்கு நற்செய்தியின் இவ் எச்சரிக்கை தரும் வார்த்தைகள் எமக்குள் ஏற்படுத்தும் வியப்பைக் குறித்து நாம் அஞ்சவேண்டியதில்லை. மாறாக எமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்கவும், தகுந்த முறையில் எமக்கான ஆயத்தங்களை செய்யவும், எம்மை தயார்நிலையில் வைத்திருக்கவுமே இவ்வார்த்தைகள் எமக்கு கொடுக்கப்படுகின்றன. நாம் காத்திருக்கும் இவ்வருகை குறித்து நாமும் கருத்தோடு சிந்திக்கவும் எமக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றன. "விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா" எனும் இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை உள்ளத்தில் பதித்தவர்களாக அவை வாழ்வு தரும் உயிர் ஊற்றாக எம்மில் மலர வரம்வேண்டுவோம்.

இன்றைய திருப்பலியிலே நாம் பல்வேறு விண்ணப்பங்களோடு வந்திருந்தாலும், இவ்வுலகின் தேவைகளில் சற்று கவனத்தை திருப்பி, துன்பப்படும் மக்களுக்காக, பட்டினியில் வாடும் மக்களுக்காக, உலகத்தின் ஒவ்வொரு கோணத்திலும் நடைபெறும் யுத்தங்கள் நிறைவுக்கு வரவேண்டுமென்றும், இயற்கை அனர்த்தங்களால் நாளும் துன்பப்படும் மக்களுக்காகவும் மன்றாட இன்று நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இவ்வுலகத்திலே அனைத்து மக்களும் இறைவனின் பிள்ளைகளே! அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களையும் எமது உறவுகளாக இணைத்து, அவர்களின் நல்வாழ்வுக்காகவும் செபிக்க கடமைப்பட்டுள்ளோம். அத்தோடு எமது திரு அவை முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளிலும், நாமும் ஆர்வமுள்ளவர்களாகவும், அத் திரு அவையின் வாழ்வுக்காக உழைப்பவர்களாகவும் திகழ வரம்வேண்டுவோம். 

நாம் அனைவரும் சேர்ந்து ஒப்புக்கொடுக்கும் இவ் உன்னதப்பலியில் இணைந்து, நாம் கேட்ட அனைத்து விண்ணப்பங்களையும் இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து இறை அருள் வேண்டி இப் பலிதனிலே கலந்திட்டுவோம். 


வருகைப் பல்லவி  எரே 29:11-12,14 

ஆண்டவர் கூறுகிறார்: நான் துன்பங்களின் எண்ணங்களை அல்ல, அமைதியின் எண்ணங்களை எண்ணுகிறேன். நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். எல்லா இடங்களினின்றும் உங்களது அடிமைத்தனத்திலிருந்து உங்களை மீண்டும் அழைத்து வருவேன்.


திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே எங்கள் இறைவா, உம்மீது நாங்கள் கொண்டுள்ள பற்றன்பில் எப்பொழுதும் மகிழ்ந்திருக்கச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: ஏனெனில் அனைத்து நன்மைகளுக்கும் ஊற்றாகிய உமக்கு நாங்கள் என்றும் பணி புரிவதால் முடிவில்லா, முழுமையான மகிழ்வைப் பெற்றுக்கொள்வோமாக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

உன் இனத்தார் விடுவிக்கப்படுவர்.

இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 12: 1-3

“அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ, அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.

இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர்.

ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 16: 5,8. 9-10. 11 (பல்லவி: 1)

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்;

எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;

8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;

அவர் என் வலப் பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். -பல்லவி


9 என் இதயம் அக்களிக்கின்றது;

என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;

என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்க மாட்டீர்;

உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். -பல்லவி


11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;

உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு;

உமது வலப் பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவர் ஆக்கினார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 11-14,18

சகோதரர் சகோதரிகளே

ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார்.

தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். எனவே பாவ மன்னிப்புக் கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமே இல்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 21: 36

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கு எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள். அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்கு

நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-32

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: அந்நாள்களில் வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டு விடும்; நிலா ஒளி கொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.

அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

அத்திமரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக் காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.

இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.

ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது; விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

இறைமக்கள் மன்றாட்டு

1. புனித திரு அவைக்காக மன்றாடுவோம்: 

இறைவா! நீர் தந்த இந்த திரு அவையை பாதுகாரும். தீமைகள் அனைத்திலும் இருந்தும், போலி பேதகங்களில் இருந்தும் வழிநடத்தும். தேவ அழைத்தலை தாரும், அதன் புனிதத்தை வளர்த்திட உழைக்கும் அனைவரையும் காத்திட வரமருள வேண்டுமென்று, ...

2. இந்நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுவோம்:

இறைவா! நீர் கொடுத்த இந்த அழகிய திரு நாட்டிற்காக நன்றி சொல்கின்றோம். பல்-சமய உறவுகளையும், பல்-மொழி உணர்வுகளையும்  மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி அபிவிருத்தியிலும் எம் நாட்டை முதன்மைப்படுத்த  நீர் எமக்கு தந்த தலைவர்களுக்காக நன்றி கூறுகின்றோம். இவர்களை வாழிநடத்தும், ஆற்றலைக் கொடும், விவேகத்தினால் நாட்டின் தீர்மானங்களை பகுப்பாய்வுசெய்து அதன் உயர்ச்சியில் பங்களிக்க அருள்புரிய வேண்டுமென்று, ...

3. எமது குடும்பங்களில் இறந்துபோனவர்களுக்காக மன்றாடுவோம்: 

இறைவா! நீர் எமக்கு தந்த அனைத்து உறவுகள், நண்பர்கள், சொந்தங்கள், நன்கொடையாளிகள், குருக்கள், துறவிகள் அனைவருக்காகவும் நன்றி சொல்கின்றோம். இவர்களில் சிலர் இன்று எம்முடன் இல்லை. இவர்களின் வாழ்வுக்காக, வார்த்தைகளுக்காக, நல்ல செயல்களுக்காக, புரிந்துகொண்ட உயரிய உறவுக்காக, செய்த கொடைகளுக்காக நன்றி சொல்லி, இவர்களின் ஆன்மாவை ஏற்று, வான்வீட்டில் இடமளித்திட வேண்டுமென்று, ...

4. யுத்தங்கள் நிறைவுற மன்றாடுவோம்: 

இறைவா! நாடுகளுக்கு நாடு நடைபெறும் யுத்தங்கள் நிறைவுறவேண்டி உருக்கமாக மன்றாடுகின்றோம். அதிகாரமும், ஆட்சியும், வல்லமையும், ஆற்றலும் நீர் ஒருவரே என்பதை இவர்கள்  புரிந்துகொள்வார்களாக. இதன் விளைவாக பாதிப்புறும் குடும்பங்கள், பிள்ளைகளின் கல்வி, எதிர்கால சுபிட்சம் அனைத்தையும் இந்நாட்டு தலைவர்கள் விளங்கிக்கொள்வார்களாக. அமைதியும், மகிழ்ச்சியும், சமத்துவமும் மிக விரைவில் கனிகளாக மலர்ந்திட அருள்புரியவேண்டுமென்று, ...

5. புதிய எதிர்காலத்தை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்:

இறைவா! பணமோக்கத்தாலும், வியாபார மோகத்தாலும், போதைவஸ்தாலும், சினிமாவாலும் சிதைவுறும் எமது இளைஞர்களின் எதிர்காலத்தை ஒப்புக்கொடுக்கின்றோம். நல்ல விழுமியங்களை எம் மனங்களில் விதைத்திடும் புதிய முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டு, கல்வியிலும், உயரிய துறைகளிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்த அருள்புரிய வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மாண்புக்கு உரிய உமது திருமுன் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கை இறைப்பற்றின் அருளையும் நிலையான பேரின்பத்தையும் எங்களுக்குப் பெற்றுத்தருவதாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி   திபா 72:28

கடவுளின் அண்மையே எனக்கு நலம். ஆண்டவராகிய கடவுளிடம் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்.


அல்லது   மாற் 11:23-24

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் எவற்றையெல்லாம் கேட்பீர்களோ, அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். கேட்டபடியே உங்களுக்கு நடக்கும், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உம் தூய மறைநிகழ்வுகளின் கொடைகளைப் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் தமது நினைவாக நாங்கள் செய்யுமாறு உம் திருமகன் கட்டளையிட்டவை எங்களை அன்பின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்வனவாக. எங்கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, 

Friday, 8 November 2024

பொதுக்காலம் முப்பத்திரண்டாம் ஞாயிறு வாரம் - 10/11/2024


 

பொதுக்காலம் முப்பத்திரண்டாம் ஞாயிறு வாரம்

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் பிரியமான இறை உறவுகளே! இன்று பொதுக்காலம் முப்பத்து இரண்டாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். எமது சர்வ சாதாரண மற்றும் நாளாந்த வாழ்விலே ஆண்டவருக்கு, 'நன்றி' எனும் வார்த்தையைக் கூறி அனைத்தையும் உள்ளடக்கிவிட முடியாது. எமது நன்றியின் செயல், திருப்பலியின் நன்றியின் செயலாகிய அப்பத்தை உடைத்துக் கொடுப்பதிலும், இரசத்தை பகிர்ந்தளிப்பதிலுமே நிறைவேறுகின்றது. ஆகவே, எமது வாழ்வை நன்றியின் பலியாக ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

இன்று நாம் சந்திக்கும் இறைவார்த்தைகள் ஆழமானதே. அரசர்கள் முதலாம் நூலிலே, இறைவனின் கைமாறு பெற்ற கைம்பெண்ணின் வாழ்வியல் அனுபவம் காட்டப்படுகின்றது. இறைவனின் வல்லசெயல்கள் எமது நாளாந்த வாழ்க்கை அனுபவத்தோடு பயணிக்கின்றது, அது தொடர்ந்தும் பிரதிபலிக்கின்றது. இதை நாம் எச்சந்தர்ப்பத்திலும், எவ்வேளையிலும் தவறவிடக்கூடாது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலே, "கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்" எனும் ஆழமன இறையியல் உண்மை சித்தரிக்கப்படுகின்றது.  கிறிஸ்து இவ்வுலகிற்கு வருவதன் முதன்மை நோக்கமும் அதன் நிறைவும் எமக்கு கொடுக்கப்பட்ட உன்னத வரங்களே. மாற்கு நற்செய்தி இறைவாக்கானது இரண்டு வகையான சவால்களை முன்வைக்கின்றது: அதாவது, வாழ்க்கையில் உயர்திருப்போர் என கருதி அனைத்தையும் சுயநலனுக்கான நிறைவேற்றுபவர்கள் போல் நாம் இருக்கக்கூடாது என்றும், கைம்பெண்ணின் காணிக்கைபோல் ஒரு முழுமையான அர்ப்பணத்தில் நாம் நிலைத்திருக்கவேண்டும் என்பதையும் காட்டி நிற்கின்றது. 

ஆகவே, இன்றைய நாளிலே, இறைவன் தரும் இவ்வார்த்தைக்காக நாம் நன்றி சொல்லுவோம். நாம் ஒவ்வொரு நாளும் உடைந்துபோனாலும் உயிரோட்டம் அளிக்கும் இறைவார்த்தை எமக்கு எப்பொழுதும் வாழ்வின் விளக்கே. எனவே, எமது பலம், பலவீனம், வெற்றி தோல்வி, நம்பிக்கை, அறியாமை மத்தியில் இறைவனை பற்றிக்கொண்டு வாழ கற்றுக்கொள்வோம். நாம் கற்றுக்கொள்ளும் விழுமியங்கள், இயேசுவின் இலக்கை மெய்ப்பிப்பதாக. எம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சுற்றியிருக்கும் மனிதர்கள் மத்தியில் இயேசுவை முன்கொணர்வோம். எமக்காக இயேசுவின் ஒவ்வொரு அசைவும் அதிசயங்களாகிட மன்றாடுவோம். 

குறிப்பாக எமது நாட்டிற்காகவும் அதன் அழகிய எதிர்காலத்திற்காகவும் மன்றாடுவோம். எமக்கு முன் நடைபெறும் நன்மைத்தனங்களில் நாமும் பொறுப்புள்ள குடிமக்களாக மாறவேண்டிக்கொள்வோம். தீமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாமும் கரங்கொடுத்து இந்நாட்டிற்காக உழைத்திடும் நல்மக்களாக மாறிட வரங்கேட்போம், இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 

வருகைப் பல்லவி

காண். திபா 87:3 ஆண்டவரே, என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, எங்களுக்கு எதிரானவற்றை எல்லாம் கனிவுடன் அகற்றியருளும்; அதனால் உள்ளத்திலும் உடலிலும் எழுகின்ற தடைகளை நீக்கி உவப்புடன் உமக்கு ஊழியம் புரிவோமாக. உம்மோடு.

முதல் இறைவாக்க்கு

எலியா சொன்னபடியே கைம்பெண் செய்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 10-16

அந்நாள்களில்

எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்தபொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, “ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா” என்றார். அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, “எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?” என்றார்.

அவர், “வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை; பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன்பின் சாகத்தான் வேண்டும்” என்றார்.

எலியா அவரிடம், “அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள்.

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது” என்று சொன்னார்.

அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 146: 7. 8-9a. 9bc-10 (பல்லவி: 1)

பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு.

அல்லது: அல்லேலூயா.


7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்;

பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்;

சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். -பல்லவி


8 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்;

தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;

நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.

9a ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். -பல்லவி


9bc அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;

ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.

10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். -பல்லவி


 இரண்டாம் இறைவாக்க்கு

பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 24-28

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து, மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். தலைமைக் குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருப்பார் என்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்க வேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார்.

மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கென உள்ள நியதி. அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரே முறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒரு முறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.


 நற்செய்தி இறைவாக்க்கு

இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-44

அக்காலத்தில்

இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது, “மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாக இருப்பவர்கள் இவர்களே” என்று கூறினார்.

இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.

அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 


அல்லது குறுகிய வாசகம்


இந்த ஏழைக் கைம்பெண், எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 41-44

அக்காலத்தில்

இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்து கொண்டு மக்கள் அதில் செப்புக் காசு போடுவதை உற்று நோக்கிக்கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார்.

அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, “இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும்விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி 

இறைமக்கள் மன்றாட்டு 

1. எமது திரு அவை தாம் தாங்கிச்செல்லும் புனிதத்திலும், அர்ப்பணத்திலும் நிறைவுகாண அருள்புரிய வேண்டுமென்று, ...

2. எமது திருத்தந்தை முன்னோக்கிச் செல்லும் பாதையை இறைவன் ஆசீர்வதிக்கவும், தூய ஆவியின் வல்லமை கொண்டு, இத்திரு அவையை தாங்கிச்செல்ல வேண்டுமென்று, ...

3. எமது பங்கில் நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நிறைவளிக்கவும், அதன் வளர்ச்சிப்படிகளில் அயராது உழைக்கும் அனைவரும் இத்திரு அவையின் நம்பிக்கை வாழ்வை அழகுபடுத்த வேஎண்டுமென்று, ...

4. எமது நாட்டின் புதிய பயணத்திற்காக தம்மை அர்ப்ப்பணிக்கும் அரசியல் தலைவர்கள் அதன் பெறுமதியை உணர்ந்து உழைக்கவும், ஊழல் அற்ற, பொய்மை அற்ற, ஆயுத கலாசாரமற்ற நாட்டை உருவாக்கும் புதிய பொறிமுறையை உணரவேண்டும்மென்று, ...

5. எமது பங்கிலே பொதுப்பணியாற்றும் ஆசிரியர்கள், வைத்தியர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு ஊழியர்கள், அரச பணியாளர்கள் என அனைவரும் இறைமாட்சிக்காக உழைக்கவும், புதிய சமுகம் படைக்கும் பணியில் தம்மை அர்ப்பணிக்கவும் வேண்டுமென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலிப்பொருள்களை இரக்கமுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம் திருமகனுடைய பாடுகளின் மறைநிகழ்வைக் கொண்டாடும் நாங்கள் பற்றன்புடன் அதில் பங்குகொள்வோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 22:1-2 ஆண்டவர் என்னை ஆள்கின்றார்; எனக்கேதும் குறை இல்லை; பசும்புல் வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்தார். அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் சென்றார்.

அல்லது

லூக் 24:35 அவர் அப்பத்தைப் பிடுகையில், சீடர்கள் ஆண்டவர் இயேசுவைக் கண்டுணர்ந்து கொண்டார்கள்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது புனித கொடையால் ஊட்டம் பெற்ற நாங்கள் கனிவுடன் உம்மை மன்றாடி நன்றி கூறுகின்றோம்; இவ்வாறு உம் ஆவியாரின் பொழிவால் நாங்கள் விண்ணக ஆற்றல் பெற்று உண்மையான அருள்வாழ்வில் நிலைத்து நிற்கச் செய்வீராக. எங் கள்.


அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Saturday, 2 November 2024

பொதுக்காலம் முப்பத்தொராம் ஞாயிறு வாரம் - 03/11/2024



பொதுக்காலம் முப்பத்தொராம் ஞாயிறு வாரம்

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவின் என் அன்புக்கினிய இறைமக்களே! 

பொதுக்காலம் முப்பத்தொராம் ஞாயிறு வாரத்தில் பயணிக்கின்றோம். இறை அருளும் வல்லமையும் எம்மை புடைசூழ்ந்து எமது வழியை செம்மைப்படுத்தி எமது வாழ்வுக்கான வரங்களை பெற்றுத்தர இருக்கின்றது. இதற்காக விசேட விதமாக இப்பலியிலே நன்றிசொல்லி மன்றாடுவோம். 

"உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக!" எனும் உன்னத கட்டளையின் முழுமையை இயேசு இன்று எமக்கு தருகின்றார். கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கு வழங்கிய மிக உன்னத சட்டமாக இதை உயர்த்தி நிற்பதை இணைச்சட்ட நூல் காட்டிநிற்கின்றது. இயேசு இச்சட்டங்களைக் கொடுத்து, இதுவே உயர்ந்த கட்டளை என தெளிவுபடுத்துவது, அச்சட்டங்களின் மகத்துவத்தையும், பழைய ஏற்பாட்டின் தொடர்பினை எடுத்தியம்புவதையும் காணலாம். 

கடவுள் இவ்வுலகை படைத்ததில் இருந்து, தன்னைப் போல் மனிதனைப் படைத்து, அவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அரச குருத்துவ திருக்கூட்டமாக அர்ச்சித்து, அவர்களை பாவநிலையில் இருந்து மீட்டெடுக்க தனது மகனை உயிர்ப்பலியாக ஈந்தது வரை அனைத்துமே 'அன்பு' எனும் அழகிய மொழியாக உரைக்கப்பட்டு, உணர்வாக பகிரப்பட்டு, இதயத்தில் வரையப்பட்டது. இது வரலாறு அல்ல, இது எமக்கு கிடைக்கப்பெற்ற வாழ்வு. இவ்வுண்மையை இன்றைய இறைவார்த்தைகள் மெய்ப்படுத்துவதைக் காணலாம். 

ஆகவே, கிறிஸ்து இறைவனுக்காக நாம் எமது வாழ்நாள் எல்லாம் நன்றியோடு வாழுவோம். எம்மை நாள்தோறும் உருவாக்கும் அவரின் தூய ஆவிக்காக நன்றி சொல்லுவோம். எம்மை குருத்துவ மக்களாக தேர்ந்தெடுத்து அவரின் அருளை நாளும் நாம் அனுபவிப்பதற்காக இப்பலியில் நன்றிசொல்லுவோம்.

விசேடவிதமாக, எமக்கு முன் வாழ்ந்துசென்று இவ்வுலகின் பல நிலைகளில் உயர்ந்தே காட்டிச் சென்ற எமது முன்னோர்கள் அனைவரையும் நினைந்து அவர்களுக்காகவும் அவர்களது ஆன்ம ஈடேற்றத்திற்காகவும் செபிக்க இம்மாதம் எமக்கு அழைப்புவிடுக்கின்றது. எனவே, எமது குடும்பங்களில், எமது கிராமங்களில், உறவுகளாக, நண்பர்களாக வாழ்ந்து மரித்த அனைவரையும் நினைத்து அவர்களுக்காகவும் இப் பலியில் மன்றாடுவோம்.

வருகைப் பல்லவி

காண். திபா 37:22-2 ஆண்டவரே, என் கடவுளே, என்னைக் கைவிடாதேயும் என்னிடமிருந்து அகன்று விடாதேயும். ஆண்டவரே, என் மீட்பின் ஆற்றலே, எனக்குத் துணைபுரிய வாரும்.

திருக்குழும மன்றாட்டு

எல்லாம் வல்லவரும் இரக்கம் உள்ளவருமான இறைவா, உமது அருள்செயலால்தான் உம் நம்பிக்கையாளர் உமக்கு ஏற்ற வகையில் சிறப்பான ஊழியம் புரிகின்றனர்; இவ்வாறு நீர் வாக்களித்தவற்றைப் பெற்றுக்கொள்ளத் தடையின்றி விரைந்து செல்ல எங்களுக்கு அருள்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.

இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 6: 2-6

மோசே மக்களை நோக்கிக் கூறியது:

நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.

இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.

இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 18: 1-2abஉ, 2deக-3. 46,50ab (பல்லவி: 1)

பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.


1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.

2abஉ ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். -பல்லவி


2deக என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே;

என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்,

3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்;

என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். -பல்லவி


46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்!

என் கற்பாறையாம் அவர் போற்றப்பெறுவாராக!

என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!


50ab தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;

தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும்

என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 7: 23-28

சகோதரர் சகோதரிகளே,

லேவியர் குலத்தைச் சார்ந்த குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர். இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.

இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார்.

திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 14: 23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34

அக்காலத்தில்

மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு இயேசு,

“ ‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.

அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

இறைமக்கள் மன்றாட்டு

எமது திரு அவைக்காக மன்றாடுவோம்.

அன்பின் இறைவா! அழகிய திரு அவை வழியாக எம்மை தினமும் ஊட்டமளிக்கின்றீர், எம்மை தூய்மைப்படுத்துகின்றீர் தினமும் இவ்வுலகை நலன்களால் நிரப்புகின்றீர். இவற்றிற்காக நன்றி கூறுகின்றோம். இத் திரு அவை வழியாக தொடர்ந்தும் நீர் ஆற்றுகின்ற உமது மீட்பின் திட்டத்தில் தம்மையும் கருவிகளாக இணைத்து பணியாற்றும் அனைத்து இறை பணியாளர்களையும் உமது வல்லமையால் காத்தி வழிநடத்தியருள வேண்டுமென்று, ...

எமது திரு அவையில் பணிபுரிந்து மரித்துப் போன அனைத்து திரு நிலைப்பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம். 

தமது வாழ்வை தினமும் பலியாக அர்ப்பணித்து உயிர்நீத்த அனைத்து திரு நிலைப் பணியாளர்களும், துறவிகளும் மேலும் அனைத்து பொதுநிலைப் பணியாளர்களும் இறைவனின் மாட்சியின் பேரொளியைக் காணும் பாக்கியம் பெறவும், அவர்களுக்கான வெற்றிவாகையை பெற்றிடவும் வரமருள வேண்டுமென்று, ...

நாட்டில் அமைதியை ஏற்படுத்துவோர்க்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! இந்நாட்டின் அனைத்து வளங்களையும் சூறையாடி தமது சுயநலத்திற்காக மக்களின் வாழ்வை நிர்க்கதியாக்கியிருக்கும் மனிதர்கள் மத்தியில், இந்நாட்டின் உயர்வுக்காக அதன் வாழ்வுக்காக உழைக்கும் அனைத்து தலைவர்களும் சவால்களை தாங்கும் வல்லமையைப் பெறவும், போராட்டங்களில் முன்னின்று வெற்றிகாணும் அருளை அளித்திட வேண்டுமென்று, ...

எமது பங்கின் இளையோர்க்காக மன்றாடுவோம். 

அன்பின் இறைவா! இறை அன்பு ஒன்றே சிறந்தது என அன்பின் பெறுமதியையும் அதன் வல்லமையையும் உணரும் எமது இளைஞர்கள் யுவதிகள் அவ் இறை அன்பை பரப்பும் கருவிகளாக திகழ்வார்களாக. திரு அவையின் மேல் அதீத ஆர்வம் காணவும், இயேசுவை பரப்பும் பணியில் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து முன்னோக்கிச் செல்லும் தைரியத்தைப் பெற்றிட அருள்ரிபுயவேண்டுமென்று


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, இப்பலி உமக்கு ஏற்ற, தூய காணிக்கையாக அமையச் செய்தருளும்; அது எங்களுக்கு உமது இரக்கத்தின் புனித கொடையாகவும் விளங்கச் செய்வீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 15:11 வாழ்வின் வழிகளை நான் அறியச் செய்தீர்; ஆண்டவரே, உம் திருமுன் மகிழ்ச்சியால் என்னை நிரப்புவீர்.

அல்லது

யோவா 6:58 வாழும் தந்தை என்னை அனுப்பினார்; நானும் அவரால் வாழ்கிறேன். என்னை உண்போரும் என்னால் வாழ்வர், என்கிறார் ஆண்டவர்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, ஆற்றல்மிகு உமது செயல் எம்மில் பெருகச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு விண்ணக அருளடையாளங்களால் ஊட்டம் பெற்ற நாங்கள் உமது கொடையால் அவை அளிக்கும் வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளத் தயார்செய்வோமாக. எ ங் கள்.


அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...