Thursday, 17 October 2024

பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் ஞாயிறு - 20/10/2024



பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் ஞாயிறு 

திருப்பலி முன்னுரை 

பகலின் பனியில் பசுமைகண்டு, பறக்கும் பறவைகளின் புதிய ஒலியைக் கேட்டு, மறைந்த சூரியனின் புதிய உதயம் கண்டு, புதிய நாளில் இதயம் நிறைந்த மகிழ்விலும், உரிமைகொள்ளும் நிறைந்த உறவிலும் இன்று இப் பலிப்பீடம் தேடி வந்திருக்கின்றோம். பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் ஞாயிறுவாரத்தில் இணைந்து இறைவனின் அருளையும், அவர் ஆசீரையும் பெற வந்திருக்கின்றோம். 

இன்றைய இறைவார்த்தைகள் இயேசுவின் இவ்வுலக வருகைக்கான நோக்கம் என்ன என்பதை தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றது. இயேசு யார், அவர் தான் சுமந்த துன்பங்கள் வழியாக, சிலுவை எனும் அவமானத்தின் வழியாக, உலகம் சொல்லித்தராத ஒரு புதிய வழிமுறையினூடாக, இவ்வுலகின் பாவத்தழையை தகர்த்தெறிந்து புதிய வரலாறு காணும் மானுடம் உருவாக்க வந்தார் என்பதை இறைவார்த்தைகள் இன்று சொல்லித்தருகின்றன. "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” எனும் இயேசுவின் வார்த்தைகள் எமக்கும் ஒரு மாற்றுச் சிந்தனையை தருகின்றது. 

நாம் பின்பற்றும் இயேசு, அனைத்து மக்களுக்குமான ஓர் உன்னத அடையாளமே. தனது வார்த்தைகளால் மாத்திரம் அல்ல, தனது உணர்வுகளின், சிந்தனைகளின் வெளிப்பாடாக தன்னை செயலாக்கி, தன்னை கருவியாக்கி, தன்னை இவ்வுலகம் உற்றுநோக்கும் வெளிச்சமாக்கி, வாழ்வைக் கொடுக்கும் உணவாக மாறுகின்றார் இயேசு. நாம் வாழ்வைத் தொலைத்தாலும் இயேசுவில் எம்மை மீண்டும் பெற்றுக்கொள்வோம்; நாம் நிலை தடுமாறி போனாலும், இயேசுவில் எம்மை சீர் செய்துகொள்வோம்; இதுவே எமது நம்பிக்கை, இதுவே எமது தெரிவு. இந்த ஆழ்ந்த சிந்தனைகளை எமது மனதிலே இருத்தியவர்களாக தொடரும் இக்கல்வாரிப் பலியில் இணைந்துகொள்வோம். 

வருகைப் பல்லவி

காண். திபா 16:6,8 இறைவா, நீர் எனக்குச் செவிசாய்த்தீர்; ஏனெனில் நான் கூப்பிட்டேன்; உம் செவியைத் திருப்பி, என் விண்ணப்பத்துக்குச் செவிசாய்த்தருளும். ஆண்டவரே, கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னைப் பாதுகாத்தருளும்.


திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் எப்போதும் உமது திருவுளத்துக்கு ஏற்ப வாழச் செய்தருளும்; அதனால் மாண்புக்கு உரிய உமக்கு நேர்மையான இதயத்தோடு நாங்கள் ஊழியம் புரியச் செய்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 53: 10-11

அந்நாள்களில்

ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளர் ஆக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 33: 4-5. 18-19. 20,22 (பல்லவி: 22)

பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!


4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;

அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்;

அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி


18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்;

அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி


20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்;

அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,

உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 14-16

சகோதரர் சகோதரிகளே,

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கை இடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45

அக்காலத்தில்

செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள். அவர் அவர்களிடம், “நான் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, “நீர் அரியணையில் இருக்கும்போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துகொள்ள எங்களுக்கு அருளும்” என்று வேண்டினர்.

இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், “இயலும்” என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, “நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபு மீதும் யோவான் மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


 அல்லது குறுகிய இறைவாக்கு

மானிட மகன் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு வந்தார்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 42-45

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களிடம் கூறியது: “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர், உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்த கொடைகளையே நாங்கள் உமக்கு மனம் உவந்து அளிக்க அருள்புரியுமாறு உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு உமது அருள் எங்களைத் தூய்மையாக்கி, நாங்கள் நிறைவேற்றும் அதே மறைநிகழ்வுகள் வழியாக உமது புனிதப்படுத்தும் அருளைப் பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.

இறைமக்கள் மன்றாட்டு

1. உயிரின் ஊற்றே இறைவா! எமது பங்குத் திரு அவையின் வளர்ச்சிக்காக உழைக்கும் எமது பங்கு தந்தையை ஆசீர்வதியும். கிறிஸ்தவ நம்பிக்கையை எமது மனங்களில் பதித்து, கிறிஸ்துவை எமக்கு திருப்பலி வழியாக உணவாகத் தரும் இவரின் வாழ்வு உயர்ந்திடவும், அன்பிலும் அருளிலும் சிறந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...

2. உயிரின் ஊற்றே இறைவா! இயற்கையின் அழிவுக்குள் அகப்பட்டு வாழும் எமது மக்களை பாதுகாரும். மழையிலும், மண்சரிவிலும் அச்சத்தில் விழித்தெழ முடியாமல் இருக்கும் எமது மக்கள், விரைவில் தமது அன்றாட வாழ்விற்கும் கால்பதித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...

3. உயிரின் ஊற்றே இறைவா! கல்வி எனும் காலத்தால் அழியாத கலையை கற்கும் எமது பிள்ளைகள் அதன் மெய்பொருள் உணர்ந்து தம்மை அர்ப்பணிப்பார்களாக. எமது நாட்டின், இவ்வுலகத்தின் உயர்ர்ந்த, சிறந்த தலைவர்களை உருவாக்கவும், மாறிவரும் உலகின் சிந்தனைகளுக்கு எதிர்கொண்டு செல்லத் தகுந்த தகுதியாளர்களாக தம்மை உருவாக்கிட அருள்புரியவேண்டுமென்று, ...

4. உயிரின் ஊற்றே இறைவா! இவ்வுலகின் தீமைகளுக்கு அடிபணியும் அனைத்து தலைவர்கள், மக்களின் வாழ்வுக்காக தம்மை மாற்றிக்கொள்வார்களாக. பணத்துக்காகவும், பதவிக்காகவும் அடிமை வாழ்வை, போலி வாழ்வை உருவாக்கும் அனைவரும், நிலையானவற்றில் தம்மை செலுத்தி, நீதியையும், சமத்துவத்தையும் சமமாக வாழும் வாழ்வைக் கற்றுக்கொள்ள அருள்புரியவேண்டுமென்று, ...

5. உயிரின் ஊற்றே இறைவா! எமது பங்கில் வாழும் அனைத்து பிறமதத்தினருக்காக மன்றாடுகின்றோம். அன்பை அணிகலனாகக் கொண்டு, ஒன்றிணைந்து பங்கேற்கும் புதிய சந்தர்ப்பங்கள் உருவாகி, நன்மைகள் பரவும் நல்லுறவுகள் மிளிர்ந்திடவும் அருள்புரியவேண்டுமென்று, ...

திருவிருந்துப் பல்லவி

காண். திபா 32:18-19 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன் பில் நம்பிக்கை கொள்வோரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்; அதனால் அவர்கள் ஆன்மாவைச் சாவினின்று காக்கின்றார்; பஞ்சத்தில் அவர்களுக்கு உணவளிக்கின்றார்.

அல்லது மாற் 10:45

பலருடைய மீட்புக்காகத் தம் உயிரைக் கொடுப்பதற்கு மானிட மகன் வந்துள்ளார்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணகப் பலியில் நாங்கள் அடிக்கடி பங்குபெறச் செய்ய உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு இவ்வுலக நலன்களின் உதவியால் மறுவுலக நலன்களை நாடக் கற்றுக்கொள்வோமாக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...