Thursday, 10 October 2024

பொதுக்காலம் இருபத்து எட்டாம் ஞாயிறு வாரம் - 13/10/2024

 


பொதுக்காலம் இருபத்து எட்டாம் ஞாயிறு வாரம்

திருப்பலி முன்னுரை

இறைவனின் உறவில் இணைந்து, இதயத்தில் அவரை புகழ்ந்து, உயிரிலும் உணர்விலும் எம் உறவோடு கலந்து, அழகுதரும் இயற்கையின் அரவணைப்பில் ஆனந்தம்கொண்டு, அன்பைக் கொண்டாட, அருளை சுவைக்க இன்றைய நாளில் ஒன்றுகூடியுள்ளோம். 

பொதுக்காலம் இருபத்து எட்டாம் ஞாயிறுவாரத்தில் இணைந்திருக்கின்றோம். இப் புதிய, அழகுதரும் நாட்களும் வாரமும் எமது வாழ்வின் உயார்ச்சிப் படிகளை புடமிடுவதாக.  

இறைவனின் வார்த்தைகள் இன்று எமக்கு ஒரு புதிய செய்தியை தருகின்றன. சாலமோனின் ஞான நூல், இவ்வுலகத்தின் அனைத்து செல்வங்களை விட, கடவுள் அருளும் ஞானமே உயர்வானது எனவும், உன்னதமானது எனவும் தமது அனுபவ வார்த்தைகளால் வெளிப்படுத்துகின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம் கடவுளின் வார்த்தையின் பெறுமதி என்ன என்பதை விளக்குகின்றது. மாற்கு நற்செய்தியில், இவ்வுலகில் சம்பாதித்த அனைத்து சொத்துக்களும் பொருளற்றது; அவை நாம் தேடும் நிலைவாழ்வை அளிக்கமுடியாதது என மிக அழகிய முறையில் இயேசு செல்வந்தனுக்கு எடுத்துரைக்கின்றார். 

எனவே, பொருள்தேடும் புகழ்தேடும் இவ்வுலகிலே நாம் ஒரு புதிய இலக்கியம் வரையவேண்டும். இறைவனின் வார்த்தையே நல்ல செய்தியாக, ஞானத்தின் உறைவிடமாக, மீட்பு தரும் பாதையாக, எமது இருள் நிறைந்த வாழ்வுக்கான விடியலாக அமையவேண்டும். இந்த ஞானத்தின் வார்த்தையே கருவாகி, மனுவுருவாகி, எம் அனைவரின் உறவாகி இவ்வுலகத்தின் ஒளியாகி உதித்தவர். படைப்பாகி இருந்தவர் படைப்பிற்குள்ளே தன்னைத் தந்து எமக்கு தம்மை வெளிப்படுத்தினார். இதை மகிழ்வோடு ஏற்று வாழுவோம். இயேசுவை புதிதாய் காணுவோம். 

இந்த சிந்தனைகளோடு தொடரும் பலியில் இணைந்துகொள்வோம். 

வருகைப் பல்லவி  திபா 129:3-4

ஆண்டவரே, நீர் எம் குற்றங்களை மனதில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளே, உம்மிடமே மன்னிப்பு உள்ளது.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, உமது அருள் என்றும் எங்கள் முன் செல்லவும் எங்களைத் தொடர்ந்து வரவும் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் நற்செயல் புரிவதில் என்றும் கருத்தாய் இருக்கச் செய்வீராக. உம்மோடு.

முதல் இறைவாக்கு

ஞானத்தோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-11

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்கு முன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்பு கொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது. ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 பதிலுரைப் பாடல் திபா 90: 12-13. 14-15. 16-17 (பல்லவி: 14a)

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.


12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;

அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.

13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை?

உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி


14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;

அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.

15 எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். -பல்லவி


16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.

17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக!

நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்!

ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி


இரண்டாம் இறைவாக்கு

கடவுளுடைய வார்த்தை உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-13

சகோதரர் சகோதரிகளே,

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

 

நற்செய்தி இறைவாக்கு

உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-30

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்” என்றார்.

கிறிஸ்துவின் நற்செய்தி


 அல்லது குறுகிய வாசகம்


உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

கிறிஸ்துவின் நற்செய்தி

இறைமக்கள் மன்றாட்டு

1. இறை பணியே தமது வாழ்வு என்றும், இறைமக்களே தாம் காணும் மறு இயேசு கிறிஸ்து என்றும் தம்மை அர்ப்பணித்து செயலாற்றும் அனைத்து திரு அவைப் பணியாளர்களையும் இறை அருளால் நிறைத்து வழிநடத்தவும், இறை ஞானத்தால் தமது வாழ்வை கொண்டுசெல்லவும் அருள்புரிய வேண்டுமென்று, ...

2. உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் இவ்வேளையில், திரு அவையின் புதிய மாற்றங்களை கிறிஸ்துவின் பெயரால் வரவேற்கவும், திரு அவைக்கு ஆன்மிக உரமூட்டி அவற்றை நெறிப்படுத்தவும் தேவையான அருளையும் வல்லமையையும் அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று, ...

3. உலகில் நடைபெறும் பாரிய யுத்தங்கள் நிறைவுக்கு வரவும், அரசியல் மாற்றங்கள் அனைத்துமே மக்களுக்கு சாதகமானதாக அமையவும், ஒவ்வொரு நாட்டின் இறைமைக்கு  களங்கம் விளைவிக்காமல் அதை பாதுகாத்திட உழைக்கும் அனைத்து தலைவர்களையும் ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...

4. எமது நாட்டின் புதிய பரிணாம வளர்ச்சியில், பாடுபடும் அனைத்து தலைவர்களும் எம் நாட்டுக்கான ஒளியாக உப்பாக திகழ்வார்களாக. தீமையின் கொடுக்களில் இருந்து எம் மக்களை பாதுகாத்து, நாம் அனைவரும் விரும்பித்தேடும் அன்பின், அமைதியின், நீதியின் பாதையை காட்டியருள வேண்டுமென்று, ...

5. கிறிஸ்தவ நம்பிக்கை இழந்து, வாழ்வை இவ்வுலகப் போக்கோடு தொடர்புகொண்டு வாழும் அனைவரும், இயேசுவை அறியும் அவா பெறுவார்களாக. இயேசுவை மறுதளிப்பவர்கள், விலகிச் செல்பவர்கள், வாழ விருப்பமில்லாதவர்கள், அருள் இழந்து போனவார்கள் அனைவரும் தூய ஆவியின் வல்லமை பெற்று இயேசுவை பறைசாற்றும் வாஞ்சை பெற வேண்டும்மென்று, ...

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியின் காணிக்கைகளோடு நம்பிக்கையாளரின் வேண்டல்களையும் ஏற்றருளும்; இவ்வாறு இறைப்பற்றோடு நாங்கள் ஆற்றும் இப்பணியால் விண்ணக மாட்சிக்குக் கடந்து செல்வோமாக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி

காண். திபா 33:11 நன்மை செல்வர் வறுமையுற்றனர், பசியுற்றனர்; ஆண்டவரை நாடுவோருக்கு ஏதும் குறைவுபடாது.

அல்லது

1 யோவா 3:2 ஆண்டவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பது போல் நாம் அவரைக் காண்போம்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, மாண்புக்கு உரிய உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் புனிதமிக்க உடலாலும் இரத்தத்தாலும் எங்களுக்கு உணவு அளிப்பது போல எங் கள். எங்களை அவரது இறை இயல்பிலும் பங்குபெறச் செய்வீராக.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...