பொதுக் காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
"நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவுபெறும்"
இறை இயேசுவில் அன்புள்ள என் உறவுகளே! இயேசுவின் பெயரால் நாம் உங்களை இக்கல்வாரிப் பலிக்கு அழைக்கின்றோம். பொதுக்காலம் இருபத்து ஏழாம் ஞாயிறு வாரத்தில் இணைகின்றோம். மகிழ்வோடு தொடங்கும் இன்றைய நாளில், இறை அன்பும் இறை வல்லமையும் எம்மை ஊக்கப்படுத்துவதாக, திடப்படுத்துவதாக எம்மை நிறைவாழ்வுக்கு அழைத்துச் செல்வதாக.
இன்றைய வார்த்தை வழிபாடு இறை-மனித உறவின் மேன்மையை எடுத்தியம்புகின்றது. இறைவன் மனிதனைப் படைத்து அவர்களை இவ்வுலகின் உயர்ந்த படைப்பாக்கி, தமது ஒன்றிப்பின் வழி, இறை ஒன்றிப்பை காட்டவும், தமது அன்பின் வழி, இறை அன்பைக் காட்டவும், தமது மேன்மையான வாழ்வின் வழி இறை தன்மையை எடுத்தியம்பவும் மனிதனுக்கு இறை அருளைக் கொடுத்து அருட்கொடையின் மான்பினை உணர்த்துவதை தொடக்க நூலில் காணலாம். "தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே" என்று தன்னை மனிதனுக்கு முழுமையாகக் கொடுத்த இறைவனின் வல்ல செயலைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியர். இன்றைய நற்செய்தியில், திருமண அருட்கொடையின் ஒன்றிப்பு, ஒரே நிலைத்தன்மை, பிழவுபடாத் தன்மை குறித்து மாற்கு நற்செய்தியாளர் பேசுகின்றார்.
உடலும் உயிரும் உறவிலே இணையும் போது, உண்மையும், மெய்மையும் உள்ளத்தால் உணரும் போது, படைத்த இறைவன் எம்மில் படைப்பாய், பண்பாய், அன்பாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அன்பை தரும் அழகிய இறைவன், தன்னை எம்மில் ஒருவராக்கி இன்னும் வியாபித்துக்கொண்டிருக்கிறார். இதுவே இன்றைய வாசகங்களின் மெய்பொருளாய் அமைகின்றது.
எனவே! திருமண உறவால் பெறும் வாழ்வின் வளங்களை உணர்ந்துகொள்வோம், அதன் நோக்கங்கள் பற்றி தெளிவில்கொள்வோம், உணர்வுகளில், கருத்துக்களில், கொள்கைகளில், வாழ்வியல் அனுபவங்களில் பெறும் வேறுபாடுகளின் மத்தியிலும் பண்புகளைக் கற்றுக்கொண்டு, அன்பிலே இணைந்துகொள்வோம். இவ்வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி, வரம் கேட்டு மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
காண். எஸ் 4:17 ஆண்டவரே, அனைத்து ம் உம் அதிகாரத்தின் கீழ் உள்ளன; உமது திருவுளத்தை எவராலும் எதிர்த்து நிற்க முடியாது. விண்ணையும் மண்ணையும் விண்ணின் கீழ் உள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே. நீரே அனைத்துக்கும் ஆண்டவர்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் தகுதிக்கும் நாங்கள் விரும்பிக் கேட்பதற்கும் மேலாகவே உமது மிகுதியான பரிவிரக்கத்தால் எங்களுக்கு அருளுகின்றீர்; அதனால் எங்கள் மீது உமது இரக்கத்தைப் பொழிந்து மனச்சான்றுக்கு அச்சம் விளைவிப்பவற்றை மன்னித்து, நாங்கள் கேட்கத் தயங்கும் மன்றாட்டை நிறைவேற்றுவீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 18-24
அனைத்தையும் படைத்து முடித்த பின் ஆண்டவராகிய கடவுள், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்றார்.
ஆண்டவராகிய கடவுள் மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டு வந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.
ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்து வந்தார்.
அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 128: 1-2. 3. 4-5. 6 (பல்லவி: 5 காண்க)
பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!
1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!
நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! -பல்லவி
3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்;
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக!
உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! -பல்லவி
6 நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக!
இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 2: 9-11
சகோதரர் சகோதரிகளே,
நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்படவேண்டியிருந்தது.
கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பிய போது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழிநடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே. தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 1 யோவா 4: 12
அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவுபெறும். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 2-16
அக்காலத்தில்
பரிசேயர் இயேசுவை அணுகி, “கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
அவர் அவர்களிடம் மறுமொழியாக, “மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டார். அவர்கள், “மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்” என்று கூறினார்கள்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.’ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, “தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
சிறு பிள்ளைகளை இயேசு தொடவேண்டுமென்று, அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, “சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. என்றும் வாழும் இறைவா! உமது திரு அவைக்காக நன்றி கூறுகின்றோம். உலமெல்லாம் சென்று பல வழிகளில், பல துறைகளின் மூலம், பல்வேறு பணிகள் ஊடாக உமது நற்செய்தியை பரப்பிடும் அனைத்து உள்ளங்களையும் நிறைவாக ஆசீர்வதித்திட வேண்டுமென்று, ...
2. என்றும் வாழும் இறைவா! உமது ஆசீரால் அமையப்பெற்ற எமது குடும்பங்களுக்காக நன்றி கூறுகின்றோம். நாளும் நாம் சூழலில், இடையூறுகள் மத்தியில், உமது அன்பையும், திரித்துவ ஒன்றிப்பையும் வெளிப்படுத்தும் நல்ல குடும்பங்களாக இவைகள் மாற்றம் பெற்றிட வேண்டுமென்று, ...
3. என்றும் வாழும் இறைவா! எமது நாட்டுக்காக நன்றி சொல்லி மன்றாடுகின்றோம். நாம் எதிர்பார்ர்க்கும் அடிப்படை மாற்றங்கள் அரசியல் தலைவர்கள் ஊடாக நிகழ்ந்தேறவும், எமது நாட்டிலே மகிழ்வுடனும் அமைதியுடனும் வாழும் வரத்தை எம் மக்களுக்கு அளித்திடவேண்டுமென்று, ...
4. என்றும் வாழும் இறைவா! எமது வாழ்வின் வளர்ச்சிக்காக மனம் நிறைந்து துணைபுரியும் அனைவருக்காகவும் நன்றி சொல்லி மன்றாடுகின்றோம். நாம் முன்னோக்கிச் செல்லும் பாதையில் உடன்சென்று, உதவிகள் பல புரிந்து, கரம்கொடுத்து தூக்கிவிடும் அனைவருக்கும் உமது ஆசீரைக் கொடுத்தருள வேண்டுமென்று, ...
5. என்றும் வாழும் இறைவா! எமது பங்கில் நோய்வாய்ப்பட்டிருப்போருக்காக மன்றாடுகின்றோம். பல்வேறு அக,புற காரணிகளால் நோய்வாய்ப்பட்டு தினமும் வேதனையுறும் அனைவருக்கும் கரங்கொடுக்கும் இறைவனாக, உதவிபுரியும் நண்பனாக, குணமளிக்கும் மருத்துவனாக இருந்தருள வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம் கட்டளைகளாலும் தூய மறைநிகழ்வுகளாலும் நிறுவப்பட்ட பலிகளை நீர் ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: உமக்கு ஏற்ற ஊழியம் புரிந்து நாங்கள் கொண்டாடும் இப்பணியால் தூய்மையாக்கப்பட்டு, உமது மீட்பின் நிறைவைப் பெறத் தகுதி பெறுவோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
ஆண் டவரில் நம்பிக்கை வைப்போருக்கும் அவரைத் தேடுவோருக்கும் அவர் நல்லவர்!
காண். 1 கொரி 10:17
அல்லது
அப்பம் ஒன்றே. நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்திலும் ஒரே கிண்ணத்திலும் பங்குகொள்கிறோம்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
எல்லாம் வல்ல இறைவா, நாங்கள் பெற்றுக்கொண்ட கிறிஸ்துவின் அருளடையாளத்தால் புத்துணர்வும் ஊட்டமும் பெறுகின்றோம்; இவ்வாறு நாங்கள் அவராகவே மாறிட எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி
No comments:
Post a Comment