நவநாள் வழிபாடு - தன்னாமுனை - 05/10/2024


இறை இயேசுவில் என் அன்புக்கினிய இறை மக்களே!

வாழ்வும் வளமும் செழிந்தோங்கி, இறைபற்றும், இதய அன்பும் நிறைந்து விளங்கும்  தென்னையூர் கிராமத்திலே கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் புனித வளனாரின் பெருவிழாவைக் கொண்டாடும் ஆயத்த நாட்களில் இரண்டாம் நாளாகிய இன்று 'நாளாந்த வாழ்வில் சவால்களைத் தாண்டிச்செல்ல இறைவேண்டலில் நிலைத்திருப்போம்' எனும் கருப்பொருள் எமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. கப்பலேந்தி மாதா அன்பிய உறவுகள் யாரும், இங்கு குழுமியிருக்கும் அனைத்து இறைமக்களோடும் இணைந்து இறைவனுக்கு பலி ஒப்புக்கொடுத்து நன்றி சொல்லுவோம். 

இன்று, நாம் எமது சிந்தனைக்கு எடுத்துச் செல்லும் இறைவார்த்தைப் பகுதி மிக ஆழமானது. சபை உரையாடல் நூல் தரும் இளையோருக்கான அறிவுரை எமது ஞானக் கண்களை திறக்கின்றது. "உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை" எனும் வார்த்தை நாம் சந்திக்கும் அனைத்து வாழ்வியல் நிகழ்வுகளுக்கு முன், அனுபவங்காளாக மாறவேண்டும் என வலியுறுத்துகின்றார். இதுவே நாம் செய்யும் இறைவேண்டலின் தெளிவான சுருக்காமாகும். 

மத்தேயு நற்செய்தியாளர், பொருட்செல்வங்களை அல்ல, அகச்செல்வமாகிய இறைவனை சேகரிக்கவேண்டும் என எமது அனைத்தையும் திறந்த வாழ்வை, நிலை வாழ்வுக்கான வழியாக காட்டி நிற்கின்றார். 

ஆகவே, இளைஞர்களே! விளித்தெழுங்கள். இளைஞரான இயேசு இன்று உங்களை அழைக்கின்றார். இவ்வுலகின் பல கோடி மக்களை திரும்பிப்பார்க்கச் செய்தவர் இவ் இளைஞன் இயேசு. யூத சட்டங்களுக்கு அப்பால், மனித இதயத்தை ஆழ புரிந்துகொண்டவர் இவ் இளைஞன் இயேசு. இறுகிப்போன மனங்களை இனங்கண்டு, அதற்குள் இதய அன்பு மிக உன்னதமானது என்பதை புரியவைத்தவர் இவ் இளைஞன் இயேசு. எல்லாவற்றையும் அர்ப்பணமாக்கி, தியாகமே மேலானது என ஆயிரக்கணக்கான இளைஞர்களை பின்பற்ற செய்தவர் இவ் இளைஞன் இயேசு. இன்று நாமும் எமது இதயங்களைத் திறந்து, அவர் அழைத்தலுக்கு செவிகொடுப்போம். 

இன்றைய நாளிலே எம்மோடு இணைந்து எமக்காக திருப்பலி ஒப்புக்கொடுக்கும் அமல மரித் தியாகிகள் சபையின் குரவர், அருட்தந்தை பிலிப் ரஞ்சனகுமார் அடிகளாருக்காக மன்றாடுவோம். இயேசுவை இவ்வுலகமெங்கும்  எடுத்துச் செல்லும் அவர் பணிவாழ்வு என்றும் நிறைவுபெற மன்றாடுவோம். அத்தோடு எமது  பங்குதந்தையர்கள், துறவிகள் அனைவருக்கும் இறை ஆசீர்கேட்டு மன்றாடுவதோடு, கப்பலேந்தி மாதா அன்பியத்தினரையும் மற்றும் அனைவரையும் இப்பலியிலே இணைத்து மன்றாடி இறைவரம் கேட்டுநிற்போம்.

இறைமக்கள் மன்றாட்டு

பதிலுரையாக: கேட்டருளும் ஆண்டவரே கேட்டருளும் எம் மன்றாட்டை தயவாக கேட்டருளும் 


1. எமது திரு அவைக்காக மன்றாடுவோம்: திரு அவையின் இறை நம்பிக்கையை களங்கம் இல்லாமல் பாதுகாக்கவும், இறை விருப்பத்திற்கேற்ப, மக்களை அவர்வழி நடத்திடவும் பணியாளர்கள் அனைவருக்கும் அருள்புரிந்திட வேண்டுமென்று, ...

2. எமது மறையுரைஞருக்காக மன்றாடுவோம்: அமதிகளின் விருவாக்கிற்கொப்ப, ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபடவும், ஆற்றலையும் ஞானத்தையும் இவருக்கு அளித்திடவேண்டுமென்று, ...

3. எமது இறைமக்களுக்காக மன்றாடுவோம்: புனித வளனை முன்மாதிரியாகக் கொண்டு தமது வாழ்வில் இறைவரங்களை நிறைவாகப் பெறவும், இக்கிராமத்தின் வாழ்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைக்கும் ஆற்றலை அளித்திடவேண்டுமென்று, ...

4. எமது இளைஞர்களுக்காக மன்றாடுவோம்: இயேசுவை இலக்காகக்  கொண்டு, அவர் வாழ்வை பகிர்ந்து வாழும் உயரிய கொடையை வரங்களாகப் பெற்ற இவ்விளஞர்கள்,  என்றும் நேர்மைறை தீர்மானங்களுக்கு செவிசாய்க்கவும், சமய-சமூக அக்கறைகொண்டு வாழவும், நவீன உலகிற்குள் தொலைந்திடாமல் இருக்கவும் வேண்டுமென்று, ...

5. உலகில் பல்வேறு நாடுகளில் நடந்தேறும் யுத்தங்கள் நிறைவுபெற மன்றாடுவோம். சுயநல அரசியல் நிலை மாறி, நாடுகளில் வாழும் மக்களின்  நலனுக்காக உழைக்கும் தலைவர்கள் உருவாகி, உரிமைகளை மதித்து, உணர்வுகளுக்கு செவிகொடுத்து செயற்பட  தேவையான அருளை அளித்திடவேண்டுமென்று, ...

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி

Comments