பொதுக்காலம் முப்பதாம் வாரம்
திருப்பலி முன்னுரை
அன்பின் பலியாம் கல்வாரிப் பலியில் இணைந்து, அனைத்தையும் தன் மகனின் அன்பின் காணிக்கை வழியாக ஒன்றித்து, புதிய வாழ்வின் பாதையில் இன்று எம்மை தேர்ந்தெடுத்து, அர்ச்சித்து, அரவணைத்து, அருளின் பெருக்கால் எம்மை நிறைக்கும் இப் பலியில் இணைந்து கொண்டாட ஒன்றுகூடி வந்திருக்கின்றோம். தனது வாழ்வை அவரது உடலிலும் இரத்தத்திலும் நாளும் எமக்கு தருவதற்காய் நன்றி சொல்லுவோம், இவ் உன்னத பலியில் இணைந்து இறைவனின் இரக்கத்தையும், வழிநடத்தலையும் வேண்டிமன்றாடுவோம்.
இப்பலியின் முதற்பணியாக, நாம் செவிமெடுக்கும் இறைவார்த்தை எம் ஆன்மிக வாழ்வை வழிநடத்த இருக்கின்றது; இறைவாக்கினர் எரேமியாவின் முதலாம் இறைவாக்கானது தனது தேர்ந்தெடுத்த பிள்ளைகளை ஆறுதலின் தேவனாக இருந்து, தாய்மைக்குரிய பாசத்தோடும், அன்போடும் தேற்றுவதைக் காணலாம். இதுவே அவர்களின் நல்வாழ்வுக்கான செய்தியாகவும் அமைகின்றது.
எபிரேயருக்கு எழுதப்பட்ட இன்றைய இரண்டாம் இறைவாக்கு, 'மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என இயேசுவின் முழுமையான குருத்துவத்தையும், அதன் வழியாக இவ்வுலகுபெறும் விலைமதிப்பில்லா அருளையும் அனைத்து மக்களும் பெறும் படி தலைமைக் குருவாம் இயேசு செய்த தியாகத்தை முன்னிலைப்படுத்துகின்றார்.
மாற்கு எழுதிய நற்செய்தி, இயேசு செய்த புதுமையைக் காட்டுகின்றது. இயேசுவை அணுகிச்செல்லும் ஒவ்வொருவரும், தமது ஆழங்காணா நம்பிக்கை வழியாக நலம்பெறுவர் என்பதை 'உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' எனும் இயேசுவின் வார்த்தை வழியாக எடுத்தியம்புகின்றார்.
எமது இன்றைய வாழ்வு பெரிதும் அலைகள் மோதும் சவால்களை தாங்கியும், கடந்தும் செல்கின்றது என்பது உண்மையே. ஒவ்வொரு மனிதனையும் சந்திக்கும்போது, ஒவ்வொரு நிகழ்வையும் கடந்து செல்லும்போது, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் முகங்கொடுக்கும்போது, எமது வாழ்வு ஏற்படுத்தும் தாக்கங்கள் எண்ணிலடங்காதவையே. ஆயினும், இன்றைய வார்த்தைகள் எமக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் தருகின்றது. நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதால், எமக்குள் செயலாற்றும் தூய ஆவி எமக்கு பலமாக, வலுவாக உயிராக செயலாற்றுகின்றார். நாம் நம்பிக்கையோடே பயணிக்கவேண்டும். இதற்காக இப்பலியில் மன்றாடுவோம். நாம் தீமையின் மக்களல்ல, பொய்மையை தாங்குபவர்களும் அல்ல, மாறாக இயேசுவை, உண்மையை இவ்வுலகிற்கு எடுத்துரைத்தவரை இதயத்தில் தாங்கி வாழும் அவர் மக்கள். இவற்றை நாம் உணர்ந்து, தொடர்ந்தும் பயணிக்கும் வரம்கேட்டு இப்பலியில் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
காண். திபா 104:3-4 எ ண்டவரைத் தேடுவோரின் இதயம் மகிழ்வதாக. ஆண்டவரைக் தேடுங்கள், உறுதிபெறுங்கள். அவரது திருமுகத்தை என்றும் நாடுங்கள்.
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்களில் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியன வளரச் செய்தருளும் அதனால் நீர் கட்டளையிடு வதை நாங்கள் அன்பு செய்யவும் நீர் வாக்களிப்பதை நாங்கள் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவோமாக உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
பார்வையற்றோருக்கும் கால் ஊனமுற்றோருக்கும் ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 7-9
ஆண்டவர் கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; ‘ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்! ’ என்று பறைசாற்றுங்கள்.
இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் கால் ஊனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.
அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 126: 1-2ab.2cd-3. 4-5. 6 (பல்லவி: 3a)
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.
1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது,
| நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.
2ab அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது.
நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. -பல்லவி
2cd “ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்”
என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்;
அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி
4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவது போல,
எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி
6 விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது -
அழுகையோடு செல்கின்றார்கள்;
அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது -
| அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6
சகோதரர் சகோதரிகளே,
தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாகியிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறிதவறி நடப்போருக்கும் பரிவு காட்டக்கூடியவராய் இருக்கிறார். அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்ததுபோன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வரவேண்டும்.
அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. “நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்” என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். இவ்வாறே மற்றோரிடத்தில், “மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 2 திமொ 1: 10b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52
அக்காலத்தில்
இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.
இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. எமது திரு அவையின் மாண்புக்காய் உழைக்கும் திரு அவை பணியாளர்களும், அதன் வளர்ச்சிக்காய் அயராது பாடுபடும் அனைத்து பொதுநிலைப் பணியாளர்களும் இறைவனின் வார்த்தையை இதயத்தில் தாங்கி, நாளும் கொண்டாடும் திருப்பலியால் ஆன்ம ஊட்டம்பெற்று இயேசுவை உலகமெங்கும் வாழ்ந்திடச் செய்யும் வரத்தை அருளவேண்டுமென்று, ...
2. கூட்டொருங்கியக்க திரு அவையாக பயணிக்கும் நாம், இவ்வுலகின் மாற்றங்களை மனதில் இருத்தி அதை ஆழ சிந்தித்து, திரு அவையின் முழுமையான வளர்ச்சிக்கு என்றும் துணையாக பணிபுரிந்திடவும், இத் திரு அவையில் அனைவருமாய், அனைத்துக்குமாய் ஒன்றிணைந்து தூய ஆவியின் மக்களாய் பய்யணித்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
3. எமது பங்கின் வளர்ச்சிக்கு இன்றுவரை பாடுபட்டு உழைத்த அனைத்து குருக்களையும் நினைத்து நன்றிசொல்லி மன்றாடுகின்றோம். இவர்களின் முயற்சியால் ஏற்பட்ட மாற்றங்கள், அன்பினால் இணைத்த உறவுகள், தமது பலியினால், செபத்தினால் மீட்ட ஆன்மாக்கள் என அனைத்தையும் நன்றியோடு நினைத்து இறை அருளையும் பலத்தையும் தொடர்ந்தும் அளித்திட வேண்டுமென்று, ...
4. எமது நாட்டின் அரசியல் தலைவர்கள் வழியாக எமது நாடு காணும் அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றிசொல்லி மன்றாடுகின்றோம். நடைபெற இருக்கும் தேர்தலில், ஒவ்வொரு ஏழையின் கண்ணீருக்காய், பொருளாதார உயர்வுக்காய், பிள்ளைகளின் உரிமை நிறை கல்விக்காய் உழைக்கும் தலைவர்கள் நாம் தேர்ந்தெடுத்திட எம்மை வழிநடத்தியருள வேண்டுமென்று, ...
5. எம்மை சுற்றி, பல நாடுகளில் நடந்தேறும் யுத்தங்கள் நிறைவுக்கு வரவும், நாளுக்கு நாள் விலைமதிப்பில்லா உயிர்கள் கொல்லப்படுவது முற்றாக நிறுத்தப்படவும், பசியிலும், வேதனையிலும் வாழும் அனைவரும் பாதுகாக்கப்படவும் நீரே இவர்களை வழிநடத்தியருள வேண்டுமென்று, ...
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, மாட்சிக்கு உரிய உமக்கு நாங்கள் அளிக்கும் காணிக்கையைக் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: இவ்வாறு நாங்கள் நிறைவேற்றும் இத்திருப்பணி எங்களை உமது மாட்சிக்கு இட்டுச்செல்வதாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
காண். திபா 19: உமது வெற்றியைக் குறித்து மகிழ்வோமாக! நம் கடவுளின் பெயராக மாண்புறுவோமாக!
அல்லது
எபே 5: கிறிஸ்து நமக்காகத் தம்மை நறு மணம் வீசும் பலியாகக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, நம்மை அன்பு செய்தார்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உம் அருளடையாளங்கள் தம்முள் கொண்டிருக்கும் அருள் எங்களில் நிறைவு பெறச் செய்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் இப்போது அடையாள முறையில் கொண்டாடுவதை நாங்கள் உண்மையாகவே பெற்றுக்கொள்வோமாக. எங்கள்.
அருட்தந்தை ஜே. சுரேந்திரராஜா, அமதி