திருப்பலி முன்னுரை
திருமணம் எனும் இருமனங்கள் இணைந்து, அருள் மணம் நிறைத்து அகிலம் எங்கும் ஆண்டவன் அழகை அருள்கூர்ந்திட இன்று இத்திருவருட் சாதன திருப்பலிக்கு வந்திருக்கும் அன்பு தம்பதியினரே! இறைமக்களே! இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை வரவேற்கின்றோம்.
இன்று எம் அனைவருக்கும், இத் திரு அவைக்கும் ஓர் உன்னத நாள், ஓர் அழகிய பொன்னாள். திருமண திருவருட் சாதனத்தில் இணைந்து இறைவனின் அரசில் இருமன உறவுகளாய் ஒன்றிணைய கூடி வந்திருக்கும் அன்பின் தம்பதினராகிய ..... உங்களுக்காக நாம் இறைவனுக்கு நன்றி கூறி பலி ஒப்புக்கொடுத்து அருள் வளங்கள் பெற்று பல சிறப்புடன் வாழ்ந்திட ஆசித்து நிற்கின்றோம்.
இறைவன் இவ்வுலகைப் படைத்த போது, ஆணையும், பெண்ணையும் இணைத்திடவும், இவ்வுலகின் அனைத்து வளங்களை, இறைவனின் அசீராக அனுபவித்திடவும் அருள்கூர்ந்தார். ஆணையும் பெண்ணையும் தன்னைப் போலவே படைத்து இவ்வுலகில் 'பல்கிப் பெருகி இப்பூமியை நிரப்புங்கள்' எனும் முதற் கட்டளையைக் கொடுத்தார். இவ்வாறே இன்றும் இவர்கள் திரித்துவத்திற்கு முன்பாகவும், திரு அவைக்கு முன்பாகவும், இத்திருக்கூட்டத்திற்கு முன்பாகவும் தங்களின் ஒன்றிப்பை எடுத்துரைத்து இப்புதிய வாழ்வை தொடங்குகின்றார்கள்.
இவ் ஒன்றிப்பு எங்கும் எப்பொழுதும் நிலைத்திருக்க மன்றாடுவோம். தமது அன்பினால் ஒருவர் மற்றவருக்காக வாழ்ந்து, இவ்வுலகில் கிறிஸ்துவுக்கு சான்றுபகர மன்றாடுவோம். இன்பமும் துன்பமும், சோதனைகளும் வேதனைகளும் இவர்களை பலப்படுத்த மன்றாடுவோம். இறைவன் இணைக்கும் இத்திரு உறவு இறுதி மூச்சுவரைக்கும் நிலைத்திருக்க மன்றாடுவோம். இறைவன் இவர்களுக்கு அனைத்து செல்வங்களையும் அளித்து இப்புதிய வாழ்வை ஆசீர்வதித்திட வேண்டி இப்பலியிலே மன்றாடுவோமாக.
இறைமக்கள் மன்றாட்டு
1. நல்ல ஆயனே இறைவா! நீர் உமது திரு அவையை உமது சொந்த உயிராக, உடலாக பேணி பாதுகாத்து வருகின்றீர். திருமண ஒன்றிப்பை, திரு அவைமேல் கொண்ட உமது அன்பினால் எமக்கு எண்பிக்கின்றீர். இத் திரு அவையை களங்கம் இல்லாமல் பாதுகாக்கவும், இதன் வழியாக மக்கள் மீட்படையவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
2. நல்ல ஆயனே இறைவா! இன்று இத் திருமண திருவருட்சாதனத்தின் வழியாக இணைந்திருக்கும் திரு. திருமதி ... இவர்களை ஆசீர்வதியும். உமது ஆவியின் வல்லமையால் இவர்களை நிறைத்து, தாங்கள் தொடங்கும் இப்புதிய வாழ்வில் என்றும் எப்பொழுதும் நிலைத்து வாழ்ந்திட அருள்புரிய வேண்டுமென்று, ...
3. நல்ல ஆயனே இறைவா! இன்று இப்புதிய குடும்பத்தை எம் திரு அவைக்கு தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். நீர் காட்டிய திருக்குடும்பத்தின் மாதிரி, இவர்களின் குடும்பத்திலும் செழித்தோங்கவும், ஒருவர் மற்றவரை தாங்கிவாழவும், ஒருவர் மற்றவருக்காக விட்டுக்கொடுத்து வாழவும், ஒருவர் மற்றவரில் பரஸ்பர அன்பை கண்டு வாழவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
4. நல்ல ஆயனே இறைவா! புதிய வாழ்வைத் தொடங்கும் இவர்களுக்கு குழந்தைச் செல்வங்களை அளித்தருளும். இவர்கள் வழியாக ஒரு புதிய தலைமுறையை உருவாக்கவும், இவ்வுலகம் விட்டுச்சென்ற நல்ல, அழகிய விழுமியங்கள் இவர்களின் வாழ்வில் துளங்கிட அருள்புரிய வேண்டுமென்று, ...
Fr. SJ. Surenthirarajah, OMI

Comments
Post a Comment