பொதுக்காலம் பாதினாறாம் ஞாயிறு வாரம் - 21/07/2024


பொதுக்காலம் பாதினாறாம் ஞாயிறு வாரம் 

திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் அன்புமிக்க இறை உறவுகளே! 

பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு வாரத்தில் இன்று நாம் கால் பதிக்கின்றோம்.  நாளையும் பொழுதையும் தரும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம், வாழ்வையும் வசந்தத்தையும் தரும் இறைவனுக்கு நன்றி சொல்லுவோம், இடரல்கள் மத்தியிலும் பாதை காட்டும் பரமனுக்கு நன்றி சொல்லுவோம், இன்று புதிய உலகம் காண அழைக்கும் அவருக்கு நன்றி சொல்லி இப்புதிய வாரத்தில் கால்பதிப்போம். 

எரேமியா இறைவாக்கினரின் முதலாம் இறைவாக்கு, இறை பணி ஏற்று நடத்துவோருக்கான சவால்கள் நிறைந்த வார்த்தைகளாகவே அமைகின்றது. கடவுள் நீதியானவர், உண்மையுள்ளவர், தமது மந்தைகளை செவ்வனே நடத்துபவர் என்று, தமது மக்கள் மீதுகொண்ட அளவற்ற அன்பையும், இரக்கத்தையும் சுட்டிக்காட்டுகின்றார் இறைவாக்கினர் எரேமியா. 

புனித பவுலின் எபேசு திரு அவைக்கு எழுதிய மடலில், கடவுள் அனுப்பிய தமது மகனின் துன்பத்தாலும், சிந்திய இரத்தத்தாலும், அவரது அவமானம் நிறைந்த பாடுகளாலும், அவர் மக்களாகிய நாம் மீட்கப்பட்டுள்ளோம், அவர் வழியாக நாம் பெறுபெற்றவர்களாக மாற்றம் பெற்றிருக்கின்றோம் எனும் உயரிய உண்மையை தனது உள்ளார்ந்த அனுபவத்தின் வழியாக எடுத்தியம்புகின்றார். மாற்கு எழுதிய நற்செய்தியில் இயேசுவின் மேல் கொண்ட மக்களின் ஆர்வம் எண்பிக்கப்ப்டுகின்றது. இயேசுவை அடையாளம் கண்ட மக்களாகவா, அல்லது அவரது புதுமைகளால் கவரப்பட்ட மக்களாகவா இவர்கள் தங்களை அடையாளம் காட்டுகின்றார்கள் என்பது எமக்கான கேள்வியே. 

எனவே! திரு அவையோடு சேர்ந்து பயணிக்கும் நாம், எமது இருப்பை, அடையாளத்தை, எமது நம்பிக்கை வாழ்வின் நோக்கத்தை உறுதிசெய்து கொள்வோம். எமக்காக கிறிஸ்துவின் தியாகம் மெய்ப்பிக்கப்படும் போது, அவருக்காக நாம் எமது ஆன்மாவை தயார்செய்வது, புனிதமாக்குவது, அவரின் ஒன்றிப்பை உறுதிசெய்வது இன்றைய தேவையாகின்றது. நாம் இருப்பதும், இயங்குவதும் இயேசுவிலே தான் என்பது எமது அசையாத நம்பிக்கையாகட்டும். எமது வழ்வின் நீண்டதூரப் பயணம் முடிவுரும்வரை இயேசுவை இலக்காகக் கொண்டு பயணிக்க இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி

திபா 53:6,8 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் இருக்கின்றார்: தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன். ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன். ஏனெனில் அது நல்லது.

திருக்குழும மன்றாட்டு

ஆண்டவரே, நீர் உளம் கனிந்து உம் அடியார்களாகிய எங்களில் உம் அருள்கொடைகளைப் பெருகச் செய்தருளும்; இவ்வாறு நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றால் நாங்கள் பற்றியெரிந்து உம் கட்டளைகளை விழிப்புடனும் ஆர்வத்துடனும் கடைப்பிடிக்கச் செய்தருள்வீராக. உம்மோடு.


முதல் இறைவாக்கு

ஆடுகளைக் கூட்டிச் சேர்த்து, அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 1-6

ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு! தம் மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்க வில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப் போகிறேன் என்கிறார் ஆண்டவர்.

என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப்பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக் காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். ‘யாவே சித்கேனூ’ - ஆண்டவரே நமது நீதி - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.


1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;

அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.

3a அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி


3b தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்;

4 சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,

நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;

உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே

எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;

என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;

எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி


6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்

உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்;

நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி


 இரண்டாம் இறைவாக்கு

இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 13-18

சகோதரர் சகோதரிகளே,

ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.

ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்.

அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.


நற்செய்தி இறைவாக்கு

ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தனர்.

† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

அக்காலத்தில்

திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

இறைமக்கள் மன்றாட்டு

குரு: இறை அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.

1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:

இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்

நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று

3. பல்வேறு அணர்த்தத்தினால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்

துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று

4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்

எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, பழைய ஏற்பாட்டுப் பல்வேறு பலிகள் உம் திருமகனின் நிறைவான ஒரே பலியில் முழுமை பெறச் செய்தீர்; ஆபேலின் காணிக்கைகள் மீது ஆசி வழங்கிப் புனிதப்படுத்தியது போல, உமது மாட்சியின் மேன்மைக்காக இறைப்பற்றுள்ள உம் அடியார்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் பலியை ஏற்று, அது அனைவரின் மீட்புக்கும் பயன்படச் செய்தருள்வீராக. எங்கள்.


திருவிருந்துப் பல்லவி  திபா 110:4-5 

இரக்கமும் அருளும் உடைய ஆண்டவர், தம் வியத்தகு செயல்களை நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளித்தார்.

அல்லது திவெ 3:20

இதோ! நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்; யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் அவரோடு உள்ளே சென்று அவரோடு உணவு அருந்து வேன்; அவரும் என்னோடு உணவு அருந்துவார், என்கிறார் ஆண்டவர்.


திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வுகளால் நீர் நிறைவு செய்த உம் மக்களுடன் கனிவாய்த் தங்கியிருக்க உம்மை வேண்டுகின்றோம்: பழைய நிலையிலிருந்து வாழ்வின் புதிய நிலைக்கு நாங்கள் கடந்து செல்லச் செய்வீராக. எங்கள்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி 

Comments