பொதுக்காலம் பதின் நான்காம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் என் அன்பார்ந்த இறைமக்களே. இயேசுவின் அன்புக் கல்வாரிப் பலிக்கு அழைத்து நிற்கின்றேன். பொதுக்காலம் பதின் நான்காம் ஞாயிறு வாரத்தில் நுழையும் எமக்கு இயேசுவின் அழகிய வார்த்தைகள் வாழ்வின் ஆழத்தை தொடுவதோடு மட்டும் அல்லாமல், எமது வாழ்வுக்கான படிப்பினையாகவும் அமைகின்றது.
இறைவார்த்தை
இன்றைய முதலாம் இறைவார்த்தையாக, இறைவாக்கினர் எசேக்கியல் நூல் தரப்படுகின்றது. இவர் குருவாகவும் இறைவாக்கினராகவும் இருந்தமையால், உள்ளத் தூய்மையைக் குறித்து மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். எசேக்கியேல் முதன் முறையாக இறை அழைப்பைப் பெற்று இஸ்ராயேல் மக்களுக்கு இறைவாக்கு உரைக்க அனுப்பபடுவதை இன்றைய முதல் இறைவாக்கு எடுத்தியம்புகின்றது. புனித பவுலின் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகமானது அவரின் உள்ளார்ந்த உணர்வுகளை தெளிவாக விளக்குகின்றது. பவுல் இயேசுவின் மீது கொண்ட அளவற்ற, எல்லையற்ற அன்பும், விசாலமான இதயமும் அவரின் ஒவ்வொரு உணர்வை உணர்த்தும் வார்த்தைகளாக அமைகின்றன. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இயேசுவிற்கு முன்னால் தாழ்ச்சி உடையவர்களே. அவர்களின் பலவீனம் பாவம் செய்வது அல்ல, நேர்மையாய் வாழ்வதே இக்காலத்தின் சவால் என்பதை தெளிவாகக் காட்டுகின்றார். மாற்கு எழுதிய நற்செய்தியில் இயேசுவின் எதிர்ப்புக்கள் அவரின் சவால்கள் குறித்து விபரிக்கின்றார். இயேசுவின் அடையாளங்கள், தோற்றங்கள், அவரின் உறவினர்கள், நண்பர்கள், இடங்கள் அனைத்துமே மக்களின் விமர்சனங்களுக்கு உள்ளான போது, மக்களின் நம்பிக்கையின்மையை கூர்ந்து கவனிக்கின்றார். இவைகள் நன்மைத்தனங்களை இழக்க காரணமாகின்றன.
இயேசுவின் அழைப்பும் அதற்கான மனிதனின் பதில்களும் இலகுவானதல்ல. அப்பதில்களில் எமது பிரமாணிக்கம் இன்று ஒரு சவாலே. “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” எனும் பவுலின் வார்த்தைகள் எமது அழைப்பின் மேன்மையை உணர்த்துகின்றன, எமது அழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான உரைக்கல்லாகவும் அமைகின்றன.
- நாம் பயணிக்கும் இவ்வுலகம் பாதைமாறி செல்கின்றது - பாதைகளை நாம் உருவாக்குவோம்.
- எமது சிந்தனைகள் தெளிவற்றதாய் அமைகின்றன - சிந்தனைகளை நாம் ஒன்றிணைப்போம்.
- எமது பகைமைகள் ஆழமாக செல்கின்றன - அன்பை நாம் விதைகளாக்குவோம்.
- குற்றங்கள் பெருகி, குற்ற உணர்வுகள் அதிகரித்து பிரிவினைகள் பெருகின்றன - புதுமைகளை நாம் உருவாக்குவோம்.
- சீடர்களாக, குருக்களாக, இறைவாக்கினர்களாக அழைக்கப்பட்ட நாம் இயேசுவை புதிதாக படைப்போம், அவரைத் தாங்கும் இதயத்தில் இவ்வுலகை புதுப்பிப்போம். இதற்கான வரங்களைக் கேட்டு இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
கடவுளே! உமது கோவிலின் நடுவில் நாங்கள் உமது இரக்கக்கைப் பெற்றுக்கொண்டோம்; கடவுளே! உமது பெயருக்கு ஏற்ப, உமது புகழும் உலகின் எல்லைவரை எட்டுவதாக. உமது வலக்கை நீதியால் நிறைந்துள்ளது.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, வீழ்ச்சியுற்ற உலகை உம் திருமகனின் தாழ்ச்சியினால் மீண்டும் நிலைநிறுத்தினீரே; அதனால் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து நீர் விடுவித்த உம் நம்பிக்கையாளருக்குப் புனிதப் பேரின்பத்தைத் தந்து அவர்கள் என்றும் நிலையான மகிழ்ச்சி அடைந்திடச் செய்வீராக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.
இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 2-5
அந்நாள்களில், ஆண்டவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன். அவர் என்னிடம், “மானிடா! எனக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இனத்தாராகிய இஸ்ரயேல் மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். இன்றுவரை அவர்களும் அவர்களுடைய மூதாதையரும் எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து கலகம் செய்துள்ளனர்” என்றார். “வன்கண்ணும் கடின இதயமும் கொண்ட அம்மக்களிடம் நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம் போய், ‘தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே’ என்று சொல். கலக வீட்டாராகிய அவர்கள், செவிசாய்த்தாலும் சாய்க்காவிட்டாலும், தங்களிடையே ஓர் இறைவாக்கினர் வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 123: 1. 2. 3-4 (பல்லவி:2cd)
பல்லவி: ஆண்டவரே! எமக்கு இரங்கும்வரை, எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.
1 விண்ணுலகில் வீற்றிருப்பவரே!
உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன். -பல்லவி
2 பணியாளனின் கண்கள் தன் தலைவனின் கைதனை நோக்கியிருப்பதுபோல,
பணிப் பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கைதனை நோக்கியிருப்பது போல,
எம் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எமக்கு இரங்கும்வரை,
எம் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும். -பல்லவி
3 எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே! எங்களுக்கு இரங்கும்;
அளவுக்கு மேலேயே நாங்கள் இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.
4 இன்பத்தில் திளைத்திருப்போரின் வசைமொழி போதும்.
இறுமாந்த மனிதரின் பழிச்சொல்லும் போதும். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 7-10
சகோதரர் சகோதரிகளே,
எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால் நான் இறுமாப்பு அடையாதவாறு பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள்போல் என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது. அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த சாத்தான் அனுப்பிய தூதனைப்போல் இருக்கிறது. நான் இறுமாப்பு அடையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது. அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன். ஆனால் அவர் என்னிடம், “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” என்றார்.
ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான் மனமுவந்து பெருமை பாராட்டுவேன். அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி லூக் 4: 18-19 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருடைய ஆவி என்மேல் உன்ளது; ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6
அக்காலத்தில், இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வு நாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார்.
அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைமக்கள் மன்றாட்டு
குரு: இயேசுவின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள் இயேசுவை இவ்வுலகிற்கு சாட்சிகளாக எடுத்துரைப்பவர்களே. இச்சாட்சிய வாழ்வில் நாம் எடுத்துரைக்கும் எமது விண்ணப்பங்கள் வழியாக இவ்வுலகிற்காக, எமது அயலவர்களுக்காக எமது திரு அவைக்காக மன்றாடுவோம்.
1. வல்லமையின் ஆண்டவரே! உமது திரு அவையை வழிநடத்தும், ஆசீர்வதியும், பகைமைகளில் இருந்து பாதுகாரும், எதிர்ப்புக்கள் மத்தியில் வல்லமையைக் கொடும். திரு அவைக்கான எமது செபங்கள் உயரசெல்லவும், அதற்காக உழைக்கும் அனைத்து பணியாளர்களும் தமது தியாகத்தால், கடின உழைப்பினால், அர்ப்பணத்தினால் திரு அவைக்கு அணிசேர்க்க வேண்டுமென்று, ...
2. வல்லமையின் ஆண்டவரே! உமால் தேர்ந்துகொள்ளப்பட்ட அனைத்து பணியாளர்களும் உமது பாதையில் பயணிக்கவும், உமது வார்த்தையை சொல்லவும், உமது வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவும், உமது அன்பை உலகெல்லாம் பகிரவும் உமது கருவிகளாய் இவர்களை பயன்படுத்த அருள்புரிய வேண்டுமென்று, ...
3. வல்லமையின் ஆண்டவரே! இன்றைய திருப்பலியை சிறப்பிக்கும் குடும்பங்கள் அனைத்தையும் ஆசீர்வதியும். இவர்களின் சாட்சிய வாழ்வினூடாக, சிறந்த திருக்குடும்ப பண்புகளை இவ்வுலகிற்கு கொண்டுசெல்லவும் இவர்களை வழிநடத்த வேண்டும்மென்று, ...
4. வல்லமையின் ஆண்டவரே! கலாசார நவின மயமாக்களுக்குள்ளே நலிவுற்ற சமூகமாக பயணிக்கும் எமது வாழ்வை வழிநடத்தும். நன்மைகள் தீமைகளை தீர்மானிக்கும் நல் அறிவைக்கொடும், பசித்தவர்க்காய் கரம் கொடுக்கும் தாராளமனதைக் கொடும், அதிக பணத்தால் ஆன்மாவை தொலைத்திடா நல் ஆன்மீகத்தைக் கொடும், இதனால் உம்மை என்றும் பற்றிக்கொண்டு வாழ வரமருள வேண்டுமென்று, ...
குரு. இறைவா இன்றைய நாளுக்காக நன்றி சொல்கின்றோம். இன்று எம்மோடு பேசியதற்காய் நன்றி சொல்கின்றோம். இவ்வுலகின் தீமைகளை எதிர்த்திடும் தூய கருவியாய் நீர் தேர்ந்த இறைவாக்கினர்கள், அப்போஸ்தலர்கள் வழியாக நாம் பெற்றுக்கொண்ட அனைத்து தூண்டுதல்களுக்காகவும் நன்றி சொல்கின்றோம். எம்மோடு பயணித்தருளும், நாளும் நாம் எடுக்கும் தீர்மானங்களை வழிநடத்தும். நாம் ஒரே குடும்ப உணர்வோடு உம்மிடம் ஒப்புக்கொடுக்கும் அனைத்து வேண்டுதல்களுக்கும் செவிசாய்த்து அவற்றை நிறைவுசெய்வீராக. எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உமது பெயரின் மாட்சிக்காக நாங்கள் நேர்ந்தளிக்கும் இக்காணிக்கை எங்களைத் தூய்மைப்படுத்துவதாக; விண்ணக வாழ்வுக்கு உரிய நற்செயல் புரிவதில் நாங்கள் நாளுக்குநாள் முன்னேறிச் செல்வோமாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
திருப்பாடல்: 34:8-9 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் ; அவரில் நம்பிக்கை கொள்வோர் பேறுபெற்றோர்.
அல்லது
மத் 12: 8 பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, மாண்புக்கு உரிய கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் மீட்பு அளிக்கும் கொடைகளை நாங்கள் என்றும் பெற்றுக்கொள்ளவும் உம்மை இடையறாது புகழ்ந்தேத்தவும் அருள்வீராக. எங்கள்.
Fr. SJ. Surenthirarajah, OMI

Well done and congratulations on your efforts.
ReplyDelete