திருப்பலி முன்னுரை
இறைமகிமையும், மாட்சியும் என்றும் உங்களுக்கு உரித்தாகட்டும். புலர்ந்துள்ள புதிய நாளிலே இயேசுவின் கல்வாரிப் பலியில் கலந்து, அவரோடு இணைந்து பயணிக்க நாம் ஒன்றுகூடியுள்ளோம். பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வாரத்தில் கால்பதிக்கின்றோம். இந்நாள் ஆசீர்வாதம் நிறைந்த நாளாக அமைவதாக. இன்றைய இறைவார்த்தைகள், இறைவன் தேர்ந்துகொண்டோரை அழைப்பதையும், அழைத்தவரை தமது பணிக்காக அனுப்புவதையும் காண்கின்றோம். சாமுவேலின் அழைப்பு பற்றி முதலாம் இறைவார்த்தையிலும், பேதுறுவின் அழைப்பும் அவரது எதிர்கால பணி பற்றி நற்செய்தி இறைவார்த்தையிலும் எடுத்தியம்புகின்றது. இறைவனின் பார்வையில் விலைமதிக்கப் பெற்றவர்களாக இருக்கும் போது, இறைவனின் உடன் இருப்பும், அவரது வலக்கரமும் எப்போதும் இருக்கின்றது என்பதற்கு இன்றைய இறைவார்த்தைகள் உதாரணங்களாகின்றன. நாமும் இறைவனின் அழைப்பைப் பெற்றுள்ளோம். எம்மை தன் மகளாக, மகனாக தேர்ந்தெடுத்த இறைவன், எம் வழியாக அவர் ஆற்ற இருக்கும் அனைத்துமே அற்புதம். கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார்' எனும் புனித பவுலின் அழகிய வார்த்தைகள் எமது வாழ்வின் உயர்ச்சியையும், மனித மான்பையும் எடுத்தியம்புகின்றன.
ஆகவே, இறைவனின் அன்பு பிள்ளைகளாக, அரச குருத்துவ திருக்கூட்டமாக திகழும் நாம், கடவுளின் அழைப்பிற்கு செவிசாய்த்து, எம்மை அவர் கருவிகளாக மாற்றிட வரம்வேண்டி இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம்.
குறிப்பு: இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும், தமது நாளாந்த வாழ்வுக்கு திரும்பவும், தாங்கள் இழந்ததை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கவும் மன்றாடுவோம். கல்வி இழந்து, பொருளாதாரம் இழந்து தவிக்கும் இம்மக்களுக்கு, இறைவன் ஒரு விடியலைக் காட்டவேண்டி மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி
கடவுளே, உலகம் அனைத்தும் உம்மை ஆராதிக்கும் உம் புகம் பாடிடும் உன்னதரே, உம் பெயருக்குப் பா ஒன்று இசைக்கும். திபா 65:4
திருக்குழும மன்றாட்டு
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் ஆண்டு நடத்துகின்றவர் நீர் உம் மக்களின் வேண்டல்களை இரக்கத்துடன் கேட்டு எங்கள் வாழ்நாள்களில் உமது அமைதியை அளித்தருள்வீராக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6
பதிலுரைப் பாடல் திபா 40: 2,3. 6-7ய. 7டி-8. 9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்!
இரண்டாம் இறைவாக்கு :
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13உ-15ய,17-20
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. யோவா 1: 41.17டி
நற்செய்தி இறைவாக்கு:
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 35-42
விசுவாசிகள் மன்றாட்டு
குரு: இறை அழைப்பை பெற்ற நாம் ஒவ்வொருவரும், அவரின் சுவிகாரப் பிள்ளைகளுக்குரிய உரிமையோடு எமது விண்ணப்பங்களை அவரிடம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. எமது திருஅவைக்காக மன்றாடுவோம்:
இவ்வுலகிலே இறைவன் கொண்டுவந்த உண்மைப் போதனையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொய்மையை இறை வல்லமையோடு போராடி அதில் வெற்றிகொள்ள எமக்காக தினமும் இறைவனின் சந்நிதியில் அருட்கொடைகளை நிறைவேற்றி அருள்வளங்களைப் பெற்றுத்தரும் எமது திருப்பணியாளர்களை ஆசீர்வதித்து அவர்களின் தொடர் பணியிலே உறுதியோடு போராடவும், சவால்கள், துன்பங்களில் துணிந்து நின்று செயற்படவும் இறைவன் அவர்களை வழி நடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எமது பங்கு மக்களுக்காக மன்றாடுவோம்
நாளும் பொழுதும் இடைவிடாமல் உழைக்கும் எம் தந்தையர்கள், குடும்பத்தை கருமணிபோல கண்கலங்காமல் காக்கும் எம் தாய்மார்கள், கல்வியினால் உயர்ந்து, கரம்பிடித்து வளர்க்கும் எம் பெற்றோரின் கண்ணீர் துடைக்க உழைக்கும் எம் பிள்ளைகள் கொண்ட ஓர் அழகான திருக்குடும்பமாக வளரவும், இக்குடும்பங்கள் இறைவனுக்கு சான்றுபகரும் அன்பிய குடும்பங்களாக திகழ அனைத்து பங்கு மக்களையும் உமது ஆசீரால் நிறைத்து வழி நடத்தியருள வேண்டுமென்று
3. இயற்கை அணர்த்தத்தினால் அவதியுறும் மக்களுக்காக மன்றாடுவோம்
துன்பங்கள் ஆயிரம் ஆயிரம் அலைகளாய் எம்மை தேடி வரினும் சோர்ந்து போகாமல், துணிந்து போராட வலிமையைத் தந்தருளும். ஆண்டவரே, பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் எண்ணற்ற மக்கள் எம் கண்முன்னே மடிந்துபோகும் அவல நிலையைக் கண்ணோக்கியருளும். விடுதலை பெற முடியாமல், ஒவ்வொரு நாளும் உயிருக்காய் போராடும் அனைத்து மக்களையும், நீர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நனைத்து தூய்மையாக்கி புது விடுதலையையும், புது வாழ்வையும் கொடுத்தருள வேண்டுமென்று
4. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்
எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், பயங்கரவாத கொள்கைகள் மாற்றப்படவும், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: ஆண்டவரோடு சேர்ந்திருப்பவர் அவருடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் எனும் புனித பவுலின் உரைக்கல்லிற்கேற்ப, நாமும் இறைவனோடு இணைந்து வாழ எம்மையும் எமது வாழ்வின் அழைப்பையும் ஒப்புக்கொடுப்போம். நம்பிக்கையுடன் நாம் அவரிடம் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எம்மை தமது அருளால் இணைக்கச் செய்வாராக. எங்கள் ஆண்டாவாராகிய கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி:
காண். திபா 22:5 என் கண்முன்னே நீர் எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்தீர் நிரம்பி வழிகின்ற எனது பாத்திரம் எத்துணை மேன்மையானது!
அல்லது
1 யோவா 4:16 கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம் நம்புகிறோம்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:
ஆண்டவரே, உமது அன்பின் ஆவியை எங்கள் மீது பொழிந்தருளும் இவ்வாறு ஒரே விண்ணக உணவால் நிறைவு பெற்ற நாங்கள் ஒரே பரிவிரக்கத்தால் ஒருமனப்பட்டிருக்கச் செய்வீராக. எங்கள்.

Comments
Post a Comment