வருகைப் பல்லவி: காண். மலா 3:1; 1 குறி 28:12
இதோ, பேரரசராம் ஆண்டவர் வருகிறார்; அரசும் ஆற்றலும் ஆட்சியும் அவரது கையிலே.
திருப்பலி முன்னுரை
புதிய இளங்காலைப் பொழுதினிலே, இறை உள்ளங்களாக இறை சந்நிதானம் ஒன்று கூடியுள்ள என் அன்பு உறவுகளே! அன்னையாம் திரு அவை இன்றைய நாளிலே ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழாவைக் கொண்டாட அழைக்கின்றாள். இதை வரலாற்றிலே, 'மூவிராசாக்கள் பெருவிழா' என்றும் அழைப்பர். கீழைத்தேய திரு அவையிலே இன்றைய நாளைத் தான் கிறிஸ்து பிறப்பின் நாளாகக் கொண்டாடுவர். இதற்கான காரணம், இன்றைய நாளில் தான் கிறிஸ்து எனும் இறைமகன் தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துகின்றார்.
'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' எனும் புனித மத்தேயுவின் நற்செய்தி அனுபவம், பல அர்த்தங்கள் நிறைந்த ஆழ்ந்த விளக்கங்களை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. இயேசுவை அரசராக, மாந்தர் அனைவரின் வீரனாக அடையாளம் கண்டுகொண்டவர்கள் இந்த ஞானிகள். இயேசுவை இவ்வுலகிற்கு எண்பித்தது ஒரு புதிய விடிவெள்ளி, அதை துள்ளியமாகக் கண்டுகொண்டவர்கள் இந்த ஞானிகள். இவர் இறை மகன் என்பதன் வெளிப்பாடு, இவர்கள் செலுத்தும் ஆராதனையும் வணக்கமுமே.
இயேசு தன்னை தொடர்ந்தும் வெளிப்படுத்த இருக்கின்றார். இத்தொடர் வெளிப்பாட்டிலே நானும் இயேசுவைக் கண்டுகொள்ள வேண்டும். ஞானிகளைப் போல், நாம் எத்திசை சார்ந்தவர்களாகவோ, எந்நிலையில் வாழ்பவர்களாகவோ, எந்தெந்த பட்டப் படிப்புக்களை படித்தவர்களாகவோ, எவ்வகை சார்ந்தவர்களாகவோ இருந்தாலும் பரவாயில்லை. இயேசுவைக் கண்டுகொள்வதே எமது நோக்கமும் தேடலுமாக இருக்கவேண்டும். இயேசுவின் பிறப்பிற்கு கொடுக்கப்பட்ட பரிசுகள், அவர்களின் விலைமதிப்பில்லா பொன்னோ பொருளோ அல்ல, மாறாக, அவர்களின் அளவில்லா மகிழ்ச்சி நிறைந்த இதயமே. இது தான் எமது அன்பின் பரிசாக அமைய வேண்டும். இந்த சிந்தனைகளை மனதில் கொண்டு தொடரும் அன்பின் பலியிலே கலந்து இறைவரம் வேண்டி செபிப்போம்.
திருக்குழும மன்றாட்டு :
இறைவா, விண்மீன் வழிநடத்த உம் ஒரே திருமகனை இன்று பிற இனத்தாருக்கு வெளிப்படுத்திய நீர் கனிவுடன் வரம் அருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உம்மை ஏற்கெனவே நம்பிக்கையால் அறிந்துள்ள நாங்கள் உமது மாட்சியின் தோற்றத்தைக் கண்டுகளிக்கும்வரை வழிநடத்தப்படுவோமாக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6
பதிலுரைப் பாடல் திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 2: 2
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
இறைமக்கள் மன்றாட்டு
குரு: ஞானிகள் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். இன்று எம்மிடம் இருப்பதை இயேசுவிக்கு காணிக்கையாகக் கொடுப்போம், எமது விண்ணப்பங்கள் விரும்பிக்கேட்கும் இறையருள், அவர் அளிக்கும் அன்பின் பரிசாக அமைவதாக.
1. அன்பின் இறைவா! இயேசுவின் பிறப்பின் செய்தியை உலகமெங்கும் அறிவிக்கும் வாஞ்சைகொண்ட எம் திரு அவைப் பணியாளர்கள் என்றும் எப்பொழுதும் உம்மை தமது பணியினாலும், ஆர்வத்தினாலும் தாங்கிச் செல்லும் வாஞ்சையை அளித்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அருள் வழங்கும் இறைவா! உம்மைக் காணவேண்டும் எனும் ஆர்வத்திலே ஏங்கிக் கொண்டிருக்கும் பல உள்ளங்களுக்கு, ஞானிகள் தந்த எதிர்நோக்கும், நம்பிக்கையும் இவர்கள் உள்ளங்களுக்கு மகிழ்வை தருவதாக. தமது வாழ்வின் தேடலில், தொடர்ந்தும் இயேசுவை கண்டுகொள்ளவேண்டிய வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3.அமைதியின் இறைவா! எமது நாட்டின் பொருளாதார இக்கட்டான சூழ்நிலையில் மீழமுடியாமல் தவிக்கும் உள்ளங்களுக்கு, புதிய வாழ்வின் மாற்றங்கள், தீர்மானங்கள், எடுகோள்கள், புதிய வாழ்வின் பயணத்திற்கு அருள்பாலிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நாம் வாழும் சமூகத்தில், ஆரோக்கியமான சமூக விழுமியங்கள் கட்டி எழுப்பப்படவும் ஒருவரை ஒருவர் ஏற்று, அன்புடன் தாங்கி அமைதியில் நிறைவு காணவும், எம்மக்கள் ஒவ்வொருவரின் வாழ்வின் நிலைகளை ஏற்று வாழவும், நாம் சந்திக்கின்ற சவால்களுக்கு சரியான வழிகோலவும், தொழில் துறைகளை ஆசிர்வதிக்கவும், கல்வி வாழ்வை மேம்படுத்தவும், குடும்ப பொறுப்புக்களை சீரமைக்கவும் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. வல்லமையின் இறைவா! கல்விப் பொதுத்தராதர உயர்தர பரிட்சை எழுதும் எமது பிள்ளைகளுக்கு, துணிவையும், ஆற்றலையும், சவால்களை சந்திக்கும் திடத்தையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும் என உமது வரங்களிலும் வல்லமையிலும் நம்பிக்கை கொண்டு உமது பாதம் ஒப்புக்கொடுக்கும் எமது விண்ணப்பங்களுக்கு செவிசாய்த்து, எமது குடும்பங்களாய், பங்கு சமூகமாய், அன்பின் உறவுகளாய் எம்மை வழிநடாத்தி, அருளால் நிறைத்து ஆசித்தருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உமது திரு அவையின் காணிக்கைகளைக் கனிவுடன் கண்ணோக்க உம்மை வேண்டுகின்றோம்: பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் இப்பொழுது ஒப்புக்கொடுக்கப்படவில்லை; எனினும் இக்காணிக்கைகள் வழியாக இயேசு கிறிஸ்து அறிக்கையிடப்படுகின்றார், பலியிடப்படுகின்றார், உட்கொள்ளப்படுகின்றார் என்பதை நாங்கள் உணரச் செய்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
திருவிருந்துப் பல்லவி :காண். மத் 2:2
கிழக்கில் அவரது விண்மீனைக் கண்டோம்; ஆண்டவரை வணங்கக் காணிக்கைகளுடன் வந்திருக்கிறோம்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே, எங்கும், எப்பொழுதும் விண்ணக ஒளியாய் நீர் எங்கள் முன் செல்ல உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் பங்கேற்க வேண்டும் என நீர் விரும்பும் மறைநிகழ்வைத் தூய்மையான உள்ளுணர்வுடன் கண்டுகொள்ளவும் தகுதியான ஆவலுடன் அறிந்துகொள்ளவும் செய்வீராக. எங்கள்.
Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Comments
Post a Comment