Sunday, 21 January 2024

பொதுக் காலம் மூன்றாம் ஞாயிறு - 21.01.2024

 பொதுக் கால 3ஆம் ஞாயிறு 



முன்னுரை

(வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)

இறை உறவில் இணைந்து, இறை சமூகம் அமைத்து, புதிய வழியில், புதிய நற்செய்தியின் கருவிகளாய் ஆகிட ஒன்றுகூடியிருக்கும் என் அன்பு உறவுகளே! இயேசுவின் அன்பின் பெயரால் உங்களை வரவேற்கின்றோம். இயேசுவின் கல்வாரிப்பலியில் இணைந்து, அவர் காட்டிய அன்பைப் பகிர்ந்து, தியாகத்தால் வாழ்விக்கலாம் என்ற புதிய எண்ணக்கருவை இன்றைய நாளும், இறைவார்த்தைகளும் எமக்கு நினை{ட்டுகின்றன. 

கடவுளின் செய்தியை அறிவிக்கவென தேர்ந்துகொள்ளப்பட்ட யோனா, இறைவனின் வார்த்தையை நம்பினார், அதை ஏற்றுக்கொண்டார், குறிக்கப்பட்ட மக்கள் இனத்திற்கு அறிவிக்க துணிந்து சென்றார். கடவுளின் அழைப்பிற்கு செவிசாய்த்து, தன்னை இசைவாக்கிக் கொண்டார். இதே அழைப்புப் பற்றி குறிப்பிடும் மாற்கு நற்செய்தியாளர், இயேசுவின் அழைப்பிற்கு தங்களின் முழு ஒத்துழைப்பையும் அழைத்ததன் வெளிப்பாட்டை இங்கே கோடிட்டுக் காட்டுகின்றார். அழைப்பிற்கு, ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் நிலை முக்கியமில்லை, அவர்கள் செய்யும் தொழில் முக்கியமில்லை, அவர்களின் ஆற்றல் திறமை முக்கியமில்லை, அவர்கள் இயேசுவோடு அமைக்க இருக்கும் பாதையும், பயணமும், நோக்கமுமே முக்கியமானதாகும்.

ஆகவே, எமது வாழ்வு எமக்கு சொல்லித்தரும் அழைத்தல் பயணம் பற்றி சிந்திப்போம். நாம் எந்த நிலையில் இருக்கின்றோமோ, அதே நிலையில் எமக்கு முன் நிற்கும் சவால்கள், போராட்டங்கள் மத்தியில், எமது அழைத்தல் வாழ்வில் துணிவோடு பயணிக்கவேண்டிய அருளைக் கேட்டு மன்றாடுவோம். நாம் நல்லவர்களாக, நேர்மையுள்ளவர்களாக, மன்னிக்கும் மனம் கொண்டவர்களாக, அனைவரையும் அரவணைக்கும் பரந்த மனம் படைத்தவர்களாக வாழ, வளர இப்பலியில் தொடர்ந்தும் மன்றாடுவோம்.


வருகைப் பல்லவி

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள் உலகம் அனைத்துமே ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள் ஆற்றலும் எழிலும் அவர் திருமுன் உள்ளன் மாட்சியும் புகழ்ச்சியும் அவரது திருத்தலத்தில் உள்ளன.

'காண். திபா 95:1,6.

உன்னதங்களிலே' சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு

என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் செயல்களை உமது திருவுளத்துக்கு ஏற்ப நெறிப்படுத்தியருளும் இவ்வாறு உம் அன்புத் திருமகனின் பெயரால் நாங்கள் மிகுதியான நற்செயல்கள் புரிந்திடத் தகுதி பெறுவோமாக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு:

இறைவாக்கினர் யோனா நூலிலிருந்து வாசகம் 3:1-5, 10

நினிவே மக்கள் தீய வழிகளினின்று விலகினர்.

பதிலுரைப் பாடல் திபா 25: 4-9

பல்லவி: ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்;!

இரண்டாம் இறைவாக்கு :

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 29-31 இந்த உலக அமைப்பு கடந்துபோகக் கூடியது 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்


நற்செய்தி இறைவாக்கு: மாற்: 1: 15.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 14-20

மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்


விசுவாசிகள் மன்றாட்டு

குரு: 'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று மொழிந்த இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு எமது தேவைகள் விண்ணப்பங்களை இறைவன் பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. இறை அழைத்தலை பெற்று பணிபுரியும் திருநிலைப்பணியாளர்கள் அனைவரும் இறையாசீர் நிரம்பப் பெற்று, இறைவனின் மக்களுக்காய் உழைக்கும் வாஞ்சை கொண்டு வாழ வேண்டிய வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இறை வேண்டலின் ஆண்டாகிய இவ்வாண்டிலே, இறை சமூகமாய் ஒன்றிணைந்து, பயணிக்கும் திரு அவையின் வளர்ச்சிக்காகவும், அதன் மேன்மைக்காகவும் தொடர்ந்து இடைவிடாமல் தங்கள் செபத்தாலும் தப, ஒறுத்தல் முயற்சிகளாலும் அணிசேர்க்கவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமது பங்கில் உள்ள சிறுவர்கள் விசுவாசத்தில் நன்கு வளர்ந்து, இறைபக்தி, தெய்வபயம் என்பவற்றில் உறுதியாக திளைக்கவும், எம் இளைஞர்கள் வாழ்வின் நோக்கத்தையும் அதன் குறிக்கோளையும் நன்கு உணர்ந்து வாழவும், தம்மேல் சுமத்தப்படும் பொறுப்புக்களின் கனாகணம் உணர்ந்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நாட்டின் பொருளாதார கெடுபிடியால் சிக்கித் தவிக்கும் எமது உறவுகள் மற்றும் இயற்கை அணர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகள் அனைவரும் வாழ்வோடு தொடர்ந்து போராடும் வல்லமையை பெற்றிடவும், அரசியல் தலைவர்கள் அகந்தை தவிர்த்து, அநுதினம் ஏங்கும் இவர்களுக்காய் வாழும் வரம்பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. ஒவ்வொரு நாளும் பல்வேறு காரணங்களால் இறந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் இறைவன் தமது இரக்கத்தால் இளைப்பாறுதல் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும் ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர்' எனும் திருப்பாடல் வழியாக, இறைவா நீர் நல்லவர் என்று நம்பும் உன் அடியார்கள் நாங்கள் எமது பலவீனத்திலும், இயலாமையிலும் உம்மிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுக்கின்றோம். எமது வாழ்வின் போராட்டத்திலே, நாம் சந்திக்கும் சவால்கள் மத்தியிலே, உமது அருளும், இரக்கமும் நீர் தரும்  ஆசீர்வாதமாய் அமைவதாக. நாம் உம் பதம் தந்த அனைத்து விண்ணப்பங்களையும் ஏற்று நிறைவேற்றுவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் காணிக்கைகளைக் கனிவுடன் ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: இவற்றைப் புனிதப்படுத்தி, இவை எங்கள் மீட்புக்குப் பயன்பட அருள்புரிவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி:

காண். திபா 33:6 ஆண்டவரை அணுகிச் செல்லுங்கள், அவரது ஒளியைப் பெறுவீர்கள் உங்கள் முகங்கள் அவமானத்திற்கு உள்ளாகாது!

அல்லது

யோவா 8:12 உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் ஆனால் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார், என்கிறார் ஆண்டவர். 

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:

எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிய உம்மை வேண்டுகின்றோம்: அதனால் புத்துயிர் அளிக்கும் உமது அருளைப் பெற்றுள்ள நாங்கள் உமது கொடையை முன்னிட்டு என்றும் பெருமை கொள்வோமாக. எங்கள்.

No comments:

Post a Comment

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...