பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
“மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?
என் அன்புக்கினிய இறை மக்களே! இயேசுவின் இறை வல்லமையும், ஆசீரும் இன்றும் என்றும் உங்களோடு இருப்பதாக. இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு வாரத்தில் கால் பதிக்கின்றோம். இயேசுவின் உயிர்ப்பின் செய்தி தொடர்ந்தும் சீடர்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையில் உறுதியையும் அளிக்கின்றது. இறப்பு என்பது இனி இல்லை, மாறாக இயேசுவோடு வாழ்வு ஒன்று உண்டு என்பதன் அர்த்தம் இன்று தெளிவுபடுத்தப்படுகின்றது. நாம் தீமையின் மக்கள் அல்ல, பாவத்தில் பிறந்தவர்களும் அல்ல, மாறாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இறைவனுக்கு சொந்தமானவர்கள் எனும் உண்மையை தனது வாழ்வின் அர்பணத்தாலும், தனது பாஸ்கா மறைபொருளின் நிறைவுதலாலும் காட்டிநிற்கின்றார் இயேசு. இதனால் நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம்.
ஆகவே, எமது உறவை வலுப்படுத்துவோம், மற்றவர்களை மதித்து வாழ்வோம், அன்பு ஒன்றே அழகானது என்பதை அறிக்கையிடுவோம். இயேசு தரும் உயிர்ப்பின் செய்தி எமது வாழ்வில், குடும்பங்களில் தொடர்ந்தும் மிளிர இறைவரம் வேண்டி இப்பலியில் இணைந்திடுவோம்.
விசேட விதமாக, திரு அவைக்கான புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் பணியில் தம்மை இணைத்திருக்கும் அனைத்து கருதினால்களுக்கும் இறைவனின் வழிநடத்தலும், தூய ஆவியின் ஞானமும் அளித்துத் எமக்கான புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அருள்கூர்ந்தருள வேண்டுமென்று இப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - காண். திபா 65:1,2
அனைத்துலகோரே, கடவுளைப் போற்றி ஆர்ப்பரியு ங் கள், இசை பாடுவீர்; அவரது புகழை அவரது பெயருக்கு இசை பாடுவீர்; மாட்சிப்படுத்துங்கள், அல்லேலூயா.
"உன்னதங்களிலே" சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, புதுப்பிக்கப்பெற்ற இளமை உணர்வுடன் உம் மக்கள் என்றும் அக்களிப்பார்களாக; அதனால் உம் சொந்த மக்கள் என்ற மாட்சியை மீண்டும் பெற்றுள்ள நாங்கள் உயிர்ப்பின் நாளுக்காகப் பேரின்பத்துடனும் உறுதியான எதிர்நோக்குடனும் காத்திருக்கச் செய்வீராக. உம்மோடு. "நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
முதல் இறைவாக்கு
இவற்றுக்கு நாங்களும் தூய ஆவியும் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 27b-32. 40b-41
அந்நாள்களில்
தலைமைக் குரு திருத்தூதர்களை நோக்கி, “நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!” என்றார். அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனமாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர்.
இனி இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது என்று திருத்தூதர்களுக்குக் கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 30: 1,3. 4-5. 10-11a,12b (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்; ஏனெனில் என்னைக் கைத்தூக்கிவிட்டீர்.
அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்;
ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கிவிட்டீர்;
என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
3 ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;
சாவுக்குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். - பல்லவி
4 இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5 அவரது சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும்;
அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;
மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. - பல்லவி
10 ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்;
என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11a நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்;
12b என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். - பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் பெறத் தகுதி பெற்றது.
திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 11-14
யோவான் நான் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: “கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது” என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள்.
பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், “அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், ‘ஆமென்’ என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக் குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
இயேசு அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று கூறி, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.
இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
படகை விட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளை மேய்” என்றார்.
மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார்.
இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணி வளர். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், “என்னைப் பின்தொடர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது குறுகிய வாசகம்
இயேசு அருகில் வந்து அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.
† யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14
இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்” என்றார். அவர்கள் “நாங்களும் உம்மோடு வருகிறோம்” என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், “பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். அவர், “படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.
இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்” என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந் திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.
படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்” என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், “உணவருந்த வாருங்கள்” என்றார். சீடர்களுள் எவரும், “நீர் யார்?” என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
குரு: நாம் இயேசுவின் வார்த்தையைக் கடைப்பிடித்தால், கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; ஆகவே, இயேசுவின் வார்த்தையில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய் எமது தேவைகளை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.
1. வல்லமையின் இறைவா, எமது திரு அவையின் பணியாளர்கள் உமது அன்பில் என்றும் நிலைத்திருந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்ற உமது வல்லமையை அளித்திட வேண்டுமென்று...
2. வல்லமையின் இறைவா, எமது இளையோர் தமது இளமை வாழ்வை ஒரு கொடையாக ஏற்று, அது தரும் பலத்தையும், வாழ்வின் அழகையும் திரு அவையின் உயர்வுக்கும், இயேசுவின் நற்செய்திக்கும் பயன்படுத்த உமது வல்லமையை அளித்திட வேண்டுமென்று...
3. வல்லமையின் இறைவா, எமது குடும்பங்களின் உயர்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைக்கும் எமது பெற்றோர்கள் என்றும் ஆசீர்வதிக்கப்படவும், எந்த நிலையிலும் தமது பிள்ளைகளின் மேல்கொண்ட அன்பை விட்டு விலகிடா வரம் அருளவேண்டுமென்று...
4. வல்லமையின் இறைவா, நாளுக்கு நாள் வீதி விபத்துக்களிலும், மற்றும் போதை பாவனையாலும் தமது உயிரை மாய்த்துக்கொண்டிருப்போர் அதிகரிக்கும் இச்சூழலில், எமது பிள்ளைகள், உறவுகள் அனைவரும் வாழ்வின் பெறுமதி அறிந்து செயற்படவும், தமக்காக வாழும் பல உள்ளங்கள் மத்தியில் தமது பொறுப்பை செவ்வனே உணர்ந்து செயற்பட வேண்டிய அருளை பொழிந்திட வேண்டுமென்று...
5. வல்லமையின் இறைவா, இவ்வுலகில் நடைபெறும் போர்கள் நிறுத்தப்படவும், பஞ்சம், பசி, பட்டினியால் மாண்டிடும் சமூகம் மீட்கப்படவும் வேண்டிய அருளையும் வல்லமையையும் அளித்திட வேண்டுமென்று...
6. வல்லமையின் இறைவா, எமது திரு அவைக்கான புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்மை நிறை வாழ்வுக்கு அழைத்துச் செல்லவும் இயேசுவின் உண்மை நற்செய்தியை தனது ஞானத்தாலும், அறிவாலும் அவர் மந்தைகளாகிய எமக்கு பறைசாற்றிட அருள்கூர்ந்திட வேண்டுமென்று, ...
குரு: இறைவா, உமது உயிர்ப்பின் மகிழ்ச்சி என்றும் எமது உள்ளங்களுக்கு நிறைவை தருவதாக, அமைதி தேடி அலையும் பல உள்ளங்களுக்கு ஆறுதலைத் தருவதாக, உறவை இழந்து தவிக்கும் பலருக்கு உடன் இருப்பை அளிப்பதாக. இவ் உணர்வுகளோடும் எண்ணங்களோடும் நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு நீர் செவிசாய்த்து, அருளை பொழிவீராக. எங்கள்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, அக்களிப்புறும் திரு அவையின் காணிக்கைகளை ஏற்றுக்கொள்ள உம்மை வேண்டுகின்றோம்: இப்பெரும் மகிழ்ச்சிக்கு உரிய காரணத்தை நீர் தந்திருப்பதால் அதன் பயனாகிய முடிவில்லாப் பேரின்பத்தையும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி - காண். யோவா 21:12-13
இயேசு தம் சீடர்களிடம், ''உணவருந்த வாருங்கள் . எல் அப்பத்தை எடுத்து, அவர்களிடம் கொடுத்தார், அல்லேலூயா.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, நிலையான மறைநிகழ்வுகளால் நீர் புதுப்பிக்கத் திருவுளமான உம் மக்களைக் கனிவுடன் கண்ணோக்கியருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் நாங்கள் மாட்சிக்கு உரிய உடலின் அழிவற்ற உயிர்த்தெழுதலுக்கு வந்து சேர அருள்வீராக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி