பொதுக்காலம் இருபத்து ஆறாம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
நாடு விளங்கிட வீடு துலங்கிட நல்லவர் பாவிகளும்
கேடு மறைந்திட கீழ்நிலை மாறிட கேட்டதும் ஓடிவரும்!
பாடுபவர் இதை படிப்பவர்க் எல்லாம் பரமனின் வீடு வரும்!
எம் இல்லங்களில் அவர் ஆவி புகுந்து நன்மைகள் கோடிவரும்!
இறை இயேசுவில் என் பிரியமுள்ள உறவுகளே! கோடி நன்மைகள் கூடியே எம்மைத் தேடி வரும் இத் தியாகப் பலியில் எம்மை இணைத்துக் கொண்டாட நாம் இன்று கூடிவந்துள்ளோம். பொதுக்காலம் இருபத்து ஆறாம் ஞாயிறு வாரத்தில் நுழைகின்ற எமக்கு, கல்வாரியின் தியாகம் கொண்ட எம் கிறிஸ்தவ வாழ்வில் இயேசுவின் இரத்தம் எம்மை தூய்மையாக்கி, உன்னத நிலை காணச் செய்கின்றது என்றால், நாமும் அதை எமது நாளாந்த வாழ்வில் உணர்ந்துவாழ இன்று ஆயத்தம் செய்வோம்.
இன்றைய இறைவார்த்தைகள் எமக்கு தரும் செய்தி புதியதே. தூய ஆவியால் தூண்டப்பெற்ற அனைவரும் இறைவனின் வார்த்தையை உரைக்க வல்லமையுடைவர்கள் என்பதை இன்றைய முதலாம் இறைவாக்கு எண்பிக்கின்றது. இதயத்தில், எண்ணத்தில், எமது செயல்களில் கிறிஸ்துவைத் தாங்கும் நாம், பணத்தால், பெருமையால், ஆணவத்தால் அதை தகர்துவிடக் கூடாது என்பதை தனது திருமுகத்தில் விளக்குகின்றார் திருத்தூதர் யாக்கோபு. மனிதன் இறைவனைத் தாங்கும் பேற்றினை பெற்றுள்ளான் இதனால், பாவம் அவனை அணுகக்கூடாது என்றும், பாவத்திற்கு அடிமைப்பட்ட வாழ்வில் அதைத் தூண்டும் எந்த சக்திகளும் இருத்தலாகாது எனவும் விளக்குகிறார் புனித மாற்கு.
இன்று, அன்பை பகிரும் பலர் இவ்வுலகத்தில் தம்மை அர்ப்பணமாக்குகின்றனர், தமது உள்ளத்து மகிழ்ச்சியால் தாம் வாழும் குடும்பத்தில் அமைதியயும், நன்மைகளையும் விதைகளாக்குகின்றனர், எமது சமூகத்தில் நேர்மையோடும், உண்மையோடும் பலர் வாழ்ந்தும், பலரை வாழ்வித்தும், புதிய சமூகத்திற்கு வித்திட்டும் வாழ்ந்து மாண்டுள்ளனர், பல்வேறு எதிர்ப்புக்கள் மத்தியிலும், பொறுமையோடும், தாழ்ச்சியோடும் நல்ல தலைவர்களாக வாழ்ந்துகொண்டும் இருக்கின்றனர். இவ்வாறு வாழும் பல நூறு உள்ளங்களில் மிளிரும் பண்புகள், தூய ஆவியின் செயல்களே, இவர்கள் வழியாக நாம் பெறும் செல்வங்கள் இறைவன் தரும் கொடைகளே. இதை நாம் உணார்ந்து வாழ வேண்டும். இதையே இன்றைய இறைவார்த்தைகள் உணர்த்தி நிற்கின்றன. எனவே, நாம் தொடங்கும் எமது வாழ்வு புதியதாக அமையட்டும், நாம் எடுக்கும் தீர்மானங்கள் தூய ஆவியின் கொடைகளையும் கனிகளையும் தாங்கட்டும். இதற்கான வரங்களைக் கேட்டு தொடரும் எமது கல்வாரிப் பலியில் இணைந்திடுவோம்.
வருகைப் பல்லவி
ஆண்டவரே, நீர் எங்களுக்குச் செய்த யாவற்றையும் உண்மையான தீர்ப்போடு செய்திருக்கிறீர். ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராக பாவம் செய்தோம். உம் கட்டளைகளுக்குப் பணிந்தோமில்லை அனால் உம் பெயரை மாட்சிப்படுத்தும்; உமது இரக்கப் பெருக்கிற்கு ஏற்ப எங்களை நடத்தும்.
திருக்கும் மன்றாட்டு
இறைவா, எல்லாவற்றுக்கும் மேலாக மன்னிப்பு அளிப்பதிலும் இரக்கம் காட்டுவதிலும் நீர் எல்லாம் வல்லவர் என வெளிப்படுத்துகின்றீர்; இவ்வாறு உமது அருளை எங்கள் மீது நிறைவாகப் பொழிவதால் நாங்கள் உம் வாக்குறுதிகளை ஆர்வமுடன் நாடி விண்ணக நலன்களில் பங்குபெறச் செய்வீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!
எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 11: 25-29
அந்நாள்களில்,
ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார்; அவரில் இருந்த ஆவியில் கொஞ்சம் எடுத்து எழுபது மூப்பருக்கு அளித்தார்; ஆவி அவர்கள் மேல் இறங்கவே அவர்கள் இறைவாக்கு உரைத்தனர்; அதன் பின்னர் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.
இரண்டு மனிதர் பாளையத்திலேயே தங்கி விட்டனர்; ஒருவன் பெயர் எல்தாது, மற்றவன் பெயர் மேதாது. அவர்கள்மீதும் ஆவி இறங்கியது; பதிவு செய்யப்பட்டவர்களில் இவர்களும் உண்டு; ஆனால் அவர்கள் கூடாரத்துக்குச் சென்றிருக்கவில்லை.
ஆகவே அவர்கள் பாளையத்திலேயே இறைவாக்கு உரைத்தனர். ஓர் இளைஞன் ஓடி வந்து மோசேயிடம், “எல்தாதும் மேதாதும் பாளையத்தில் இறைவாக்கு உரைக்கின்றனர்” என்று சொன்னான். உடனே தேர்ந்தெடுக்கப்பட்டோரில் ஒருவரும் மோசேயின் ஊழியரும் நூனின் மைந்தருமான யோசுவா, “மோசே! என் தலைவரே! அவர்களைத் தடுத்து நிறுத்தும்” என்றார். ஆனால் மோசே அவரிடம், “என்னை முன்னிட்டு நீ பொறாமைப்படுகிறாயா? ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு!” என்றார். பின் மோசேயும் இஸ்ரயேலின் மூப்பரும் பாளையத்துக்குத் திரும்பினர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 19: 7,9. 11-12. 13 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.
7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது.
ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.
9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி
11 அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்.
அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு.
12 தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்?
என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். -பல்லவி
13 ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும்.
அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;
அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;
பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6
செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப் போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே!
உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது. இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால் அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 17: 17b,ய
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
† மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48
அக்காலத்தில்
யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”
கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
இறைமக்கள் மன்றாட்டு
1. நன்மைகளின் ஊற்றே இறைவா! உமது ஆவியின் கொடைகளையும் வரங்களையும் உமது திரு அவை வழியாக எமக்கு நிறைவாகப் பொழிந்தருளும். தமது அர்ப்பணத்தால் இவற்றை நிறைவேற்றும் அனைத்து பணியாளர்களும் இவ்வுலகின் நிறை உண்மைக்காக உழைக்கவும், குருத்துவம் எனும் உயரிய அருட் கொடையின் வழியாக இவ்வுலகை புதுப்பிக்கும் பணியில் தம்மை முழுமையாக இணைத்திட வேண்டுமென்று, ...
2. நன்மைகளின் ஊற்றே இறைவா! எமது நாட்டில் நடைபெற்ற தேர்தல் வழியாக நீர் எமக்கு தந்த நாட்டுத் தலைவருக்காக நன்றிசொல்லி மன்றாடுகின்றோம். புதிய மாற்றங்கள் ஏற்பட்டு, இந்நாடு நிறைவை நோக்கி பயணிக்கும் பாதையில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டுமென்று, ...
3. நன்மைகளின் ஊற்றே இறைவா! இவ்வுலகின் பல்வேறு கோணங்களில் நடைபெறும் யுத்தங்களால் பல ஆயிரம் உயிர்களை பலிகொடுத்தும், வீடுகள், சொத்துக்களை பறிகொடுத்தும், சூழல் மாசடைந்தும், உணவின்றி, சுகாதார வசதிகள் இன்றி பாதிப்புற்று தவிக்கும் உறவுகளுக்கு ஆறுதலாக இருந்தருளும். அன்பு ஒன்றே இவ்வுலகில் தீமைகளையும் அதன் செயற்பாடுகளையும் மாற்றவல்லது என்பதை அனைவரும் உணர்ந்து புதிய மாற்றங்களுக்காக உழைக்கவும் வரமருளவேண்டுமென்று, ...
4. நன்மைகளின் ஊற்றே இறைவா! எமது பிள்ளைகளின் கல்வி வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். நவினத்துவ வேகத்தில் பயணிக்க விரும்பும் எம் பிள்ளைகள், விழுமியங்களை மறந்து, மதிப்பை இழந்து, குடும்ப பாசம் மறந்து வாழ நினைக்கும் எமது பிள்ளைகளை வழிநடத்தும். கற்பவற்றை கசறட கற்று, காலத்தால் அழியாத வரலாற்றுக்கு வழிசமைக்கும் பொறுப்புள்ள பிள்ளைகளாக திகழவேண்டுமென்று, ...
5. நன்மைகளின் ஊற்றே இறைவா! நீர் தந்த குடும்பங்களை ஆசீர்வதியும். பிரிவுகளை அல்ல - ஒன்றிப்பை ஏற்படுத்தவும், வெறுப்பை அல்ல - அன்பை சுவீகரிக்கவும், வீண் வார்த்தைகளை அல்ல - புரிந்துணர்வுள்ள உணர்வுகளை வெளிப்படுத்தவும், ஆபத்தான உறவுகளை அல்ல - விசுவாசத்தை விதைகளாக்கும் சந்தர்ப்பங்களை விளை நிலங்காளாக்கிட வரமருளவேண்டுமென்று, ...
காணிக்கைந்து மன்றாட்டு
இரக்கமுள்ள இறைவா, நாங்கள் அளிக்கும் இக்காணிக்கை உமக்கு ஏற்றதாக மாறிட உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது ஆசி அனைத்தின் ஊற்று எங்களுக்குத் திறக்கப்படுவதாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
காண் திபா 89-50 ஆண்டவரே, உம் ஊ ழியனுக்கு நீர் தந்த வாக்கை நினைவு கூரும்; அதில் நீர் எனக்கு நம்பிக்கை அளித்தீர். இது என் துன்பத்தில் எனக்கு ஆறுதல் அளிக்கின்றது.
அல்லது
யோவா 2:16 இதில் கடவுளின் அன்பை அறிந்து கொண்டோம். ஏனெனில் அவர் நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நாம் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, விண்ணக மறைநிகழ்வு எங்கள் மனதையும் உடலையும் சீர்படுத்துவதாக, நாங்கள் கிறிஸ்துவின் இறப்பை அறிவிப்பதால் அவருடன் இணைந்து அவருடைய மாட்சியில் பங்கேற்பவர்களாக இருப்போமாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி