திருப்பலி முன்னுரை
இன்றைய நாளில் நாம் அனைவரும் பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாரத்தை கொண்டாடுகின்றோம். இவ்வாரத்தை இறைவனின் அருளோடும், ஆசீரோடும் ஆரம்பிக்கின்றோம். நாம் பங்குபெற்றும் இத்திருப்பலி வழியாக இயேசுவின் கல்வாரி அன்பை சுவைக்கவும், அவ்வன்பின் அன்பின் வெளிப்பாடாக அவரது உடலையும் இரத்தத்தையும் சுவைத்து எம்மை அவரில் புதுப்பிக்கவும் ஒன்றுகூடியுள்ளோம். 'உன்னைப் போல் ஓர் இறைவாக்கினனை நான் அவர்களுக்காக ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவனுடைய வாயில் வைப்பேன்' எனும் இறைவனின் அசையா வாக்குறுதி, முதல் இறைவாக்கான, இணைச்சட்ட நூலிலிருந்து தரப்படுகின்றது. புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம், 'எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழு மனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக்கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன்' என்று ஒழுக்கம் நிறைந்த வார்த்தைகளை முன்வைப்பதையும் காணலாம். மாற்கு எழுதிய நற்செய்தியிலே, இயேசுவின் அதிகாரம் நிறைந்த வார்த்தைகள் பலரின் வாழ்விலே மாற்றத்தைக் கொணர்ந்ததைக் காணலாம்.
கடவுளோடு ஒன்றித்த வாழ்விலே இறைவனின் ஆசீர் அதிகம் இருப்பது இன்றைய வாசகங்களின் வெளிப்பாடு. நாம் இறைவனோடு ஒன்றித்து வாழ்வது அனைத்துமே எமது வாழ்வின் தேர்விலும், தூய எண்ணங்கள் நிறைந்த வாழ்விலும், எமது அன்பை வெளிப்படுத்தும் செயல்களிலுமே தங்கியிருக்கின்றது. சவால்கள் வரும்போது, இடர்கள் எம்மை சூழும் போது, துன்பத்தால் நாம் வாடும்போதே, எமது நம்பிக்கை வாழ்வு எம்மில் செயற்பட ஆரம்பிக்கின்றது, எமது சுயம் தெளிவுற தொடங்குகின்றது. 'அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!' எனும் திருப்பாடலின் ஆசிரியரோடு இணைந்து, இறைவனின் அழைப்பாகவும் அவர் குரலாகவும் துளங்கும் அனைத்திலும் நாம் தெளிவுற திகலவும், ஆயனைத் தேடும் ஆடுகளாக அவர் பிள்ளைகளாக எப்பொழுதும் திகலவும் வரம்வேண்டி தொடரும் இக்கல்வாரிப் பலியில் கலந்து சிறப்பிப்போம்.
வருகைப் பல்லவி
திபா 105:47 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்; வேற்று நாடுகளினின்று எங்களை ஒன்று சேர்த்தருளும். அதனால் நாங்கள் உமது திருப்பெயரை அறிக்கையிடுவோம்; உம்மைப் புகழ்வதில் மாட்சியுறுவோம்.
திருக்குழும மன்றாட்டு
ஆண்டவரே எங்கள் இறைவா, நாங்கள் முழு மனதுடன் உம்மை வழிபட வேண்டுகின்றோம்: அவ்வாறே எல்லா மக்களையும் நேரிய உள்ளத்துடன் அன்பு செய்யவும் அருள்வீராக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு
ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20
பதிலுரைப் பாடல் திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8டி,7உ காண்க)
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்
இரண்டாம் இறைவாக்கு
கன்னிப் பெண் தூயவராக இருக்கும் வண்ணம் ஆண்டவருக்கு உரியவற்றில் அக்கறையாக இருக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 32-35
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 4: 16
அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.
நற்செய்தி இறைவாக்கு
அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எங்கள் பணிகளைக் காணிக்கையாக உமது பீடத்துக்குக் கொண்டுவருகின்றோம்; இவற்றைக் கனிவுடன் ஏற்று எங்களது மீட்பின் அருளடையாளமாக மாற்றுவீராக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி காண். திபா 30:17-18
உமது முகத்தின் ஒளி உம் அடியார் மீது ஒளிர்வதாக! உமது இரக்கத்தால் என்னை விடுவித்தருளும். ஆண்டவரே, என்னை வெட்கமுற விடாதேயும். ஏனெனில் உம்மை நோக்கிக் கூவி அழைத்தேன்.
அல்லது
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரிய து ; கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். மத் 5:3,5
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, மீட்பு அளிக்கும் கொடையால் வலுவூட்டப்பெற்ற நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்: அதனால் முடிவில்லா மீட்பின் இந்த உதவியால் உண்மையான நம்பிக்கை என்றும் வளர்ச்சியுறச் செய்வீராக. எ ங்கள்.
இறைமக்கள் மன்றாட்டு
குரு: வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம், ஏனெனில் ஆண்டவர் எமது பாதுகாப்பாக இருக்கின்றார், எமது தேவைகளில் எமக்கு செவிமெடுக்கின்றார், எமது இயலாமையில் எமக்கு துணை நிற்கின்றார். எமது விண்ணப்பங்களை அவரிடம் சமர்ப்பிப்போம்.
1. திரு அவைப் பணியாளர்களுக்காக மன்றாடுவோம்.
அன்பின் இறைவா! எமது திரு அவையிலே பணியாற்றும் அனைத்து பணியாளர்களும், திரு அவையின் மாண்புக்காக உழைக்கவும், ஒரே, மற்றும் புனித, கத்தோலிக்க திரு அவையின் வாழ்வுக்காக பணியாற்றும் வாஞ்சை கொண்டு வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மான்றாடுகின்றோம்.
2. எமது பங்கு திரு அவைக்காக மான்றாடுவோம்.
அன்பின் இறைவா! விசுவாசத்தின் விழைநிலமாகிய எமது பங்கை வழிநடத்தி அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் எமது பங்கு தந்தை, துறவற உறவுகள் மற்றும் பங்கின் மக்கள் அனைவருக்கும் தேவையான அருள் வளங்களை அளித்தருளும். என்றுமே தமது தியாகத்தாலும், ஆர்வத்தாலும், வாஞ்சையாலும் எமது பங்கிற்கு அணிசேர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. எமது நாட்டிற்காக மன்றாடுவோம்
இரக்கத்தின் இறைவா! இயற்கை அனர்த்தத்தினால் வாழ்வாதாராத்தை இழந்து தவிக்கும் மக்களும், வீதி விபத்தினால் தமது வாழ்வையே தொலைத்துவிட்டு தவிக்கும் உறவுகளும் ஆதிகரித்துக் கொண்டே இருக்கும் இந்த இக்கட்டான சூழலிலே, எமது நாட்டை உம்பாதம் ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயலைக் கொண்டவன் என்பதன் பொருள் உணர்ந்து செயற்படவும், எச்சூழலிலும் இறையன்பை விட்டு விலகிச் செல்லா வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. எமது இளைஞர் யுவதிகளுக்காக மன்றாடுவோம்
அன்பின் இறைவா! மாறிவரும் கலாசார வேட்கையினாலும், சினிமா மோகத்தினாலும், அதிநவின தொழில்நுட்ப உலகத்தின் தாக்கத்தாலும் கவரப்பட்டு பாதிப்புறும் எமது இளையோர் இயேசுவின் மீது கொண்ட அதீத அன்பையும், விசுவாசதையும் தொலைத்திடாமல், அவருக்காக இறுதிவரைக்கும் வாழும் உள்ளம் கொண்டு வாழ வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: 'அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்', எனும் திருப்பாடல் ஆசிரியரின் வலிமையின் வார்த்தைகளோடு இணைந்து, வாழ்வு எனும் கொடைக்காக நன்றி சொல்லி, ஆவர் எம்மேல் கொண்ட கருணைக்காகவும், பேரிரக்கத்திற்காகவும், பராமரிப்பிற்காகவும் நன்றி கூறுவோம். நாம் வார்த்தைகளில் எடுத்துரைத்த விண்ணப்பங்களுக்கும், எண்ணத்திலும், சிந்தனையிலும், சொல்லமுடியாமல் தவிக்கும் பல விண்ணப்பங்களுக்கும் அவர் செவிசாய்க்கவும், மனமுவந்து ஏற்றுக்கொள்ளவும் வரமருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம், ஆமென்.