Sunday, 31 December 2023

இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா - 01.01.2024

 


திருப்பலி முன்னுரை

(வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக!  அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; 

கிறிஸ்து இயேசுவில் அன்புமிக்க உறவுகளே!  இன்று வருடத்தின் இறுதி நாள். 2023ம் ஆண்டிற்கு நாம் விடைகொடுத்துவிட்டு, 2024 என்கின்ற புதிய ஆண்டிற்குள் கால்பதிக்க இருக்கின்றோம். எம்மை கடந்து சென்ற நாட்கள், இனி எம் நினைவுகளே. நிகழ்வுகள், அனுபவங்கள் அழகானவை. எம் நினைவுகளில் எம்மை தாங்கிச் செல்பவை. நாம் அடைந்த வெற்றிகள், சாதனைகள், எல்லாமே எமக்கு அணிசேர்க்கின்றன. இருப்பினும், எமது தோல்விகளும், இழப்புக்களும் பிரிவுகளும், பிறழ்வுகளும் எமக்கு புதிய பாடத்தையே கற்றுத்தருகின்றன. 2024ம் ஆண்டை பெருமகிழ்வோடு வரவேற்போம். இந்த ஆண்டு எமது புதிய அனுபவமாக இருப்பதாக. 

இன்று அன்னையாம் திரு அவை, அன்னை மரியாள் இறைவனின் தாய் எனும் பெருவிழாவைக் கொண்டாடுகின்றாள். புதிய ஆண்டை அன்னையின் பரிந்துரையிலும், பாதுகாவலிலும் ஒப்புக்கொடுத்து மன்றாட அழைக்கின்றாள். இன்று தான் இயேசுவுக்கு விருத்தசேதனம் செய்து, பெயர் சூட்டிய நாளாகவும் நற்செய்தியாளர் புனித லூக்கா எமக்கு நினை{ட்டுகின்றார். இயேசுவின் பெயரே அவரது அடையாளமாகின்றது. இப்பெயருக்கே விண்ணுலகோர் மண்ணுலகோர் அனைவரும் மண்டியிடுவர் என்று தந்தையை, இறைவனை இம்மண்ணுலகில் எண்பிக்க பிறக்கின்றார் இயேசு. 

எமது வாழ்வுக்கான அர்த்தத்தைத் தேடுவோம். எம்மையே கருவியாகக் கொண்டு எமது புதிய பயணத்திற்கான திறவுகோளை உருவாக்குவோம். ஏழைகளை, ஏழையின் பலமுகங் கொண்டோரை கண்டுகொள்வோம். அன்பினால் மாத்திரமே உலகின் தீமைகளை வெல்லமுடியும் எனும் எடுகோளை கற்றுக்கொள்வோம். எமது இந்த புதிய பயணத்திற்கு, அன்னையின் பரிந்துரை கேட்டு தொடரும் கல்வாரிப் பலியில் கலந்துகொள்வோம்.  

வருகைப் பல்லவி: வாழ்க, புனித அன்னையே, விண்ணகத்தையும் மண்ணகத்தையும் என்றும் ஆளும் அரசரைப் பெற்றெடுத்தவர் நீரே.

அல்லது

இன்று நம் மீது சுடர் ஒளி உதித்துள்ளது. ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்திருக்கின்றார். அவரது திருப்பெயரோ 'வியப்புக்கு உரியவர், இறைவன், அமைதியின் அரசர், என்றுமுள தந்தை' என அழைக்கப்படும். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது.

காண். எசா 9:1,5; லூக் 1:33

திருக்குழும மன்றாட்டு

இறைவா, புனித மரியாவின் வளமையான கன்னிமையால் மனிதக் குலத்துக்கு நிலையான மீட்பின் பரிசுகளை வழங்கினீரே. அவரது பரிந்துரையை நாங்கள் உணரவும் அவர் வழியாக வாழ்வின் ஊற்றாகிய உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளவும் நாங்கள் தகுதியுள்ளவர்களாய் இருக்க அருள்புரிவீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

முதலாம் இறைவாக்கு: 

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 6: 22-27

பதிலுரைப் பாடல் 

திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

இரண்டாம் இறைவாக்கு : 

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 4-7

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி 1: 1-2

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி இறைவாக்கு: 

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 16-21

நம்பிக்கை அறிக்கை சொல்லப்படும்

விசுவாசிகள் மன்றாட்டு

குரு: பிறந்திருக்கின்ற புதிய வருடத்திலே ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிய வேண்டி, எமது தேவைகளை அவர் பாதம் ஒப்புக்கொடுப்போம். 

1. 'நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை நீங்கள் உறுதியாக பற்றிக்கொண்டிருந்தால் அதன் வழியாக மீட்பு அடைவீர்கள'; என்று மொழிந்த இறைவா! இன்றைய உலகில் நற்செய்தி அறிவிக்க என நீர் தேர்ந்துகொண்ட உம் அடியார்களாகிய திருநிலைப் பணியாளர்களையும், பொதுநிலைப் பணியாளர்களையும், உம் கரம் தாங்கி அவர்களை ஆசீர்வதித்து, உமது சித்தப்படி அப்பணியை முழு மனதுடன் நிறைவேற்ற உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 2. நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் என்ற புனித பவுலின் உரைக்கல்லிற்கு ஒப்ப, அழைக்கப்பட்ட  நாம் அனைவரும், முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கவும், தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யவும், பொய்மை மலிந்த உலகிலே உண்மை நிலைநிற்க அதற்காக உழைக்கவும், தமது அர்ப்பணத்தால் திருஅவை வாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்புள்ள ஆண்டவரே! பிறந்திருக்கின்ற புதிய ஆண்டிலே, எமது குடும்பங்கள், உறவுகள், சொந்தங்கள், பிள்ளைகளின் வாழ்வு, மற்றும் அவர்களின் கல்வி, எதிர்கால கனவுகள், தீர்மானங்கள், பெற்றோரின் வாழ்வாதாரங்களை இறைவன் ஆசீர்வதிக்கவும், எமக்கு முன்பே இருக்கின்ற சவால்கள் போராட்டங்கள் மத்தியில் துணிவுடம் பயணிக்கவேண்டிய வலிமையைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் ஆண்டவரே! எமது நாட்டில் இடம்பெறும் மாறுபட்ட அரசியல் மாற்றங்கள், அசாதாரண சூழ்நிலைகள், மக்களின் மனநிலைகள் அமைதியை நாடித்தேடவும், நீதிக்காக நேர்மைக்காக உழைக்கும் கரங்கள் உயர்வுபெறவும், உண்மையை எடுத்துரைக்கும் வீரர்கள் வேர்களாக ஊன்றப்படவும் அருள்வேண்டுவோம். புதிய திருப்பத்தை எதிர்பார்க்கும் எம் மக்கள் நிறைமகிழ்வை அடையவும், ஒன்றுபட்டு உழைக்கவும் உமது அருளால் நிறைத்திட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5. அன்பும் வல்லமையும் நிறைந்த ஆண்டவரே! இந்த நவீன உலகிலே கிறிஸ்தவ வாழ்வை சிதைக்கும் பாலியல் வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள், கருக்கொலைகள் என நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் சீர்கேடுகளை அதிகாரத்தோடும், உரிமையோடும், தட்டிக்கேட்கவும், இதனால் பாதிப்புறும் எம் மக்களின் வாழ்வுக்கு ஒரு விடியல் கிடைத்திடவும் நீர் தேர்ந்தெடுக்கின்ற உமது மக்கள் உண்மையில் நிலைத்திடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: எங்களை எல்லாம் அன்புசெய்து வழிநடத்தும் இறைவா! உமது ஆசீர்வாதத்தால் எமக்கு நீர் தந்திருக்கின்ற இந்த புதிய ஆண்டிற்காய் நன்றி சொல்கின்றோம். எமது மனங்களை மாற்றும், புதிய மாற்றங்களை தாரும், புதிய தீர்மாங்கள் வழியாக எமது வாழ்வின் குறிக்கோளை அடைய உதவியருளும். நாம் கடந்து செல்ல இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உமது திட்டத்தின் படி நடந்தேறுவதாக. எமது விண்ணப்பங்கள் அனைத்தையும் நீர் நிறைவேற்றி உமது அருளை எமக்கு பெற்றுத் தருவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

இறைவா, நல்லவை அனைத்தையும் கனிவுடன் தொடங்கி நிறைவு காணச் செய்கின்றீர்; உம் புனித அன்னையின் பெருவிழாவில் மகிழ்ச்சி அடைந்துள்ள நாங்கள் உமது அருளின் தொடக்கத்தில் மாட்சி அடைவது போல அதன் நிறைவிலும் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி:

எபி 13:8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்.''

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு:

ஆண்டவரே, விண்ணக அருளடையாளங்களை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட நாங்கள் உம்மை வேண்டுகின்றோம்! என்றும் கன்னியான உம் திருமகனின் தாயும் திரு அவையின் அன்னையுமான மரியாவை அறிக்கையிடுவதில் மகிழ்வுறும் நாங்கள் நிலைவாழ்வை நோக்கி முன்னேறிச் செல்ல இவ்வருளடையாளங்கள் எம்மை வழிநடத்துவனவாக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Saturday, 30 December 2023

இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் - 31-12-2023


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் என் அன்புக்கினிய இறைமக்களே!

அன்னையாம் திரு அவை இன்றைய நாள் திருவழிபாட்டினூடாக இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்ப விழாவைக் கொண்டாட அழைக்கின்றாள். எமது குடும்பங்களுக்கெல்லாம் வரைவிலக்கணமாய் இருப்பது திருக்குடும்பமே. அன்பினில் இணைந்திருப்பதும், ஒன்றிப்பில் நிலைத்திருப்பதும், உள்ளத்தின் உணர்வுகளில் உறவாடுவதும், புதிய தலைமுறைக்கு சான்றாக இருப்பதுமே குடும்பத்தின் உயரிய பண்புகளும் விழுமியங்களுமாகும். தனது கருவினில் சுமக்கும் முன்பே, இயேசுவை அன்புசெய்யத் தொடங்கியவள் அன்னை மரியாள். இயேசுவின் மீது கொண்ட அன்பு, இவ்வுலகின் மீது கொண்ட அன்புக்கு சான்றாக அமைந்தது. ஆகவே திருக்குடும்பம் இறைவனின் வல்லமையாலும், ஆசீர்வாதத்தாலும் அமையப்பெற்றது. இதனால் தான் தாயும் தந்தையுமான மரியாளும் சூசையும், தங்களுக்காக வாழாது, இயேசுக் கிறிஸ்துவாகிய தங்கள் மகனுக்காகவும் அவரை இவ்வுலகில் கொணர்ந்த இறைதந்தையின் திருவுளத்திற்காகவுமே வாழ்ந்தவர்கள். இதுவே எமது குடும்பங்களின் அடித்தளமாக இருக்கவேண்டும். 

இன்று எமது குடும்பங்களுக்காக மன்றாடுவோம். பல்வேறு காரணங்களால், காயப்பட்டுபோன, அருள் இழந்துபோன, அன்பை தொலைந்துபோன, உறவுகளை பிரிந்துபோன குடும்பங்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இவைகள் இன்று மாறவேண்டும். ஒரு சமூகம் உருவாக, ஒரு புனிதன் உருவாக, ஒரு குடும்பத்தில் திருக்குடும்பத்தின் சாயல் இருக்கவேண்டும், அன்னை மரியாளினதும் புனித சூசையினதும் பரிந்துரை இருக்கவேண்டும், இயேசுவின் அன்பும், அவர் மறைபொருளைக் கொண்டாடும் வாஞ்சையும் இருக்கவேண்டும். இதற்கான இறைவரம் கேட்டு இவ்வழகான பலியிலே மன்றாடுவோம். 


வருகைப் பல்லவி

லூக் 2:16 இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள்.

  • 'உன்னதங்களிலே' சொல்லப்படும்.

திருக்குழும மன்றாட்டு :

இறைவா, எங்களுக்குத் திருக்குடும்பத்தின் சிறந்த எடுத்துக்காட்டை அளிக்கத் திருவுள மான உம்மை நாங்கள் வேண்டுகின்றோம்: குடும்பப் பண்புகளிலும் அன்பின் பிணைப்புகளிலும் நாங்கள் அதைப் பின்பற்றி, உமது இல்லத்தின் நிலையான பரிசை மகிழ்வுடன் பெறச் செய்வீராக. உம்மோடு. இவ்விழாவை ஞாயிறு அன்று கொண்டாடினால் 'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.


முதலாம் இறைவாக்கு: தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6; 21: 1-3

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: 'ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.'

அப்பொழுது ஆபிராம், 'என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப் பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்' என்றார். அதற்கு மறுமொழியாக, 'இவன் உனக்குப் பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்' என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு 'ஈசாக்கு' என்று பெயரிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல் திபா 105: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 8ய)

பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.


1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! 

அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! 

அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!

அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி


3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; 

ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! 

அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி


5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! 

அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். 

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! 

அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! - பல்லவி


8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; 

ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 

9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் 

ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

 

இரண்டாம் இறைவாக்கு : எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 8,11-12,17-19

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிட மிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். 'ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்' என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி இறைவாக்கு: லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், 'ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். 'ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,

'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை' என்றார்.

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, 'இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்' என்றார்.

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


இறைமக்கள் மன்றாட்டு

குரு: அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன் எனும் ஆபிரகாமுக்கு இறைவன் கொடுத்த உறுதியான வாக்கு எமது குடும்பங்களுக்கு ஒளிவிளக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இறைவனின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டவர்களாக, எமது தேவைகள் விண்ணப்பங்களை  ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. அன்புள்ள ஆண்டவரே! நீர் எமக்கு அளித்த உன்னத கொடையாகிய திரு அவையை கறையின்றி பாதுகாக்கவும், தவறான பேதகங்கள், போதனைகளிலிருந்து அதன் ஏகம், பரிசுத்தம், கத்தோலிக்கம் மாசுபடாமல் காக்கவென உழைக்கும் திரு அவை பணியாளர்கள் அனைவரையும் நீரே வழிநடத்திக் காத்தருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. அன்புள்ள ஆண்டவரே! இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடி எமக்காக செபித்து நிறையாசீர்வேண்டி நின்று, எமது குடும்பங்களுக்காக உழைக்கும் எமது மறை மாநில ஆயர்,  பங்குதந்தை, மேலும் குருக்கள் துறவிகள் அனைவரையும் உமது அன்பின் கரங்களால் வழிநடத்தி ஆசீர்வதிக்கவும், ஒவ்வொரு ஆன்மாவின் இடேற்றத்திற்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் வஞ்சையை அளித்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்புள்ள ஆண்டவரே! இங்கு கூடியிருக்கும் எம் அனைவரையும் உமது பாதம் ஒப்புக்கொடுத்து செபிக்கின்றோம். பண்புகள் நிறைந்த குடும்பங்கள் உருவாகவும், பாசத்தை விதைக்கும் உறவுகள் உருவாகவும், அன்பினால் அடித்தளமாகும் அழகான சமூகம் உருவாகவும், அனைவரையும் அரவணைக்கும் மனங்கள் பெருகவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. அன்புள்ள ஆண்டவரே! எம்மை சுற்றியுள்ள துன்பப்படுவோர், வேதனைப்படுவோர், கைவிடப்பட்டோர், புறம்தள்ளப்பட்டோர், அடிமை வாழ்வில் அகப்பட்டோர் என பலவீனமாக்கப்பாட்டுள்ள பலர் வாழ்வுக்காக மன்றாடுகின்றோம். இவர்களின் இயலாமையில், அறியாமையில், பலவீனத்தில் ஆண்டவரே நீரே இவர்களோடு இருந்து பயணிக்கவும், இந்நிலைக்குரிய காரணிகளை அறிந்து துணிவோடும், தெளிவோடும் பயணிக்கவேண்டிய ஆற்றலையும் வல்லமையையும் அளித்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5.அன்புள்ள ஆண்டவரே! உம்மை உதரத்திலே பெற்று இதயத்தில் சுமந்து, கரங்களிலே தாங்கிச் சென்ற தாய் அன்னை மரியாவைப் போல நாமும் திருக்குடும்பமாக,  எமது திரு அவைக்காக, எமது சமூகத்திற்காக, எமது குடும்பங்களுக்காக வாஞ்சையோடு உழைக்கும் உள்ளம்கொண்டு வாழும் வரத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: எம்மை எல்லாம் வாழ்வித்து வழிநடத்தும் அன்பின் ஆண்டவரே! நீர் எமக்கு அமைத்துத் தந்த அழகிய குடும்பங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இக்குடும்பத்தில் இணைதிருக்கும் எமது தாய், தந்தை, பிள்ளைகள் உறவுகள் மற்ரும் சொந்தங்கள் அனைவரையும் இன்றைய பலியிலே ஒப்புக்கொடுத்து மன்றாடுகின்றோம். எம்மை ஆசீர்வதித்து, அரவணைத்து, வழிநடத்திக் காத்தருளும். ஒரே குடும்ப உணர்வோடு நாம் ஒப்புக்கொடுக்கும் எமது தேவைகளுக்கு செவிசாய்த்து, நிறைவாழ்வுக்கான ஆசீரைப் பெற்றுத்தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசுக்கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். 


காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, மகிழ்வின் பலிப்பொருளை நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுத்து உம்மைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் கடவுளின் கன்னித் தாய், புனித யோசேப்பு ஆகியோருடைய பரிந்துரையின் உதவியால் எம் குடும்பங்களை உம் அருளிலும் அமைதியிலும் உறுதியாய் நிலைநிறுத்துவீராக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி :

பாரூ 3:38 நம் கடவுள் மண்ணுலகில் தோன்றினார்; மனிதர் நடுவே குடிகொள் ''

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

கனிவுமிக்க தந்தையே, விண்ணக அருளடையாளங்களால் புதுப்பிக்கப்பெற்ற இவர்கள் திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டை இடையறாது பின்பற்றச் செய்தருளும் அதனால் இவர்கள் இவ்வுலக இன்னல்களுக்குப் பிறகு அதன் நிலையான தோழமையைப் பெறுவார்களாக. எங்கள்.

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Sunday, 24 December 2023

கிறிஸ்து பிறப்பு திருவிழா - 25 - 12 - 2023



திருவிழிப்புத் திருப்பலி

முதலாம் இறைவாக்கு 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 1-5 - ஆண்டவர் உங்களில் பேருவகை கொள்கிறார்.

இரண்டாம் இறைவாக்கு  

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 16-17,21-25 - தாவீதின் மகனான கிறிஸ்து பற்றிப் பவுலின் சான்று.

நற்செய்தி இறைவாக்கு 

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-25 : தாவீதின் மகனான இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணை.

இரவில் திருப்பலி

முதலாம் இறைவாக்கு 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4,6-7 : ஓர் ஆண் மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்.

இரண்டாம் இறைவாக்கு  

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 11-14 : மனிதர் அனைவருக்கும் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.

நற்செய்தி இறைவாக்கு

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-14 : இன்று உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்.

விடியற்காலைத் திருப்பலி

முதலாம் இறைவாக்கு 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 62: 11-12 : இதோ, உன் மீட்பர் வருகின்றார்.

இரண்டாம் இறைவாக்கு  

திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 4-7 : கடவுள் தம் இரக்கத்தை முன்னிட்டு நம்மை மீட்டார்.

நற்செய்தி இறைவாக்கு

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 15-20 : இடையர் மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள்.

பகலில் திருப்பலி

முதலாம் இறைவாக்கு 

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 7-10 : மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.

இரண்டாம் இறைவாக்கு  

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-6 : கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார்.

நற்செய்தி இறைவாக்கு

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-18: வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். முன்னுரை 
(வருகைப்படலின் நிறைவில் முன்னுரை வாசிக்கப்படும். பின் திருப்பலி ஆரம்பமாகும்)


'ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார். பிற இனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்' 


திருப்பலி முன்னுரை

இறை இயேசுவில் என் அன்புக்கினிய இறைமக்களே! 

விண்ணிலே தோன்றியதோர் விடிவெள்ளி, அற்புத விடிவெள்ளி, மண்ணிலே இறைவனின் அருள் பெற மகிமையின் அடையாளமாய் தோன்றியதே இந்த விடிவெள்ளி, இதோ இன்று தோன்றுகின்றது. ஒரு புதிய சரித்திரம் படைக்க இவ்வுலகில் இறைவன் தோன்றிவிட்டார். படைத்தவர், தன்னை படைப்புக்குள்ளே கொண்டுவந்துவிட்டார், இறைவன் இன்று மனிதனாக பிறந்துவிட்டார். கபிரியேல் தூதர் சொன்ன இறைவனின் வார்த்தை இன்று நிறைவேறுகின்றது. அன்னையின் 'ஆகட்டும்' எனும் வார்த்தையால் மனிதர் அனைவருக்கும் வாழ்வு கிடைத்துவிட்டது, பாவம் உடைக்கப்பட்டுவிட்டது. விண்ணவர் தூதர் அணிகளோடு சேர்ந்து நாமும், 'உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை உண்டாகுக, பூவுலகில் நல் மனம் உடையோருக்கு அமைதியும் ஆகுக' என்று புகழ்ச்சி ஆர்ப்பரிப்புடன் பாடுகின்றோம். ஏனெனில் கிறிஸ்து இயேசு எனும் மெசியா தாவின் ஊரில் இன்று பிறந்துள்ளார். இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே. 

இயேசுவின் பிறப்பில் இருந்து அவரது ஒவ்வொரு அசைவும் முன்குறிக்கப்பட்டவை, வரலாற்றில் எழுதப்பட்டவை. அவர் தடம் பதித்துச் சென்றவைகள் வரலாற்றையே விழித்தெழச் செய்தவை. இவரே எமக்கு வழிகாட்டும் விளக்கு, அர்த்தம் தரும் ஆன்ம மருந்து. இவர் பிறப்பில் இருந்து நாம் வாழ்வைக் கற்றுக்கொள்ளவேண்டும். எளிமை வாழ்வில் இறைவன் இருக்கிறார், ஏழைகளில் இறைவன் தெரிகின்றார், உண்மையே இயேசுவின் மறு பெயர். இன்று உலகம் எடுத்துச் சொல்லும் நற்செய்தியை எம் உள்ளங்களில் தருகின்றார். தொலைந்தவர்கள், துவண்டுபோனவர்கள், வறுமையில் இருப்பவர்கள், உறவை இழந்தவர்கள், நொந்துபோனவர்கள், நிலைமாறி போனவர்கள் இவர்கள் அனைவருக்கும் நம்பிக்கையை தரும் விதையாகின்றார் எம் பாலன் இயேசு.

பாலன் இயேசுவுக்காய் வாழுவோம், பாவம் தொலைத்து அவர் பாதம் வழி செல்வோம். நற்செய்தியை அறிவிப்போம், நல்ல கிறிஸ்தவராக மாறுவோம். இதற்கான வரம் கேட்டு தொடரும் இப்புனிதபலியிலே கலந்துகொள்வோம். 


  • 'தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்', ('... மனிதர் ஆனார்' எனச் சொல்லும் போது அனைவரும் முழங்காலிடவும்).
  • எல்லாரும் எழுந்து நிற்க, மக்களோடு சேர்ந்து அருள்பணியாளர் நம்பிக்கை அறிக்கையைப் பாடுவார் அல்லது சொல்வார் (காண். எண் 68). 'தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்' எனும் வார்த்தைகளைப் பாடும்போது ஃ சொல்லும்போது அனைவரும் தாழ்ந்து பணிந்து வணங்குவர். ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு, ஆண்டவருடைய பிறப்பு ஆகிய பெருவிழாக்களில் அனைவரும் முழங்காலிடுவர். (உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினை: 137) 

விசுவாசிகள் மன்றாட்டு

குரு: காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது, என்ற எசாயாவின் குரல் எம்மையும் நம்பிக்கையின் வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றது. இயேசுவின் பிறப்பு எமக்கு ஒரு புதிய வாழ்வின் அத்தியாயத்தை எழுதவேண்டும். பரிசுத்த வாழ்வுக்கான ஏணிப்படியாக அமையவேண்டும். இவரே எமது மீட்பர், இவரே எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து மீட்க பிறந்துள்ளார் எனும் நம்பிக்கையில் எமது தேவைகளை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. ஆண்டவரே, உமது மகன் இயேசுக்கிறிஸ்துவை இவ்வுலகு அறிந்து அன்புசெய்ய சித்தம் கொண்டீரே, உமக்கு நன்றி சொல்கின்றோம். அத்திருமகனை உலகறிய நற்செய்தியாக எடுத்தியம்பும் திரு அவைப் பணியாளர்களை கரம்பிடித்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. ஆண்டவரே! உமது திரு மகன் இயேசு வழியாக இவ்வுலகு உம்மை யார் என்று கண்டுகொள்ளச் செய்தீரே உமக்கு நன்றிசொல்கின்றோம். ஒன்றிக்கும் ஒரே திரு அவையாக நாம் பயணிக்கும் எமது வாழ்விலும் இயேசு பாலனின் பிறப்பு செய்தி நம்பிக்கையையும், மகிழ்வையும், பிறரோடு உள்ள கூட்டுறவையும் வளர்ப்பதாக. இவ்வுலகம் தரமுடியாத வாழ்வின் விழுமியங்கள், பண்புகள் இயேசுவின் பிறப்பின் கனிகளாக அமையவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. அன்பின் ஆண்டவரே! யுத்தத்தினால், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் இவ்வுலகின் மக்கள் அனைவருக்கும் இயேசு பாலனின் பிறப்புச் செய்தி, வெறுமையில் நிறைவைத் தருவதாக. உயர்ந்து போகும் கோபுரங்களை கட்டவல்ல, மாறாக மனித உள்ளத்தை உயர்த்திக் காட்டவும்,  உயரவே நிற்கும் போதைக் கலாசாரத்தை தாங்கவல்ல, மாறாக அன்பின் வெகுமதியை உணர்த்திக்கொள்ளவும், உண்மையை உடைக்கும் வன்முறைகளை அல்ல மாறாக பாசத்தை எண்பிக்கும் உறைவுகளை தளைத்திடச் செய்யவும் இயேசுவின் பிறப்பு வழிசெய்யவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக இன்றைய கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவை அமையச் செய்த தந்தையே இறைவா! ஒரு குழந்தையின் பிறப்பு குடும்பத்திற்கு அடையாளமாய் இருப்பது போல, இயேசுவின் பிறப்பு எமது குடும்பங்களுக்கு அடையாளமாய் இருப்பதாக. அக்குழந்தையின் மகிழ்விலே எம்மிலுள்ள பிரிவினைகள் களைந்து, பிறழ்வுகள் தகர்த்தெறிந்து, கோபமும் கவலையும் விட்டொழிந்து, கண்ணீரும் ஏக்கமும் துடைத்து, புதிய உறவுகள் அமைக்கவும், பாலகனின் ஆசி நிறைவாய் தங்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு. எம்மை அதிகம் அன்பு செய்யும் தந்தையே!  இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், எமது கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும், நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியலாக எம்மை தேடிவந்தீரே.  எமக்கும் எமது வாழ்வுக்கும் நிறைவைத் தர வந்தீரே. நம்மைத் தேடி வந்த விடியல் நீர் தான் இயேசுவே. எமது குறை நீக்க எம்மை தேடிவந்தீரே. உம்மிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுக்கின்றோம். நாம் எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்ப்பத்திலும், உம் அன்பை விட்டு பிரியாமல் இருக்கவும், எமது இயலாமையிலும், பலவீனங்களிலும் எமக்கு தோல்கொடுத்து உதவியருளும். நாம் மனமுவந்து கேட்கும் இந்த விண்ணப்பங்கள் உமதண்டை வந்து சேர்வதாக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

Saturday, 23 December 2023

திருவருகைக் காலம் - 4ஆம் வாரம் - ஞாயிறு - 24 - 12 - 2023


திருப்பலி முன்னுரை

இறையன்பில் பிரியமுள்ள என் இறைமக்களே! இன்றைய புதிய நாளிலே, புதிய எண்ணங்களோடும், புதிய சிந்தனைகளோடும், புதிய உறவுகளாய் இறை அருள் வேண்டி நிற்கும் என் உறவுகளே! இன்று திருவருகைக் காலம் நான்காவது வாரத்திற்குள்ளே நுழைகின்றோம். 

முதலாவது இறைவார்த்தையிலே, 'நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்' என்று ஆண்டவர் தாவீதுக்கு கொடுத்த வார்த்தைகள் நம்பிக்கையை அளிக்கின்றது. கடவுளின் அரியணை எப்படி இருக்கும் என்பதற்கு இவ்வார்த்தைகள் தெளிவைக் கொடுக்கின்றன. இந்த நம்பிக்கை தான் லூக்கா நற்செய்தியாளர் பிறக்க இருக்கும் இறைமகன் ஒரு மெசியாவாக, இம்மானுவேலனாக, அதாவது கடவுள் நம்மோடு இருக்கிறார் எனும் மறை பொருளை அழகான முறையில் வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் வாழ்வும் பணியும் எப்படி அமையப்போகின்றது என்பதனையும் அவர் யார் என்பதன் அடயாளத்தையும் எமக்கு எண்பிக்கின்றார். நற்செய்தியாகிய கிறிஸ்துவைக் கேட்டு நம்பிக்கை கொள்ள புனித பவுலும் எம்மை அழைக்கின்றார்.

கடவுள் வரலாற்று நிகழ்வுகளில் மட்டும் இடம்பெற்றவர் அல்ல. மாறாக, தனது மகனை இவ்வுலகிற்கு அனுப்பும் அளவிற்கு இவ்வுலகின் மேல் அன்பு கொண்டவர். ஆதிப்பெற்றொரின் பாவத்தினால் இவ்வுலகை அழிக்க சித்தம் கொள்ளவில்லை. மாறாக கிறிஸ்துவினூடாக தன்னை அறியவும், அன்பு செய்யவும் திட்டம் கொண்டார். இன்றைய வாசகங்கள் இவற்றை நிறுபிக்கவே எமக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவேஎ, கிறிஸ்துவின் பிறப்பை எதிர்கொள்ள, முழுமையாக அனுபவிக்க, நம்பிக்கையோடு செயற்பட, எம்மை தொடரும் இப்பலியோடு இணைத்துக்கொள்வோம். 


முதல் இறைவாக்கு

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8டி-12, 14-16 : தாவீதின் அரசு ஆண்டவர் முன் என்றென்றும் உறுதியாக இருக்கும். 

இரண்டாம் இறைவாக்கு

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 25-27 : ஊழி காலமாக மறைபொருளாக இருந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நற்செய்தி இறைவாக்கு

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38 :இதோ! கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்


விசுவாசிகள் மன்றாட்டு

குரு: இம்மானுவேலனாக பிறக்க இருக்கும் எமது இயேசு, எம்மை மீட்கவும், எம்மை பாவ அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கவும் பேரொளியாக துளங்கும் அவரிடம் எமது விண்ணப்பங்களை ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம். 

1. அன்பின் ஆண்டவரே! உமது திருமகனின் பிறப்பிற்காக உமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை ஆயத்தம் செய்யவென உழைக்கும் ஒவ்வொரு திருநிலைப்பணியாளர்களும், இயேசுவின் பிறப்பை அறிவிக்கும் அன்பு சீடர்களாக மாறிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

2. இறைவா! உமது வருகைக்காக எம்மை தகுந்த முறையில் ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் நாம், உம்மை அறிந்து அறிவிக்கவும், நீர் எம்மை மீட்கவே வந்துள்ளீர் என்று ஏற்றுக்கொண்டு வாழவும் பிறரை வாழ்விக்கவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

3. இறைவா! இவ்வுலகின் ஏழைகள் வறியவர்கள், துன்பப்படுவோர், அநாதைகள், வைத்தியசாலையில், சிறச்சாலையில் தவிப்போர் அனைவருக்கும் உமது பிறப்பின் செய்தி நம்பிக்கையையும், மன மகிழ்வையும், கொண்டுவர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. ஆண்டவரே! நீர் படைத்த இந்த அழகான உலகிலே, வரட்சியும், வறுமையும் கொடுமைகளும், துன்பங்களும், கொலைகளும், வன்முறைகளும் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும், நீர் பிறக்கும் போது இவற்றினால் துயருறும் மக்களை கைவிட்டுவிடாமல் உமது பரிவிரக்கத்தினாலும், அன்பாலும் அவர்களை மீட்டருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

5. ஆண்டவரே! ஏமது பங்கு மக்களின் வாழிவிலே நீர் கொண்டுவரும் அமைதியும், மகிழ்ச்சியும், சமாதானமும் நிறைவாய் தங்கிடவும், தாங்கள் நடந்துவந்த பாதையில்; ஏற்பட்ட தவறுகளை மன்னித்து, புதிய உலகம் படைக்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: அன்பின் இறைவா! ஆவலுடன் எதிர்பார்க்கும் உமது பறப்பிற்காக எம்மை தயார்ப்படுத்தியருளும். இருளின் மத்தியில் ஒளியாகவும், தடைகளின் மத்தியில் பாதையாகவும், துயரங்கள் மத்தியில் ஆறுதலாகவும் இருக்கச் செய்தருளும். உம்மை கண்டு வாழ்வதில் மகிழ்ச்சிகொண்டு பிறரையும் உமது கருவியாக மாற்ரியருளும். நாம் ஒப்புக்கொடுக்கும் மன்றாட்டுக்கள் உமதண்டை வந்து சேர்வதாக. என்றேன்றும் வாழ்ந்து ஆட்சிசெய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

Fr. S. James Suren OMI,
+94 77 232 3266,

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...