தவக்காலம் நான்காம் ஞாயிறு வாரம்
திருப்பலி முன்னுரை
நிறை அருளின் காலமாம் தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாரத்தில் பயணிக்கும் என் அன்பின் இறை சமூகமே! இயேசுவின் கல்வாரிப் பலிக்கு உங்களை அழைத்து நிற்கின்றேன். தம் மக்களை பெயர்சொல்லி அழைக்கும் இறைவன் அவர்களை தொடர்ந்தும் தமது பிள்ளைகளுக்கு உரிய உரிமையோடு வழிநடத்துகின்றார். மீண்டும் ஒரு புதிய நாளுக்குள்ளும், புதிய வாரத்திற்குள்ளும் நுழையும் எமக்கு இது புதிய அனுபவங்களைத் தருவதாக.
நாம் அனைவரும் அழைக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். ஆகவே, எமது வாழ்வு அனைத்தும் இறை விழுமியங்களோடு பயணிக்கவும், தூய ஆவி அருளும் கொடைகளையும், வரங்களையும் பெற்று நிறை அருளால் செழித்திடும் மக்களாக மாற இன்றைய இறைவார்த்தைகள் அழைப்பு விடுக்கின்றன.
நெறி தவறிப்போன ஊதாரி மகனின் உவமை இன்றைய நற்செய்தியில் கொடுக்கப்படுகின்றது. தனது சுய விருப்பத்தால், தன்னிட்சையாக மேற்கொண்ட தீர்மானத்தால், விளைவுகளை எதிர்வுகூறாத பாவங்களால் தன்னை இழந்திடும் மனநிலையை இவ் இளைய மகன் பெற்றுக்கொள்கின்றான். இது மிகவும் ஆபத்தானதாக இருந்தாலும், மனந்திரும்பும் எவரையும் இறைவன் மன்னிக்கக் கூடியவர் என்பதை இவ்வுவமை எமக்குத் தெளிவுபடுத்துகின்றது.
நாம் பாவிகள் தான், இருப்பினும், நாம் மனம் மாற எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் புனிதமானது. நாம் தொலைந்துபோனாலும் அன்பை தொலைத்திடாத தந்தையின் உள்ளமே அழகானது. எனவே, இத்தவக்காலத்தில் இளைய மகனின் மனம் மாறும் உள்ளத்தைக் கேட்போம். அதேவேளை அன்பைப் பொழியும் தந்தையின் உள்ளத்தையும் கேட்போம். இக்கல்வாரிப் பலியில் பங்குபெறும் நாம் இதற்கான அருளைக் கேட்டு மன்றாடுவோம். இவ்வுலகிலே நாட்டை ஆள்பவர்கள் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் நிறைவாக கொடுக்கும் உள்ளத்தை பெற இறைவரம் கேட்டு மன்றாடுவோம்.
வருகைப் பல்லவி - காண். எசா 36:10-11
எருசலேமே அகமகிழ்; அவள் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒன்று கூடுங் கள். துயருற்ற நீங்கள் மகிழ்ந்து, அக்களியுங்கள்; அதனால் ஆர்ப்பரியுங் கள்; நீங்கள் நிறைவாக ஆறுதல் பெற்று மகிழ்வடையுங் கள்.
"உன்னதங்களிலே" சொல்லப்படுவதில்லை.
திருக்குழும மன்றாட்டு :
இறைவா, மனிதரான உம் வாக்கின் வழியாக மனிதக் குலத்தின் ஒப்புரவை வியத்தகு முறையில் செயல்படுத்துகின்றீர்; அதனால் ஆர்வமிக்க இறைப்பற்றாலும் உயிர்த் துடிப்புள்ள நம்பிக்கையாலும் வரவிருக்கும் பெருவிழாவுக்குக் கிறிஸ்தவ மக்கள் விரைந்திட ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.
முதல் இறைவாக்கு
வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர்.
யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a,10-12
அந்நாள்களில்
ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்” என்றார்.
இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர்.
நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது. இஸ்ரயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 34: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி
3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்;
அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4 துணை வேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்;
அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்;
எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி
5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி
இரண்டாம் இறைவாக்கு
கிறிஸ்துவின் வாயிலாக, கடவுள் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 17-21
சகோதரர் சகோதரிகளே,
ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.
எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம் லூக் 15: 18
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்’ என்று அவரிடம் சொல்வேன்.
நற்செய்தி இறைவாக்கு
உன் தம்பி இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான்.
† லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 1-3, 11-32
அக்காலத்தில்
வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே” என்று முணுமுணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
“ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ‘அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்’ என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.
பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்’ என்று சொல்லிக் கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.
தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்றார்.
தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்’ என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!’ என்றார்.
அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்றார்.”
"நம்பிக்கை அறிக்கை" சொல்லப்படும்.
நம்பிக்கையாளர் மன்றாட்டு
குரு: 'பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.' இயேசுவின் சிலுவையில் உணரப்பட்ட வாழ்வுக்கான அனைத்து புண்ணியங்களும் எமது வாழ்வில் நிறைவேறுகின்றன. இயேசுவில் நாம் முழு நம்பிக்கைகொண்டு அவரது சிலுவைவழி நடந்துசென்று எமது உள்ளார்ந்த உணர்வுகளை எமது தேவைகளாக ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
1. கருணையின் இறைவா! எமது பங்கில் பணியாற்றும் பங்குத்தந்தை, மற்றும் அனைத்து குருக்கள் துறவிகள் தங்களது சாட்சிய வாழ்வாலும், தியாகத்தாலும் உமக்கு என்றும் சான்றுபகர அருள்புரியவேண்டுமென்று ...
அல்லது
கருணையின் இறைவா! இவ்வுலகின் தீமைகளை இனங்கண்டு, அதற்குச் சரி நிகராக போராடும் வலிமையை எமக்கு கற்றுத்தரவும், அருள் வாழ்வுக்கான பாதையை காட்ட எம்மை திரு அருட்கொடைகளால் நிறைக்கும் திருப்பணியாளர்களை ஆசீர்வதியும். இத்தவக்காலத்தில் அவர்களின் பணி நிறைவுபெறவும், முயற்சிகள் கைகூடவும் இதனால் இறைமக்கள் நாம் முழுப்பயன் பெறவும் அருள்புரிய வேண்டுமென்று, ...
2. கருணையின் இறைவா! நாம் திருவருட் கொடைகளால் வளம்பெற்ற மக்களாகவும், பாவங்களை களைந்து அருளில் திகழும் மக்களாகவும் எமை மற்றியருளும். எமது சுய இன்பங்களுக்கு ஆசைப்பட்டு, இவ்வுலகின் இருளுக்குள் மூழ்கடிக்கப்படாமல் இருக்கவும், எமது அகச்செயல் வழியாக நாம் தேடும் தூய வாழ்வை எமக்கு அளித்திட அருள்புரிய வேண்டுமென்று ...
அல்லது
கருணையின் இறைவா! இத்தவக்காலம் எமக்கு அருளின் காலமாக அமைவதாக. எமது பழைய பாவ வாழ்வில் இருந்து விடுபட்டு, புதிய வாழ்வின் தேடலுக்குள் நுழைய அருள்தாரும். எமது நல்லொழுக்கங்களாலும், நற்பண்புகளாலும், நற்செயல்களாலும் நாம் சேர்த்துவைத்திருக்கும் அருள் வழங்களால் நாம் மேலும் மேலும் சிறந்திட எம்மைத் தூண்டியருள வேண்டுமென்று, ...
3. கருணையின் இறைவா! எமது பங்கு சமுகத்தில், அதன் வளர்ச்சிக்காக உழைக்கும் அனைத்து நல் உள்ளங்களும் இறைவனால் ஆசீர்வதிக்கப்படவும், தொடர்ந்தும் தமது பணியில் முழு நிறைவுகாண அருள்புரிய வேண்டுமென்று ...
4. கருணையின் இறைவா! எமது பங்கின் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரும் நல் ஒழுக்க சீலர்களாக திகழவேண்டுமென்றும், அவர்களுக்காக கொடுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களையும் முழுமையாக பின்பற்றும் ஆற்றலை அளித்திடவேண்டுமென்று ...
குரு: எல்லோரின் உள்ளங்களை அறியும் இறைவா, எமது நீண்டதூர பயணத்திலே நாம் கடந்துசெல்லும் சவல்களை தாங்கிச் செல்ல வரம்தாரும், போராட்டங்களில் வெற்றிகாண அருள்தாரும், எதிரிகளை இனங்கண்டு அவர்களுக்காக செபிக்கும் மனம் தாரும். நாம் இவ்வுலகில் வெளிக்கொணரும் அன்பும், பாசமும், இரக்கமும், மன்னிப்பும் நீர் எமக்கு தரும் கொடைகளும், வரங்களுமே. எமது தேவைகள் இவற்றை தாங்கிச் செல்வதாக. எங்கள ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, பணிவுடன் உம்மை வேண்டி, நிலையான உதவி அளிக்கும் காணிக்கைகளை பேரின்பத்துடன் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; அதனால் நாங்கள் இவற்றை உண்மையிலேயே போற்றவும் உலகின் மீட்புக்காக உமக்கு உகந்தவாறு ஒப்புக்கொடுக்கவும் செய்வீராக. எங்கள்.
தொடக்கவுரை :பிறவியிலேயே பார்வையற்றவர்
மு. மொ. : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
பதில் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
மு. மொ. : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
பதில் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
மு. மொ: : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
பதில் : அது தகுதியும் நீதியும் ஆனதே.
ஆண்டவரே, தூயவரான தந்தையே,
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா,
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக,
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்;
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
கிறிஸ்து தாம் மனிதர் ஆனதன் மறைநிகழ்வு வழியாக
இருளில் நடக்கும் மனிதக் குலத்தை நம்பிக்கையின் ஒளிக்குக் கொண்டுவந்தார்.
பழைய பாவ நிலைக்கு உட்பட்டவர்களாகப் பிறந்தவர்களைப்
புதுப் பிறப்பின் கழுவுதலால் உரிமை மக்களாக ஏற்றுக்கொண்டார்.
ஆகவே விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும்
உம்மை ஆராதித்து வணங்கிப் புதியதொரு பண் பாடுகின்றன;
வானதூதர் அணிகள் அனைத்தோடும் நாங்கள் சேர்ந்து
முடிவின்றிப் பறைசாற்றிச் சொல்வதாவது: தூயவர்.
திருவிருந்துப் பல்லவி : பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது: காண். யோவா 9:11,38
ஆண்டவர் என் கண்களில் பூசினார்; நான் சென்றேன், கழுவினேன், பார்த்தேன்; கடவுளை நம்பினேன். ஊதாரி மைந்தனைப் பற்றிய நற்செய்தி வாசிக்கப்படும்போது:
லூக் 15:32
மகனே, நீ மகிழ்ந்து இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்.
வேறொரு நற்செய்தி வாசிக்கப்படும்போது - காண். திபா 121:3-4
எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக் கட்டப்பட்ட நக" ஆண்டவரே, உமது திருப்பெயரைப் போற்ற இறைக்குலத்தார் ஆங்கே ஏறிச் செல்வார்கள்.
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
இறைவா, இவ்வுலகுக்கு வரும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்ற நீர் எங்கள் இதயங்களை உமது அருளின் சுடரால் ஒளிர்வித்தருள உம்மை வேண்டுகின்றோம்: அதனால் உமது மாண்புக்குத் தகுதியானதையும் விருப்பமானதையும் என்றும் நினைவில் கொண்டு உம்மை நேர்மையாக அன்பு செய்ய வலிமை பெறுவோமாக. எங்கள்.
மக்கள்மீது மன்றாட்டு
ஆண்டவரே, தாழ்மையுடன் உம்மை நோக்கி மன்றாடுவோரைக் காத்து வலுவற்றோரைத் தாங்கிக்கொள்ளும்; சாவின் நிழலில் நடப்போரை உமது நிலையான ஒளியால் உயிர் பெறச் செய்தருளும்: தீமை அனைத்திலிருந்தும் உமது இரக்கத்தால் அவர்களை விடுவித்து நிறைவான நன்மைக்கு அவர்கள் வந்து சேர அருள்புரிவீராக. எங்கள்.
அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா, அமதி