ஆண்டவருடைய திருமுழுக்கு
முன்னுரை
கிறிஸ்து இயேசுவில் பிரியமானவர்களே! இன்று கிறிஸ்துவினுடைய திருமுழுக்கு விழாவை கொண்டாடுகின்றோம். கிறிஸ்துவின் பிறப்பு காலத்திலே கடவுள் தம்மை தமது திருமகன் வழியாக வெளிப்படுத்தியதை கொண்டாடினோம். அது நிறைவுற்று இன்றிலிருந்து பொதுக்காலத்தை ஆரம்பிக்கின்றோம். கிறிஸ்து தம்மை புற இனத்தவர்களுக்கு வெளிப்படுத்தியதை திருக்காட்சி பெருவிழாவிலும், இன்று, யோர்தான் நதியில் இடம்பெற்ற திருமுழுக்கின் மூலம், மனம் திரும்பும் பாவிகளுக்கு தம்மை வெளிப்படுத்தியதையும் காண்கின்றோம். இவரே அன்பார்ந்த மகன் இவரில் நான் பூரிப்படைகிறேன் என்று தந்தையாகிய இறைவன் தம் திருமகனின் ஊடாக கொண்டிருந்த மீட்பு திட்டத்தை வெளிப்படுத்தியதையும் காண்கின்றோம். இது நான்கு நற்செய்திகளால் விவரிக்கப்பட்ட ஒரு நிகழ்வாகும். இதுவே கிறிஸ்துவின் பகிரங்க பணியின் ஆரம்பமாகும்.
ஆகவே, திருமுழுக்கின் மூலம் தொடங்கப்பட்ட எமது வாழ்வு அதன் உன்னத கொடைகளை சம்பாதித்து கிறிஸ்துவின் பிள்ளைகளாகி, அவரது அழியா முத்திரையை கொண்டு வாழ்வை அவருக்கு ஏற்ப செயற்படுத்த வரம் கேட்ப்போம்.
வருகைப் பல்லவி
ஆண்டவர் திருமுழுக்குப் பெற்றவுடனே வானம் திறக்கப்பட்டது, புறா வடிவில் ஆவியார் அவர் மீது தங்கினார்; என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்று தந்தையின் குரல் ஒலித்தது. மத் 3:16-17
'உன்னதங்களிலே' சொல்லப்படும்.
திருக்குழும மன்றாட்டு :
என்றென்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்துவின் மீது தூய ஆவி இறங்கி வர, அவரை உம் அன்பார்ந்த மைந்தர் எனச் சிறந்த முறையில் அறிக்கையிட்டீரே. தண்ணீராலும் தூய ஆவியாலும் புதுப் பிறப்பு அடைந்துள்ள மக்களை உமக்குச் சொந்தமாக்கிக்கொண்ட நீர் அவர்கள் உமக்கு ஏற்புடையவர்களாக என்றும் நிலைத்திருக்க அருள்வீராக. உம்மோடு.
அல்லது
இறைவா, உம் ஒரே திருமகன் எங்களது மனித உடலின் தன்மையில் தோன்றினார்; இவ்வாறு தோற்றத்தில் எங்களைப் போன்று இருக்கும் அவரை நாங்கள் கண்டுணர்ந்து அவர் வழியாக அகத்தில் மாற்றம் பெறத் தகுதி அடைந்திட எங்களுக்கு அருள்புரிவீராக. உம்மோடு
முதலாம் இறைவாக்கு
ஏசாயா 42:1-4, 6-7
இரண்டாம் இறைவாக்கு
திருத்தூதர் பணிகள் 10:34-38
நற்செய்தி இறைவாக்கு
மத்தேயு 3:13-17
'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, உம் அன்புத் திருமகனுடைய வெளிப்பாட்டைக் கொண்டாடும் நாங்கள் கொண்டுவந்துள்ள இக்காணிக்கைகளை ஏற்றருளும்; அவர் மனமிரங்கி உலகின் பாவங்களைக் கழுவத் திருவுளம் கொண்டதால் உம் நம்பிக்கையாளரின் காணிக்கை அவரது பலியாக மாறுவதாக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அவர் வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
திருவிருந்துப் பல்லவி :
இதோ! நான் கண்டேன்; சான்று பகர்ந்தேன்; ஏனெனில் இவரே இறைமகன் என்று யோவான் இவரைப் பற்றிக் கூறினார். யோவா 1:32, 34
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :
ஆண்டவரே, புனிதக் கொடைகளால் நிறைவு பெற்ற நாங்கள் உமது கனிவைப் பணிவுடன் வேண்டுகின்றோம்: அதனால் உம் ஒரே திருமகனுக்கு நம்பிக்கையோடு செவிமடுக்கும் நாங்கள் உம்முடைய பிள்ளைகளாக உண்மையில் அழைக்கப்பட்டு அதற்கு ஏற்ப வாழ்வோமாக. எங்கள்.