Sunday, 15 December 2019

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு – 15.12.2019

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு



(இத்திருப்பலியில் ஊதா அல்லது இளம் சிகப்பு நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.)

வருகைப் பல்லவி

ஆண்டவரில் என்றும் மகிழுங்கள் மீண்டும் கூறுகிறேன், அகமகிழுங்கள் ஏனெனில், ஆண்டவர் அண்மையில் உள்ளார். பிலி 4:4-5

'உன்னதங்களிலே' சொல்லப்படுவதில்லை.

முன்னுரை

இறை இயேசுவில் பிரியமானவர்களே! நாம் அனைவரும் திருவருகை காலம் மூன்றாம் வாரத்திற்குள் கால் பதிக்கின்றோம். எமக்காக பிறக்க இருக்கும் மீட்பரை எதிர்பார்த்து காத்திருக்கும் எமக்கு இன்றைய வாசகங்கள் அகமகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகின்றது. இதயங்களில் பிறக்கும் கிறிஸ்து இடர்களை, இன்னல்களை எதிர்நோக்கும் எம்மவரில் அமைதியையும், அன்பையும் கொண்டு வருகிறார். அமைதியோடு காத்திருப்போம். இன்றைய ஞாயிறு 'மகிழ்வின் ஞாயிறு' ஆகும். ஏனெனில் இன்றைய வருகப்பல்லவி 'ஆண்டவரில் என்றும் மகிழுங்கள் மீண்டும் கூறுகிறேன், அகமகிழுங்கள் ஏனெனில், ஆண்டவர் அண்மையில் உள்ளார்' என்று அழைப்பு விடுகின்றது. மூன்றாவது மெழுகுவர்த்தியை ஏற்றும் போதும், இளம் சிகப்பு நிற திருப்பலிக்கான ஆடையை அணியும் போதும் கிறிஸ்து மிக அண்மையில் உள்ளார் என்பதை அடையாளப்படுத்துகின்றது.

விசுவாச வாழ்வுக்கு எதிரான நெருக்கடிகளில் இருந்து எம்மை காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளவும், வரவிருக்கும் கிறிஸ்துவுக்காய் எம்மை மாற்றிக்கொள்ளவும், நாம் கிறிஸ்துவை அனுபவித்து வாழ்வதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவும், இன்றைய திருப்பலியின் ஊடாக வரம் கேட்ப்போம்.

திருக்குழும மன்றாட்டு

இறைவா, இயேசுவின் பிறப்புப் பெருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உம் மக்களை நீர் கண்ணோக்குகின்றீர் அதனால் இத்தகைய மாபெரும் மீட்பின் மகிழ்வுக்கு நாங்கள் வந்து சேரவும் இதைப் பெருமகிழ்வோடும் மேலான வேண்டலோடும் என்றுமே கொண்டாடவும் ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.

முதலாம் இறைவாக்கு :ஏசாயா 35: 1-6ய

இரண்டாம் இறைவாக்கு :யாக்கோப்பு 5:7-10

நற்செய்தி இறைவாக்கு :மத்தேயு 11: 2-11

'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.


விசுவாசிகள் மன்றாட்டு

குரு: 'என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்' என்று கூறிய ஆண்டவரிடம் எமது விண்ணப்பங்களை எடுத்துக் கூறி மன்றாடுவோம். பிறக்க இருக்கும் எம் மீட்பர் எமது வாழ்வில் நம்பிக்கையை தர வேண்டும் என்றும் மன்றாடுவோம். 

1. எமது துன்புறும் திருஅவைக்காக மன்றாடுவோம். பல நாடுகளிலே நற்செய்தியை அறிவிக்கவென கருவிகளாக தெரிந்துகொள்ளப்படட குருக்கள் துறவிகள் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு, வாழ்வுக்காக ஏங்கி தவிக்கும் எல்லா மக்களையும் அரவணைக்கும் அன்பு கருவிகளாகவும், பாதுகாக்கும் கரங்களாகவும், பராமரிக்கும் உண்மை கிறிஸ்தவர்களாகவும் திகழ உமது வரங்களை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அணைத்து குடும்பங்களும், நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து உறவுகளும், எமது நாட்டின் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படவும், தமது வாழ்வில் எதிர்பார்க்கின்ற நிம்மதியும், ஏங்கி தவிக்கின்ற மகிழ்ச்சியும் கிடைக்கவும், இதற்காக உழைத்திடும் கரங்கள் பெருகிடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வரவிருக்கும் மெசியா எமது குடும்பங்களில் மனமகிழ்வையும், சுதந்திரத்தோடும், குடும்ப பொறுப்போடும் செயற்பட இவ்வுலகின் சவால்களுக்கு எதிராக போராடும் வாழ்வின் அனுபவங்களையும் கற்றுத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

4. கடவுள் வடிவில் விளங்கியவர் எளிமையாக, ஏழ்மையாக பிறக்க எம்மை வளப்படுத்தவும், நாமும் ஆடம்பரங்கள் இல்லாத, அதிக செலவீனங்கள் இல்லாத, சத்தங்கள் இல்லாத, சாதிகள் இல்லாத கிறிஸ்து பிறப்பை கொண்டாட எம்மை உணர்வு பூர்வமாக ஆயத்தப்படுத்த இறைவன் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குரு: அன்பின் இறைவா! உலகிலே, உடைந்த உள்ளங்களை தேடி, நொறுங்கிய உள்ளங்களை தேடி, நீதியை மறந்த சமுதாயங்களை தேடி, பாசம் இழந்த உறவுகளை தேடி, மனமாற காத்திருக்கும் பாவியை தேடி நீர் வருவதனால் நிச்சயம் எமது விண்ணப்பங்கள், உள்ளத்தின் உணர்வுகள், உமது வருகைக்காக காத்திருக்கும் எமது எதிர்பார்ப்புக்கள் பயனளிக்கும் என்று நம்புகின்றோம். இவற்றை நீர் ஏற்று நிறைவேற்ற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம் நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.

திருவிருந்துப் பல்லவி

உள்ளத்தில் உறுதியற்றோரே! திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள் இதோ! நம் கடவுள் வருவார் நம்மை விடுவிப்பார் எனக் கூறுங்கள். எசா 35:4

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு

ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள்.

Sunday, 1 December 2019

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 01.12.2019

 திருவருகைக்காலம் முதல் ஞாயிறு 



திருப்பலிக்கான திருஉடையின் நிறம் - ஊதா


முன்னுரை

இறையன்பில் வாழ இறைசந்நிதானம் குழுமியிருக்கும் இறை உறவுகளே! இன்று நாம் புதிய வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கின்றோம். புதிய சிந்தனைகள், புதிய எதிர்பார்ப்புக்கள், புதிய உணர்வுகளோடு பயணிக்க இருக்கின்றோம். இறைமகன் இயேசுவின் வருகையை எதிர்பார்ர்த்து காத்திருக்கும் எம்மை தகுந்த முறையிலே வரவேற்க எம்மை ஆயத்தம் செய்கின்றோம். கிறிஸ்துவின் மறை உண்மைகளை நினைவில் கொண்டு அதை கொண்டாடவும் அவரை எதிர்கொள்ளவும் எம்மை ஆயத்தம் செய்யும் ஓர் உன்னத காலமாகும். இத்திருவழிபாட்டின் முதலாவது வாரத்தை ஆரம்பிக்கின்ற போது அது 'காத்திருப்பு'எனும் கருப்பொருளில் சிந்திக்க அழைக்கின்றது. இஸ்ராயேல் மக்கள் எதிர்பார்த்த மெசியா, மீட்பின் இறைவனாக பிறந்து, மனுக்குலத்தை தனது இறப்பினாலும், உயிர்ப்பினாலும் மீட்டதையும் திருஅவையின் எதிர்பார்ப்பாகிய கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் இத்திருவருகை காலத்தின் அடி நாதமாகும். மேலும் திருவருகை என்பது எதிர்பார்ப்பை வாழ்வதற்கான ஒரு பயணமாகும். இந்த முதலாவது ஞாயிறு வழிபாட்டின் அழைப்பு காலத்திலும் வரலாற்றிலும் வரும் கிறிஸ்துவை நோக்கி நடப்பது கிறிஸ்தவரின் முதல் மற்றும் மிக முக்கியமான பணி என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 


வருகைப் பல்லவி

காண். திபா 24:1-3 என் இறைவா, உம்மை நோக்கி என் ஆன்மாவை எழுப்பினேன். உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுறேன்; என் பகைவர் என்னை ஏளனம் செய்ய விடாதேயும். ஏனெனில், உம்மஎதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார்.


'உன்னதங்களிலே' சொல்லப்படுவதில்லை.


திருக்குழும மன்றாட்டு :

எல்லாம் வல்ல இறைவா, உம் நம்பிக்கையாளருக்கு மன உறுதியை அளித்தருளும்; அதனால் வரவிருக்கும் உம் கிறிஸ்துவை அவர்கள் நீதிச் செயல்களுடன் எதிர்கொள்ளவும் அவரது வலப் பக்கத்தில் சேர்க்கப்பட்டு விண்ணக அரசைப் பெற்றுக்கொள்ளவும் தகுதி பெறுவார்களாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.


முதலாம் இறைவாக்கு: எசாயா 2: 1-5

பதிலுரைப்பாடல் 122: அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் 

இரண்டாம் இறைவாக்கு: உரோமையர் 13: 11-14

நற்செய்தி இறைவாக்கு: மத்தேயு: 24: 37-44

'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.

விசுவாசிகள் மன்றாட்டு

குரு: அன்பான இறை உறவுகளே! விழிப்போடு காத்திருந்து இறைவனின் வருகையை மகிழ்வுடன் கொண்டாட ஆயத்தமாகும் நாம் இறைவனிடம் அவரின் ஆசீரை கேட்டு மன்றாடுவோம்.

எமது தாய் திருஅவைக்காக மன்றாடுவோம். சவால்கள் மத்தியில் தளைத்திடாமல், பொய்மைகள் மத்தியில் உண்மையை போதிக்கவும், அநீதிகள் மத்தியில் சமத்துவம் பேணவும் உழைக்கும் கரங்களை கருவிகளாக்கிட நீர் தொடர்ந்து எமது திருஅவை பணியாளர்களை வழி நடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா உமது அழைப்பை ஆழ உணர்ந்து செயற்படும் ஒவ்வொருவரையும் உறுதியான விசுவாச வாழ்விலே நிலைத்திடவும், உமக்காக காத்திருக்கும் அனைவரையும் உமது பாதைக்கு கொண்டுவரவும் அருள்புரிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உமது வருகையால் தவித்து காத்திருக்கும் எமது இளைஞர்கள் தமது சூழலில் காணப்படும் அனைத்து போரட்டங்களுக்கும் முகங்கொடுக்கவும், அதிலே வெற்றிகொள்ள இறை ஞானத்தை பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை  மன்றாடுகின்றோம். 

விசுவாச வெளிச்சத்தில் நிறைந்த உமது வார்த்தைகள் தாழ்ச்சியையும், அன்பையும் எமக்கு கற்றுத்தரவும், இந்த உலக மக்களின் கூக்குரலை இதயத்தின் குரலோடு செவிமெடுக்கவும், பிறக்க இருக்கும் எம் ஆண்டவர், மெசியா என்று அறிக்கையிடவும் எம் அனைவரையும் ஆயத்தப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

குரு: ஆண்டவரே! உமது பிறப்பின் மூலம் நீர் இவ்வுலகிற்கு  வருவதை அறிந்து எமது வாழ்வை சீர்தூக்கி பார்ப்போமாக. உம்மில் கொண்ட ஆழமான விசுவாசத்தில் எமது விளக்குகளை அணையாது காக்கவும், துணிவோடும், தெளிவோடும், மனவலிமையோடும் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உம்மை எதிர்பார்த்து காத்திருப்போமாக. எங்கள் ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். 

காணிக்கைமீது மன்றாட்டு

ஆண்டவரே, நீர் எங்களுக்கு அளித்துள்ள கொடைகளிலிருந்து நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இக்காணிக்கைகளை ஏற்றருள உம்மை வேண்டுகின்றோம்: நாங்கள் இங்கு இறைப்பற்றுடன் கொண்டாட நீர் எங்களுக்குக் கொடுத்துள்ளவை உமது நிலையான மீட்பின் பரிசாக அமைவனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

திருவிருந்துப் பல்லவி :

திபா 84:13 ஆண்டவர் இரக்கம் அருள்வார்; நமது நிலமும் தனது பலனைத் தரும்.

திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு :

ஆண்டவரே, நிலையற்றவற்றின் நடுவில் நாங்கள் வாழ்கின்றோம்; எனவே நாங்கள் பங்கேற்கும் மறைநிகழ்வுகள் விண்ணகத்துக்கு உரியவற்றை அன்பு செய்யவும் நிலைத்து நிற்பவை மீது பற்றுக் கொள்ளவும் எங்களுக்குப் பயன் அளிப்பனவாக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்தந்தை ச. ஜேம்ஸ் சுரேந்திரராஜா அமதி 

வழிபடுவோம்

பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம் 24/08/2025

 பொதுக்காலம் இருபத்து ஒறாம் ஞாயிறு வாரம்  திருப்பலி முன்னுரை இறை இயேசுவில் பிரியமுள்ள அன்பு உள்ளங்களே! இன்றைய நாளின் புதிய உணர்வுகளோடும் எண்...