திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
(இத்திருப்பலியில் ஊதா அல்லது இளம் சிகப்பு நிறத் திருவுடை பயன்படுத்தப்படும்.)
வருகைப் பல்லவி
ஆண்டவரில் என்றும் மகிழுங்கள் மீண்டும் கூறுகிறேன், அகமகிழுங்கள் ஏனெனில், ஆண்டவர் அண்மையில் உள்ளார். பிலி 4:4-5
'உன்னதங்களிலே' சொல்லப்படுவதில்லை.
முன்னுரை
இறை இயேசுவில் பிரியமானவர்களே! நாம் அனைவரும் திருவருகை காலம் மூன்றாம் வாரத்திற்குள் கால் பதிக்கின்றோம். எமக்காக பிறக்க இருக்கும் மீட்பரை எதிர்பார்த்து காத்திருக்கும் எமக்கு இன்றைய வாசகங்கள் அகமகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் தருகின்றது. இதயங்களில் பிறக்கும் கிறிஸ்து இடர்களை, இன்னல்களை எதிர்நோக்கும் எம்மவரில் அமைதியையும், அன்பையும் கொண்டு வருகிறார். அமைதியோடு காத்திருப்போம். இன்றைய ஞாயிறு 'மகிழ்வின் ஞாயிறு' ஆகும். ஏனெனில் இன்றைய வருகப்பல்லவி 'ஆண்டவரில் என்றும் மகிழுங்கள் மீண்டும் கூறுகிறேன், அகமகிழுங்கள் ஏனெனில், ஆண்டவர் அண்மையில் உள்ளார்' என்று அழைப்பு விடுகின்றது. மூன்றாவது மெழுகுவர்த்தியை ஏற்றும் போதும், இளம் சிகப்பு நிற திருப்பலிக்கான ஆடையை அணியும் போதும் கிறிஸ்து மிக அண்மையில் உள்ளார் என்பதை அடையாளப்படுத்துகின்றது.
விசுவாச வாழ்வுக்கு எதிரான நெருக்கடிகளில் இருந்து எம்மை காத்துக்கொள்ள கற்றுக்கொள்ளவும், வரவிருக்கும் கிறிஸ்துவுக்காய் எம்மை மாற்றிக்கொள்ளவும், நாம் கிறிஸ்துவை அனுபவித்து வாழ்வதை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவும், இன்றைய திருப்பலியின் ஊடாக வரம் கேட்ப்போம்.
திருக்குழும மன்றாட்டு
இறைவா, இயேசுவின் பிறப்புப் பெருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உம் மக்களை நீர் கண்ணோக்குகின்றீர் அதனால் இத்தகைய மாபெரும் மீட்பின் மகிழ்வுக்கு நாங்கள் வந்து சேரவும் இதைப் பெருமகிழ்வோடும் மேலான வேண்டலோடும் என்றுமே கொண்டாடவும் ஆற்றல் பெற அருள்புரிவீராக. உம்மோடு.
முதலாம் இறைவாக்கு :ஏசாயா 35: 1-6ய
இரண்டாம் இறைவாக்கு :யாக்கோப்பு 5:7-10
நற்செய்தி இறைவாக்கு :மத்தேயு 11: 2-11
'நம்பிக்கை அறிக்கை' சொல்லப்படும்.
விசுவாசிகள் மன்றாட்டு
குரு: 'என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்' என்று கூறிய ஆண்டவரிடம் எமது விண்ணப்பங்களை எடுத்துக் கூறி மன்றாடுவோம். பிறக்க இருக்கும் எம் மீட்பர் எமது வாழ்வில் நம்பிக்கையை தர வேண்டும் என்றும் மன்றாடுவோம்.
1. எமது துன்புறும் திருஅவைக்காக மன்றாடுவோம். பல நாடுகளிலே நற்செய்தியை அறிவிக்கவென கருவிகளாக தெரிந்துகொள்ளப்படட குருக்கள் துறவிகள் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு, வாழ்வுக்காக ஏங்கி தவிக்கும் எல்லா மக்களையும் அரவணைக்கும் அன்பு கருவிகளாகவும், பாதுகாக்கும் கரங்களாகவும், பராமரிக்கும் உண்மை கிறிஸ்தவர்களாகவும் திகழ உமது வரங்களை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எமது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அணைத்து குடும்பங்களும், நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து உறவுகளும், எமது நாட்டின் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படவும், தமது வாழ்வில் எதிர்பார்க்கின்ற நிம்மதியும், ஏங்கி தவிக்கின்ற மகிழ்ச்சியும் கிடைக்கவும், இதற்காக உழைத்திடும் கரங்கள் பெருகிடவும் வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வரவிருக்கும் மெசியா எமது குடும்பங்களில் மனமகிழ்வையும், சுதந்திரத்தோடும், குடும்ப பொறுப்போடும் செயற்பட இவ்வுலகின் சவால்களுக்கு எதிராக போராடும் வாழ்வின் அனுபவங்களையும் கற்றுத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. கடவுள் வடிவில் விளங்கியவர் எளிமையாக, ஏழ்மையாக பிறக்க எம்மை வளப்படுத்தவும், நாமும் ஆடம்பரங்கள் இல்லாத, அதிக செலவீனங்கள் இல்லாத, சத்தங்கள் இல்லாத, சாதிகள் இல்லாத கிறிஸ்து பிறப்பை கொண்டாட எம்மை உணர்வு பூர்வமாக ஆயத்தப்படுத்த இறைவன் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
குரு: அன்பின் இறைவா! உலகிலே, உடைந்த உள்ளங்களை தேடி, நொறுங்கிய உள்ளங்களை தேடி, நீதியை மறந்த சமுதாயங்களை தேடி, பாசம் இழந்த உறவுகளை தேடி, மனமாற காத்திருக்கும் பாவியை தேடி நீர் வருவதனால் நிச்சயம் எமது விண்ணப்பங்கள், உள்ளத்தின் உணர்வுகள், உமது வருகைக்காக காத்திருக்கும் எமது எதிர்பார்ப்புக்கள் பயனளிக்கும் என்று நம்புகின்றோம். இவற்றை நீர் ஏற்று நிறைவேற்ற வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
காணிக்கைமீது மன்றாட்டு
ஆண்டவரே, எங்கள் இறைப்பற்றின் பலிப்பொருளை இடைவிடாது உமக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கின்றோம் நீர் நிறுவிய தூய மறைநிகழ்வுகளை இக்காணிக்கை நிறைவேற்றி, உமது மீட்பு எங்களில் ஆற்றலுடன் செயல்படச் செய்வதாக. எங்கள்.
திருவிருந்துப் பல்லவி
உள்ளத்தில் உறுதியற்றோரே! திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள் இதோ! நம் கடவுள் வருவார் நம்மை விடுவிப்பார் எனக் கூறுங்கள். எசா 35:4
திருவிருந்துக்குப்பின் மன்றாட்டு
ஆண்டவரே, உமது கனிவைக் கெஞ்சிக் கேட்கின்றோம்: அதனால் எங்களைக் குற்றங்களிலிருந்து விடுவித்த உம் அருள்கொடைகள் வரவிருக்கும் விழாவுக்கு எங்களைத் தயாரிப்பனவாக. எங்கள்.